சிரிக்க வைப்பது பெருங்கலை. மீவருகையற்ற ஒற்றைகள் என்பதால் நகைச்சுவைக்கு என்றைக்குமே மகாமதிப்பு தொடர்கிறது.நீர்ப்பூக்களைப் போல தோன்றல் காலத்தே மின்னி மறைந்துவிடுகிற படங்களுக்கு மத்தியில் காலங்கடந்து வெகு சில படங்கள் மாத்திரமே தனிக்கும்.இப்படியான காவியத் தன்மைக்குக் காரணம் அவரவர் மனசு. பிராயத்தினூடான பயணத்தின் இடையில் அந்தப் படத்தை ஒட்டிய சொந்த நினைவுகள் ஒருசிலவற்றின் புனிதத் தன்மையும் கூட காரணமாகலாம்.

 

நடிகன் முன் காலத்தின் சில படங்களை நினைவுபடுத்தினாலும் கூட கதையின் உலர்ந்த தன்மை எளிதில் யூகித்து விடக் கூடிய சம்பவங்கள் இவற்றையும் தாண்டி வென்றதற்குக் காரணம் திரைக்கதையின் தெளிவான நகர்தல்.மனோரமா இந்தப் படத்தின் இணை நாயகி என்றால் கவுண்டமணி இதன் கூடுதல் நாயகன் எனலாம்.சின்னிஜெயந்த் பாண்டு வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோரும் குறிப்பிடத் தக்க அளவில் வசன வழி நிலைத்தார்கள்.வெண்ணிற ஆடை மூர்த்தி ஐலண்ட் எஸ்டேட் என்பதை உச்சரிக்கத் தெரியாத இசை ஆசிரியர்.அதன் விளைவான குழப்பங்களால் அவருக்குப் பதிலாக சத்யராஜ் இடம்மாறி வயோதிக வேடம் தரித்து அந்தப் பொய்யை பலநாள் திருடர் கவுண்டமணி தெரிந்து கொண்டு தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி இளைஞனாக குஷ்பூவைக் காதலித்துக் கொண்டே தன் வயோதிக வெர்ஷனைக் காதலிக்கும் மனோரமாவிடமிருந்து தப்பி ஓடும் சத்யராஜ் என சின்ன இழையை வைத்துக் கொண்டு இரண்டரை மணி நேரம் மையக்கதையை நகர்த்தியது மாபெரும் சவால்.

இளையராஜா இசை வாலி பாடல்கள் அசோக்குமார் ஒளிப்பதிவு சத்யராஜ் குஷ்பூ இணை சேர்ந்து நடித்த இந்தப் படத்தின் வசனங்களை எழுதி கதை திரைக்கதை அமைத்து இயக்கியவர் பி.வாசு.ஆள் மாறாட்டம் வயோதிகராக நடிப்பது ஒரு தலைக்காதலை ஏற்க முடியாமல் தடுமாறுவது திருடனை ஒளித்து வைத்துப் புகலிடம் தருவது ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்து கொள்வதென்று எல்லா விதங்களிலும் வழமையான அதே நேரத்தில் கனமான சிரிப்புக் காட்சிகளுடன் இந்தப் படம் 1990 ஆமாண்டு நவம்பர் 30 அன்று வெளியானது.

இதற்கடுத்த படமாக வாசுவின் சின்னத் தம்பி வெளியாகி ஊரையே திரும்பச் செய்தாலும் வாசு இயக்கியவற்றுள் அதன் நகைச்சுவைக் காட்சிகளுக்காக இன்றைக்கும் விரும்பப் படுகிற படமாக நடிகன் இருக்கிறது.ஒரு நல்ல திரைப்படத்தின் இலக்கணம் அதனை மீவுரு செய்வதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.அந்த வகையில் நடிகன் காலங்கடந்த நவரசம்.