மாசு இல் மரத்த பலி உண் காக்கை
வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி,
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும்
அடங்காச் சொன்றி, அம் பல் யாணர் 5
விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப,
மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள்,
தாம் நம் உழையராகவும், நாம் நம்
பனிக் கடுமையின், நனி பெரிது அழுங்கி,
துஞ்சாம் ஆகலும் அறிவோர் 10
அன்பிலர்- தோழி!- நம் காதலோரே.
ஒரு மாமரம்.
அந்த மாமரத்தில் நீளமான ஒரு பெரிய கிளை.
ஒரு காக்கா இந்தப் பெரிய கிளையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது.
அடைமழை இரவும் பகலும் விடாமல் பெய்து கொண்டிருக்கிறது.
காற்று பலமாக வீசிக் கொண்டிருக்கிறது.
அந்தப் பெரிய காற்றுக்கு அந்த மாமரம் பலமாக அசைகிறது. காக்கா உக்காந்திருக்கிற நீளமான அந்தக் கிளையும் பலமாக அசைகிறது. நீளமான அந்தப் பெரிய கிளை அசையும் போதெல்லாம் காக்கா ஊஞ்சல் ஆடுகிற மாதிரி அசைந்து அசைந்து ஆடிக்கொண்டிருக்கிறது.
காக்கா பசியோடு உட்கார்ந்துக்கிட்டுருக்கு. அந்தப் பசியிலும் அந்தக் காக்கா ஒரு பெரிய கனவு கண்டுகொண்டிருக்கிறது.
ஒரு அரசன் அவன் படைவீரர்களுக்கு ஒரு விருந்து வைக்கிறான். அந்த அரசன் அந்த விருந்து உணவைக் காகங்களுக்கும் படைக்கிறான். அரசன் காகங்களுக்குப் படைத்தது ஒரு சோத்து உருண்டை. அந்தப் பெரிய சோத்து உருண்டையில் அவ்வளவும் பெரிய பெரிய ஆட்டுக்கறித்துண்டுகளா இருக்கு.
‘அடை மழை வெறிக்கும்… கறியும் சோறும் கலந்த ஒரு பெரிய சோத்து உருண்டை கிடைக்கும்..’ என்று அந்தக் காக்கா கனவு கண்டுகொண்டிருக்கிறது.
கழார்க்கீரன் எயிற்றியார்
பெண் புலவர்
நற்றிணை 281