வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க் காடவர் உயிரென
நமக்குரைத் தோருந் தாமே
அழாஅல் தோழி அழுங்குவர் செலவே.

“உன் கணவர் நல்லவர்”

“என் உயிரினும் மேலான என் தோழியே..”

“அழாதே..”

“அழுவதை விடு..”

“உன் கணவர் உன்னை விட்டுவிட்டு அவர் வெளிநாட்டுக்குப் போய்விடுவார் என்று நினைத்துத்தானே நீ அழுது கொண்டிருக்கிறாய்”

“உன் கணவர் உன்னை விட்டுவிட்டு எங்கும் போகமாட்டார்.”

“அவர் உன்னைவிட்டுப் பிரிந்த பொழுதே நீ உயிரை விட்டுவிடுவாய் என்பது அவருக்குத் தெரியும்..”

“உன் கணவர் ஒருநாள் நம்மிடம் என்ன சொன்னார் என்று உனக்குத் தெரியுமா?

“நான் சொல்லுகிறேன் கேள்..”

“ஆடவனுக்குத் தொழில்தான் அவன் உயிர். கணவன் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு குடும்பப் பெண்ணுக்கு அவள் கணவன்தான் அவளுக்கு உயிர்..”

“நல்லவர்கள் பிறருக்குச் சொன்னது மாதிரித்தான் அவர்கள் வாழ்வார்கள்..”

“உன் கணவர் நல்லவர்..”

“உன் கணவர் பிரயாணத்தை நிறுத்திவிடுவார்…”

“அவர் உன்னோடு தான் இருப்பார்…”

“என் உயிரிலும் மேலான என் தோழியே…”

“அழுகையை விடு… அழாதே…”

-பாலைபாடிய பெருங்கடுங்கோ
குறுந்தொகை 135