சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கித்
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே
அஃது ஆன்று
அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு 5
கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே.

 

தலைவர் வீட்டுக்கு வெளியூரில் இருந்து விருந்தாளிங்க வந்துருக்காக.

அவுக, தலைவர் மகளப் பெண் கேட்டு வந்துருக்காக.

தலைவர் மகளப் பெண் கேட்டு வந்திருக்கிற அந்த வெளியூர்க்காரவுக எல்லாரும் வயசானவுக. அவுக, அவர்களால் ஏண்ட பரிசுப் பொருள்களக் கொண்டாந்துருக்காக. அவுக, அவர்களால் சுமக்க முடிஞ்ச அளவுக்குப் பரிசுப் பொருள்கள தலையில் சுமந்து கொண்டாந்துருக்காக. மாப்ளப் பையனும் வந்துருக்கான்.

தலைவர் குடும்பம் பரம்பரை பரம்பரையா பணக்காரக் குடும்பம்.

தலைவர் மகா அழகாருப்பாள்.

இந்தச் சம்பந்தத்தில் தலைவர் மகன்களுக்கும், தலைவருக்கும் விருப்பம் இல்லை.

இந்த மாப்ளைக்குத்தான் வாக்கப்படுவேன் என்று தலைவர் மகா பிடிவாதமாக இருக்கிறாள்.

மகளுக்கு ஆதரவாக தலைவர் மனைவி, கணவனிடம் பேசுதாவ…

நீங்களும், ஒங்க குடும்பமும் சேத்திதான்… இல்லேங்கல.

நம்ம மகா அழகேந்திரிதான்… இல்லன்னு சொல்லல.

நீங்க குடும்பப் பெருமைக்கும் நம்ம மகா அழகுக்கும் இந்தப் பெரியவுக கொண்டு வந்திருக்கிற இந்தப் பரிசுப் பொருள்கள் ஈடாகாதுதான்.

நம்ம மகளப் பெண் கேட்டு வந்திருக்கிற இந்தப் பெரியவுக நம்மள மதிச்சி, நம்மள நம்பி, நம்ம வீடுதேடி சம்மந்தம் பேச வந்துருக்காக.
வயசான இந்தப் பெரியவுக நமக்குக் கொண்டுவந்திருக்கிற இந்தப் பரிசுப்பொருள்கள் எடை போட்டுப் பார்க்காதீக…

இந்தப் பரிசுப் பொருள்களுக்குப் பணமதிப்பும் போடாதீக…

ஒங்க குடும்பப் பெருமைக்கும் நம்ம மகா அழகுக்கும் சோழ மன்னன் தலைநகர் உறந்தை கூட ஈடாகாது. சேர மன்னன் தலைநகர் வஞ்சியும் கூட ஈடாகாது.

ஒங்க குடும்பப் பெருமைக்கும் நம்ம மகா அழகுக்கும் பெரிய பெரிய அந்த இரண்டு நகரங்களும் சேர்ந்தால் கூட ஈடாகாது…

சான்றோர்கள் நமக்குக் கொண்டு வந்திருக்கிற இந்தப் பரிசுப்பொருள் கொஞ்சமாக இருந்தாலும் நாம் இதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம்…

சான்றோர்கள் அழைத்து வந்திருக்கிற இந்த தம்பிக்கு நாம் நம்ம மகளத் திருமணம் செய்து கொடுப்போம்.

பாடியவர் பெயர் இல்லை
நற்றிணை 234