ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும்
தாது உளர் கானல் தவ்வென்றன்றே;
மணல் மலி மூதூர் அகல் நெடுந் தெருவில்,
கூகைச் சேவல் குராலோடு ஏறி,
ஆர் இருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும், 5
அணங்கு கால் கிளரும், மயங்கு இருள் நடு நாள்;
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின்,
தட மென் பணைத் தோள், மடம் மிகு குறுமகள்
சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி,
மீன் கண் துஞ்சும் பொழுதும், 10
யான் கண் துஞ்சேன்; யாதுகொல் நிலையே?
இது என் காதலியின் நகரம்.

 

இந்தப் பெரிய நகரத்தின் ஒரு கடைக்கோடி இது. மக்கள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான ஒரு இடம்.

இங்கு நான்கு தெருக்கள் சந்திக்கின்றன.

தெருக்கள் அகலமாக இருக்கிறது.

தெருக்கள் நீளமாகவும் இருக்கிறது.

இந்தத் தெருக்களில் கடல்கரைக் குருத்து மணல் சொத சொதன்னு கொட்டிக் கெடக்கு.

குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்கிறது.

இந்தக் குளிர்ந்த காற்றுக்கு மரங்கள் பூக்களையெல்லாம் உதிர்த்திவிட்டன. பூக்கள் இல்லாத இந்த மரங்கள் மொட்டையாகவும் மூளியாகவும் நின்று கொண்டிருக்கிறது.

இது நடுச்சாமம்.

கடல் அலைகளின் மொரட்டுத்தனமான இரைச்சல் ஓய்ந்து விட்டது.

மீன்கள் உறங்குகின்றன.

ஊர் இருட்டாக இருக்கிறது.

இந்த நாற்சந்தியில் ஒரு அத்திமரம் இருக்கிறது. இந்த அத்தி மரத்தில் இரண்டு ஆந்தைகள் உக்காந்திருக்கின்றன. இந்த ஆந்தைகள் இரண்டும் ஓயாமல் கூவிக்கொண்டிருக்கிறது. ஆந்தைகளின் கூப்பாடு பயங்கரமான ஒரு திகிலை என் நெஞ்சில் ஏற்படுத்துகிறது.

நான் இந்தப் பெரிய அத்தி மரத்தின் அடியில், இந்தக் கூகை இருட்டில் உக்காந்திருக்கிறேன். நான் என் காதலியின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டு கண் உறங்காமல் முழித்துக்கொண்டிருக்கிறேன்.

விளக்குடி சொகிரனார்
நற்றிணை 319