பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு,
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை,
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின்
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர 5
ஏகுதி- மடந்தை!- எல்லின்று பொழுதே:
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த
ஆ பூண் தெண் மணி இயம்பும்,
ஈகாண் தோன்றும், எம் சிறு நல் ஊரே.
மலை அடிவாரம்
மூங்கில் புதர்கள் நிறைந்த காடு.
சாயங்கால நேரம்.
மேய்ச்சலுக்குப் போன பசுக்கள் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. பசுக்களின் மணி ஓசை கேட்கிறது.
என் காதலியை அழைத்துக்கொண்டு நான் என் ஊருக்குப் போய்க்கொண்டிருக்கிறேன்.
மலைக்காற்று என் காதலியின் கூந்தலை வருடி விடுகிறது. அந்த மலைக்காற்று என் காதலியின் கூந்தலை அவள் தலைக்கு மேலே அலை அலையாக உயர்த்தி உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
என் நெஞ்சில் நிரம்பித் தளும்புகிற காதலோடு நான் என் காதலியைப் பார்க்கிறேன்.
தோகை விரித்து ஆடுகிற ஒரு மயிலின் பேரழகோடு என் காதலி எனக்குக் காட்சி தருகிறாள்.
நாங்கள் என் சொந்த ஊருக்குக் கிட்ட வந்து விட்டோம்.
என் வாழ்க்கையில் இன்று நான் மகிழ்ச்சியின் உச்சாணியில் இருக்கிறேன்.
என் காதலியிடம் நான் சொல்லுகிறேன்…
“அதோ தெரிகிறது பார்… அது நம்ம ஊர்…”
“நம்ம ஊரு சின்ன ஊரு… நல்ல ஊரு நம்ம ஊரு…”
என் காதலியின் அழகான கூந்தலை அவள் தலைக்கு மேலே அழகாக உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறது மலைக்காற்ரு.
ஆவூர்க்காவிதி மாதேவனார்
நற்றிணை 264