தார்மீக மதிப்புகளையும், அற விழுமியங்களையும் படைப்பாளிகள் துாக்கிப்பிடித்த காலங்கள் முடிவுற்று, இருத்தலியல் துயரங்களும் கூட மெல்ல மெல்லக் கலையில் காலாவதியாகிக் கொண்டுவரும் நிலையில் மானுட மனதின் பரிணாம வளர்ச்சியையும் அதன் வேகவிகிதங்களையும் கணக்கிலெடுத்துக் கொண்டு ’ஜன்னல் மனம்’ என்ற தன் முதல் சிறுகதைத் தொகுப்பில் கதைகளை நிகழ்த்தியிருக்கிறார் தீபாஸ்ரீதரன்.
யுகத்தொடர்ச்சி கொண்ட மனதின் பரிணாமப் பாய்ச்சலையும் அதன் உணர்வுத் தருணங்களையும் மிகுந்த கலைநேர்த்தியுடன் கவனப்படுத்தியிருப்பதாலேயே இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் தனித்தன்மை பெறுகின்றன. மானுட மனங்களின் விடுதலையுணர்வை உள்ளீடாகக் கொண்டுள்ள இந்தக் கதைகள், குறியீட்டு ரீதியான புறச்சூழல்களையும் கனவுப்பாங்கான உளநிலைகளையும் இயல்பாகக் கோரிப் பெறுகின்றன.
புதிய சாத்தியங்களையும் மீட்சியையும் வேண்டிநிற்கும் மானுட உயிர்களின் துடிப்பை மிக மென்மையாகக் கடத்துகிறது இதன் சிறப்பான மொழிநடை. பரிணாமவளர்ச்சியின் நிதானத்தைப் போலவே கதாபாத்திர நிலைமாற்றங்களும் எந்தவித அதிரடிப்போ ஓங்காரமோ இன்றி அமைதியாக நிகழ்ந்தேறுகின்றன. ஒவ்வொரு கதையும் உத்தி, வடிவம், கூறுமுறை போன்றவற்றில் தனித்தனித் திசைவழியைக் கொண்டபோதும், கவித்துவமான மொழியும் ஆற்றோழுக்கான நடையும் அனைத்துக் கதைகளையும் அபாரமான அனுபவங்களாக மாற்றுகின்றன.
‘குறுக்குத்தெருவும் குறுந்தாடிக்காரனும்’ இந்தத் தொகுப்பின் முதல் கதை. ஒரு சேரிப்பகுதியில் சுதந்திரமாக வாழும் தவமணி என்ற பெண் தன்னுடைய வறுமையைப் பொருட்படுத்தாமல் சக உயிர்களை வாரிஅணைத்துக் கொள்கிறாள். அவளுடைய ஆண் நண்பனுடனான மகிழ்வான தருணங்களும் விலாசமான புரிதல்களும் மிகுந்த அகவிரிவுகொண்டவை. கோபம் ஏமாற்றம் கருணை பரிவு நம்பிக்கை என்று சகல உணர்வுநிலைகளிலும் பயணிக்கும் இந்தக் கதை, பற்பல உதிரிமனிதர்களை அன்பெனும் காந்தப்புலத்தால் ஒற்றிணைத்து மனிதத்தை மாபெரும் மெய்ப்பொருளாய் மாற்றுகிறது.
‘குங்குமப்பூத்தோட்டம்’ என்ற கதை மங்கா என்ற மையக்கதாபாத்திரத்துடன் நரேன் நிவேதிதா என்ற இரண்டு கதாபாத்திரங்கள் உரையாடத்துவங்குவதில் ஆரம்பிக்கிறது. துருவமுரண்களால் முன்நகரும் உடையாடலில் கணவனை இழந்த நிறைமாத கர்ப்பிணியான மங்கா என்ற வெள்ளந்திப்பெண்ணின் ஆளுமையும் துயரம் நிறைந்த அவளுடைய சூழலும் நம் மனதுக்குள் நிறுவப்படுகின்றன. வாழ்வின் வலிகளைத் துாக்கிச்சுமந்து திரியாமல் அவற்றை அனுபவத் துணையாகக் கைபிடித்து அழைத்துச் செல்கிறாள் மங்கா. சிறகுகள் உதிர்ந்த பறவை ஒன்று வானத்தை நிதானமாக அளந்து கொண்டிருப்பதைப் போன்ற மங்காவின் மனப்பாங்கு நரேனுக்குள் காதலைக் கிளர்த்துகிறது. ‘அவள் தெற்றுப்பல்லில் அவன் ஒட்டிக் கொள்கிறான்’. மங்கா வரையும் குழந்தைகள் ஓவியம் கதையின் இறுதியில் பொருள்படுகிறது. சின்னஞ்சிறு சதைப்பிண்டத்தின் குருதிவாசம் நாசியைத் துளைத்து, சிதைந்த தன்னுடலின் பாகமொன்றைத் தானே கண்டலறும்படியான திடுக்கிட வைக்கும் சம்பவத்தில் கதை உச்சம் பெறுகிறது. அடுத்து நரேனுக்கு குங்குமப்பூவை மங்கா கையளிக்கும் இடத்திலிருந்து மீண்டும் வேறொரு கதை துவங்குகிறது. மானுட ஆதாரஉணர்வுகளையும் அவர்தம் பாடுகளையும் ஆழ்ந்த கண்ணோட்டத்துடன் அணுகி அவற்றை மிகுந்த உயிர்வலியுடனும் உள்ளமைதியுடனும் வெளிப்படுத்தி முடிகிறது கதை.
‘அம்மண(ன)ம்’ அமரிக்கையாக எழுதப்பட்ட மாய யதார்த்தச் சிறுகதை. புறவுலகின் அசைவுகளைப் படிமங்களாக மாற்றும் மாயச் சித்திரங்கள் கதை நெடுகிலும் செறிவான அர்த்தங்களை உருவாக்கிக்கொண்டே செல்கின்றன. இந்தக் கதையில் குறிப்பிடப்படும் ‘அவன்’ ஒற்றைப் பார்வையில் வேரூன்றியவன். சமூகத்தின் மீதான புகார்களைச் சுமந்து திரிபவன். மனிதம் நீர்த்துவிட்டதாய் உணர்பவன். ‘தான்’ என்ற சுயத்தைத் தொலைத்துவிட்டு உருமாறி விலகிநிற்கும் மனித மனதின் மெய்நிகர் குறியீடான இவன் குறிப்பிட்ட நிலைக்கு மேல் எங்கும் ஒளிந்து கொள்ள முடியாமல் தப்பித்தலை நோக்கித் தீவிரமாக நகர்கிறான்.
‘நான்கு சுவர்கள்’ கணவனால் அழுத்திவைக்கப்பட்ட ஒரு பெண்ணின் அகவிடுதலையைப் பேசுகிறது. கணவன் இறந்து விட்டாலும் கூட அவளுடைய மகன் மூலமாகத் தொடர்கிறது அவளுக்கான புறக்கணிப்பின் வாதை. இசையில் உறைந்த அந்தப் பெண்ணின் உணர்வுகள் மீண்டும் இசையாலேயே எழுச்சியுடன் மீட்டெடுக்கப்படுகிறது.
‘விரகநீட்சி’, உயர் வாழ்நிலையில் இருக்கும் இரு பெண்களின் தன்பால் ஈர்ப்பைப் பற்றிய கதை. செஃபோரா என்ற ஃபிரஞ்சுப் பெண்ணுக்கும் தாரிகா என்ற தமிழ்ப் பெண்ணுக்குமான காதலையும் பாலுணர்வுத் தடுமாற்றங்களையும் பேசுகிறது இந்தக் கதை. திரண்டெழும் காமமும் உடலறியும் பரவசமும் ஸ்பரிசத்தின் மென்மையும் நுகர்வின் திளைப்பும் தன்பால் ஈர்ப்பை ஒழுக்கம்சார் நிலையிலிருந்து உணர்வுசார் நிலைக்கு நகர்த்திச் செல்கின்றன. ஃபிளெமிங்கோ பறவை மற்றும் மதுபானி ஓவியங்களும், சிவப்பு இதயம் வரையப்பட்ட வெண்ணிறக் கோப்பையும் செம்பு டம்ளரும், பியானோவும் வீணையும், ஃபிரெஞ்ச் பாடலும் ‘என்ன செய்தாய் வேங்குழலே’வும் லசான்யாவும், க்ரெம் ப்ரூலேவும், ஹாட் சாக்லெட்டும் ஒயிட் மஸ்க்கும் என்று இருவருடைய கலாச்சார, இரசனையுலகையும் முயங்கவைக்கிறது கவித்துவம் மிக்க இதன் படைப்புமொழி. நுரைத்துத் ததும்பும் தன் காதலை செஃபோரா தாரிகாவின் மீது வழியவிடுகிறாள். தன்னுடைய பாலுணர்வை அறுதியிட்டுக் கொள்வதில் தாரிகாவுக்கு இருக்கும் மனத்தடுமாற்றமும் தயக்கமும் அவளுக்குப் பாரமாகின்றன. தாரிகாவின் இயல்புக்கும் இயல்பற்ற தன்மைக்குமான போராட்டத்தில் செஃபேராவின் அன்புநாளங்கள் கட்டியிறுக்கப்படுகின்றன. அவளைவிட்டு தாரிகா விலகுகிறாள். இருவரும் சென்றடைய முடியாத பெருவெளியின் முடிவின்மையை உணர்ந்து கொண்டவர்களைப்போல் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு அமைதியடைகிறார்கள். Blue is the Warmest Colour போன்ற ஒரு அற்புதமான திரைப்படமாக உருவெடுக்கக் கூடிய எல்லா சாத்தியங்களையும் உள்ளடக்கிய கதை ‘விரகநீட்சி’. திரைக்கதைச் சவால்களையும் தீவிரமான உணர்வெழுச்சிகளையும் கொண்ட இந்தக் கதையை தன்பால் ஈர்ப்பையும் பாலுணர்வு வேறுபாடுகளையும் ஆழ்ந்துணர்ந்தோர் யாரேனும் திரைப்படமாக இயக்கநேரிடின் ஒரு மிகச் சிறந்த சினிமாவாக மாறும் சாத்தியம் இதற்குண்டு.
‘மலைகள் கேள்விகேட்பதில்லை’ அன்றாட லொகீகச் சட்டகத்துக்குள் வாழ்வை நகர்த்தும் எளிய மனிதர்களின் மீது கருணையுடன் பூச்சொரியும் இந்தக் கதை, அறிவுஜீவித்தனத்தின் மைய ஆட்டத்தில் இருந்து விலக்கப்பட்டு, விளிம்பை நோக்கி நகர்ந்துவிட்ட சாதாரண மனிதனின் குற்றவுணர்ச்சியைத் துடைத்தெறிந்து, மிகப் பரிவுடன் அவனை மையத்தில் கொண்டுவந்து நிறுத்துகிறது.
‘டின்டர் முத்தம்’ தன்னுடைய சுயத்தை அவதானிக்கும் கதை, நாயகிக்கும் அவளுடைய ஆண் நண்பனுக்குமான ஒத்திசையாத்தன்மை அவளுடைய அகங்காரத்தை மெல்ல மேலெழுப்புகிறது. மேலெழுந்த தன் அகங்காரத்தின் பேருருவை அவனுக்குக் காட்டும் பொருட்டு அவளுடைய சுயம் மீண்டும் அவனுடன் இணையமுனைகிறது.
‘ஸ்டிரின்ங்’ ஒரு வழமையான துப்பறியும் கதைதான் என்றாலும் யூகித்தறிய முடியாதபடிக்கு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட கதைக்கட்டுமானமும் அதில் நிகழும் கொலைகளுக்கான காரணமான மானுட உளவியலும் இதை ஒரு நல்ல கதையாக மாறுகிறது.
‘நாட்டைக்குறிச்சி’, ‘பசியும் கிறுக்கர்களும்’ மற்றும் ‘நங்கூரம்’ போன்றவற்றில் கருத்தோதுதலும், படை்ப்பூக்கமற்ற கதைமாந்தர்களின் வார்ப்பும், இந்தக் கதைகளை முழுமையடையாமல் செய்து விடுகின்றன. படைப்பிலக்கியத்தின் மூலத்தை உணர்ந்தவர்களுக்குத் தெரியும், அனைத்துப் படைப்புகளுமே தோதனைமுயற்சிகள் தான் என்று. புதுமைப்பித்தனின் சில சிறுகதைகளையே கூட க.நா.சு போன்றவர்கள் அந்த இடத்தில்தான் நிறுத்திப்பார்த்திருக்கிறார்கள். குறிப்பாகச் சிறுகதை வடிவம் முழுமுற்றாக நிறைவெய்திவிட்டது என்று எப்போதுமே அறுதியிட்டுக் கூறமுடியாது. ஆனால் படைப்பாளி தன் சோதனைமுயற்சிகளில் எவ்வளவு பரப்பளவை விஸ்தரிக்க முற்படுகிறார் எவ்வளவு ஆழங்களுக்குள் பாய்ந்திறங்க விளைகிறார் என்பவைதான் அவருக்கான சரியான மதிப்பீட்டுக் கருவிகளாகும். அந்தவகையில் இம்முயற்சிகள் அனைத்தும் பொருட்படுத்தத்தக்கவையே.
படபடக்கும் தீச்சுடரைத் தன் கரம் கொண்டு அணையாமல் காத்து பேரொளியாகப் படரவைக்கும் உன்னதமான கதாபாத்திரங்களும் அழுத்தம் ஒலி ஒளி சுவை மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளை மனதினுள் உணரச்செய்யும் நுண்சித்தரிப்புகளும் தேர்ந்த மொழி ஆளுமையும் கற்பனையை விரித்தெடுக்கும் வாசக இடைவெளியும் மையம் சிதையாமல் உச்சத்தை நோக்கிக் கதையைச் செலுத்தும் திறனும் படிமங்களாலும் குறியீடுகளாலும் உருவாக்கும் அபாரமான கலைத்தருணங்களும் ஒன்றைக் காட்டிவிட்டு வேரொன்றை உணர்த்தும் ஜாலவித்தையும் தீபாஸ்ரீதரனுக்கு இயல்பாகக் கைகூடிவருகிறது.
இயற்கையின் ஒரு பகுதியான அறிவும் உணர்வும் இணைந்த மானுட மனதின் இயங்கியலை சார்புநிலையோ பால்பேதமோ உயர்வுதாழ்வோ இன்றி பேரார்வத்துடன் கதைகளில் கையாண்டிருக்கிறார் தீபாஸ்ரீதரன். ‘இயற்கையில் பலவையும் அதனின் மதிப்பறியாமலேயே பரவிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் அறிந்து நுகர்வதற்கே பரிணாமம் உயிர்களை அழைத்துச் செல்கின்றதோ என்னவோ’ என்ற அவருடைய வரிகளின் உட்பொருளே இவர் கதைக்களுக்கான மூலக்கூறுகளாக இருப்பதை ‘ஜன்னல் மனம்’ சிறுகதைத் தொகுப்பு நமக்கு உணர்த்துகிறது.
*