1. வேற்றுமைகள் -வேறுபாடுகள்: உணர்தலும் அறிதலும்
**************************************************************
இலக்கியம் என்றால் இலக்கியம்தான். அதில் ஆண் இலக்கியம்; பெண் இலக்கியம் என்று வகைப்பாடு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லும் பெண்களின் குரல்களைக் கேட்டிருக்கக் கூடும். இப்படிப் பேசும் ஆண்களையும் பார்த்திருக்கக் கூடும்.
விருதுபெற்ற இந்தக் கதைகள் போன்ற கதைகளை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே ஆண்கள் எழுதிவிட்டார்கள். அவர் பெண் என்பதால் இந்த விருதைப் பெற்றிருக்கிறார். பொதுவாகவே பெண்கள் தாங்கள் எழுதும் எழுத்துக்களால் மட்டுமே கவனிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையல்ல. பெண்கள் என்பதால்தான் வாய்ப்புகளை அடைகிறார்கள். விருதுகளைப் பெறுகிறார்கள். வெளிநாடுகளுக்குப் போய் வருகிறார்கள் என்பன போன்ற குரல்களைக் குற்றச்சாட்டுகளாகவே ஆண்களில் சிலர் முன்வைக்கிறார்கள்.
பெண்களில் சிலரும்கூடத் தங்கள் எழுத்து பெண்ணெழுத்து என்ற வகைப்பாட்டிற்குள் பிரித்துப் பேசுவதை விரும்புவதில்லை. நான் கவிதை எழுதுகிறேன். நான் கதை எழுதுகிறேன்; நான் நாடகங்களை இயக்குகிறேன்; நான் சினிமா எடுக்கிறேன். பொதுவான சொற்களான கவி எனவும் புனைகதை ஆசிரியர் எனவும் நாடகக்காரர் எனவும் சினிமா இயக்குநர் எனவும் சொல்வதில்.. என்ன சிக்கல் இருக்கிறது. ஏன் பெண் என்னும் அடைமொழியோடு அழைக்கிறீர்கள்? அப்படி அழைப்பதின் மூலம் பெண் ஆண் அளவுக்குச் சிறப்பாக எழுத முடியாது.. இயங்கமுடியாது.. வேலை செய்ய முடியாது என்பதை நிறுவ முயல்கிறீர்கள் என அவர்கள் வாதிடுகிறார்கள்.
இப்படிக் கேட்பது நியாயம்தானே? என்று தோன்றலாம்
இதே மாதிரியான குரல்களைத் தலித் இலக்கியம் என வகைப்பாடு செய்யும்போதும் கேட்கிறோம். நாங்கள் எழுதுவதை மட்டும் தலித் எழுத்து என்று சொல்வது ஏன்? இதன் மூலம் தீண்டாமையையும் ஒதுக்கிவைத்தலையும் நீட்டிக்கிறீர்கள். இப்படிச் சொல்லும் குரல்களைக் கேட்டிருக்கக் கூடும். அந்தக் குரல்களில் நியாயம் இருப்பதுபோலப் படலாம்.
அதே நேரத்தில் இப்படிச் சொல்கிறவர்கள் யாரெல்லாம் கேட்கிறார்கள்? எப்போது இப்படிச் சொல்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். தொடக்கநிலையிலேயே சொல்கிறார்களா? வகைப்பாட்டின் வழியாக அறியப்பட்ட பின் இப்படிக் கேட்கிறார்களா? என்று யோசித்துப் பாருங்கள்.
இவ்விரண்டையும் யோசித்துக் கொண்டிருக்கும்போதே “தலித் எழுத்து இருக்கலாம் என்றால் வன்னியர் எழுத்து இருக்கக்கூடாதா? கவுண்டர் எழுத்துக்கு இடமில்லையா? நாடார்களுக்கு இலக்கியம் அந்நியமானதா? நாயக்கர்கள் எழுதமாட்டார்களா? பிள்ளைமார்களும் முதலியார்களும் எழுதியவைகளை விட்டுவிடுவீர்களா? பிராமணர்கள் எழுதாத எழுத்தா? – இப்படியான குரல்களையும் கேட்கிறோம். திடுக்கிட்டு நிற்கிறோம். கடந்து செல்கிறோம்
“அடித்தால் திருப்பி அடி; அடங்க மறு; அத்துமீறு” என்று வசனம் பேசும் படங்கள் வரும்போது ‘வெட்டுவோம்; குத்துவோம் – இவை எங்கள் அடையாளம்’ என்று வசனம் பேசும் சினிமாவை எடுக்கக் கூடாதா? இந்தக் கேள்விகளும் பொதுத்தளத்தில் கேட்கப்படும் கேள்விகள்தான்.
கேள்விகளாகவும் பதில்களாகவும் முன்வைக்கப்படும் வேறுபட்ட குரல்களை மறுதலித்து எல்லாமே இலக்கியம்தான் என்று ஒன்றில் அடக்கிவிடலாம்தான். வேறுபாடுகளும் கலகங்களும் யாருக்கு வேண்டும்? இணக்கமும் சமரசங்களும்தான் உலகிற்குத் தேவை; இவற்றிலிருந்தே சமாதானம் பிறக்கிறது எனச் சொல்லலாம். அதற்காக ஒற்றுமை X வேற்றுமை என்ற எதிர்வுச் சொற்களின் மூலத்தைத் தேடிப் போகலாம். வேற்றுமைகள் நிலவியதால் ஒற்றுமை உருவாக்கப்படுவதற்காக அந்தச் சொல் கண்டுபிடிக்கப்பட்டது. செயல்தான் முந்தியது; சொல் பிந்தியது எனச் சொல்லலாம். கருத்தில்லாமல் காரியமில்லை என வாதிடலாம். கருத்துமுதல் வாதத்தை ஏற்க முடியாது. பொருள்தான் முந்தியது; பொருள்தான் கருத்தை உருவாக்குகிறது என்று இயக்கவியல் தர்க்கத்தை முன்வைக்கலாம்.
இந்த வாதங்களும் விவாதங்களும் அர்த்தமற்றவை. நிகழ்காலத்தின் தேவை ஒற்றுமை. அதனால் வேறுபாடுகளையும் வித்தியாசங்களையும் அதிகாரப்படிநிலைகளையும் ஆதிக்கத்தை ஏற்கும் – நிறுவும் போக்கை விட்டொழிக்க வேண்டும் எனவும் வாதிடலாம். ஒற்றுமைப்படுவதற்கான புள்ளிகளாகத் தேசம், மொழி, இனம், மதம் எனச் சிலப் பொதுச்சொற்களை முன்வைக்கக்கூடும். முன்வைப்பவர்கள் பொதுச்சொற்களிலிருந்து கிளர்ந்து நிற்கும் சிறப்புச் சொற்களையும் அவற்றின் அடையாளங்களையும் ஒதுக்கிவிட்டுப் பொதுச்சொற்களின் மேன்மையைப் பேசுவதைக் கேட்கிறோம். அதன் அடுத்தக்கட்டமாகச் சிறப்புச் சொற்கள் உணர்த்தும் உரிமைகளை, உணர்வுகளைத் தடுத்துவிடும் நோக்கத்தையும் வெளிப்படுத்தக் கூடும். ஆனால் அந்தச் சொற்களைத் தடைசெய்துவிட முடியுமா? என்பதை நிதானமாக யோசித்துப் பார்க்கவேண்டும்.
***
உலகம் என்பது ஒரு பொதுச் சொல்தான்; கடவுள் என்னும் பொதுச் சொல்லைப்போல. மனிதர் என்னும் இன்னுமொரு பொதுச் சொல்லைப்போல. இன்னும் அற்புதமான பொதுச் சொற்கள் இருக்கின்றன. மொழி, கலை, இலக்கியம், சொற்கள் என்பன எல்லாமே பொதுச் சொற்கள்தான். ஆனால் இந்தப் பொதுச் சொற்கள் மட்டுமே போதும் என்று நினைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஒவ்வொரு பொதுச் சொற்களுக்குள்ளும் என்னென்ன சொற்களை உருவாக்கியிருக்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள். சொற்களை மொழிகள் பெயர்ச் சொல், வினைச் சொல் எனப் பிரித்துப் பேசாமல் இருந்தால் மொழியேது? பெயர்களைப் பொதுப்பெயர் சிறப்புப் பெயர் எனவும் இடுகுறிப்பெயர், காரணப் பெயர் எனவும் வகைப்படுத்தாமல் விட்டிருந்தால் மொழி குறித்த அறிவு ஏது? பொது, சிறப்பு, இடுகுறி, காரணம் என்ற நான்கையும் கலைத்தும் சேர்த்தும் வினைச் சொற்களையும் இவ்விரண்டையும் தொடர்ந்து நிற்கும் இடைச் சொற்களையும் உரிச்சொற்களையும் கலந்து கட்டி உருவாக்கும் சொற்றொடர்களின் வழித்தானே இலக்கியம் உருவாகிறது. இலக்கிய உருவாக்கத்திற்குள் இவ்வளவு வேறுபாடுகளும் வினைப்பாடுகளும் இருக்கும்போது இலக்கியத்திற்குள் வேறுபாடுகளும் வேற்றுமைகளும் இருக்கக்கூடாது என்று வாதிடுவது எவ்வகையில் சரியாக இருக்கும்?
பொதுச் சொல் உணர்த்த நினைப்பது கடந்த காலத்தை. கடந்த காலம் என்பதைவிடவும் எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய பேருண்மையை. ஆனால் சிறப்புச் சொற்கள் உணர்த்துவது அறிதலின் தொடக்கம். வேற்றுமையைக் கண்டறிவது மூலமே சிறப்புச் சொற்கள் உருவாகின்றன. வேறுபாடுகளை விளக்குவது அறிதலின் நீட்சியான கண்டுபிடிப்பு. அந்தக் கண்டுபிடிப்புதான் அறிவு. அறிவு ஒவ்வொருவருக்கும் வேறுவேறாய் இருக்கிறது. வேறுவேறு அளவுகள்தானே வந்ததில்லை. இருப்பாலும் சூழலாலும் உருவாவது. இருப்பு என்பதும் உருவாக்கம் என்பதும் நிகழ்கால இருப்பு மட்டுமல்ல. கடந்த கால வாய்ப்புகளும் பயன்படுத்திக்கொண்டு வளர்ந்ததும் பற்றி.
மொழியைக் கண்டுபிடித்ததே மனித குலத்தின் முதன்மையான அறிவு. குறிப்பிட்ட வெளி சார்ந்து பயன்படுத்துவதற்காக அதன் கிளைகளையும் விரிவாக்கங்களையும் தொடர்ச்சியாக உற்பத்தி செய்துகொண்டே இருந்தது அறிவின் வளர்ச்சி. நீண்ட நெடுங்காலமாகப் பயன்பாட்டில் இருக்கும் தமிழ்மொழியான – செவ்வியல் மொழியான தமிழில் மட்டுமல்ல. எல்லா மொழிகளிலும் எல்லாக் காலத்திற்கும் பொதுவான ஒன்று இருந்தது என்ற வாதமும், அப்படியொன்று இருப்பதாகச் சொல்வது கட்டுக்கதை என்ற வாதமும் இருந்துகொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் வேறுபாடுகளும் விடுபடல்களும் இருக்கின்றன என உணர்ந்தநிலையில் சிறப்புகளை உருவாக்கவும் முயற்சிகள் நடந்துகொண்டே இருந்தன. சிறப்புகளைக் கண்டுபிடிப்பதும் உருவாக்குவதும் நிலைப்படுத்துவதும் அறிவு வளர்ச்சி. அப்படி உருவாக்கும்போது வேறுபாடுகள் – வேற்றுமைகள் உருவாகும் என்று நினைத்திருந்தால் மனித அறிவு என்னவாகியிருக்கும்?
473 கவிகளின் தொகுதியான செவ்வியல் பிரதிகளில் – எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமான சங்கக் கவிதைகளில் பத்தில் ஒரு பங்கினராகப் பெண்கள் இருந்துள்ளார்கள். பெண் கவிகளின் எண்ணிக்கை குறித்து மாறுபட்ட கருத்துகள் இருந்தபோதிலும் பத்தில் ஒருபங்கு என்பதை மறுப்பார் இல்லை. பெருங்கவிகளின் முதன் ஐந்து இடங்களுக்குள் எண்ணிக்கை அடிப்படையிலேயே ஔவை இடம்பெறுகிறாள். அவளது கவிதைகள் அவளைப் பெண்ணாகவும் காட்டுகின்றன. உலக அறிவும் வாழ்வியல் கோட்பாடுகளும் விருப்பங்களும் அறிந்த அறிவாளியாகவும் காட்டுகின்றன.
49 பேர்கள் என அறியப்பெற்ற பெண்கவிகள் அல்லாமல் பெயர் மறைத்துப் பாடிய பெண்களும் இருந்திருக்கிறார்கள். உவமையாலும் சிறப்புச் சொற்களாலும் பெயரிடப்பெற்ற 23 கவிதைகளில் 15 பேர் பெண்களாக இருக்கவே வாய்ப்புண்டு என ஒரு ஆய்வு சொல்கிறது. ஆண்களிலும் பெண் உறவு சார்ந்த காமத்தைப் பேசியவர்களே பெயரைச் சொல்லாமல் நழுவியிருக்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வு. மொத்தச் செவ்வியல் தமிழ்க் கவிதைகளிலும் பெண்களும் ஆண்களும் மனிதர்களாக முன்னிறுத்தப்பட்டுள்ளனர்; பொதுவான உணர்வுகள் பேசப்பட்டுள்ளன; பொதுவாக கடமைகளும் உரிமைகளும் வலியுறுத்தப்பட்டுள்ளன என்றாலும் தனித்த உணர்வுகளும் கடமைகளும் பேசப்படாமல் இல்லை. அதே நேரத்தில் பெண்களின் கவிதைகளில் பொதுவில் கலந்துவிடுவதைவிடவும் நாங்கள் பெண்கள்; எங்கள் உணர்வுகளும் இருப்பும் நகர்வும் வேறானவை என்று சொல்வதில் கூடுதல் விருப்பங்களும் ஆர்வங்களும் வெளிப்பட்டுள்ளன. பெண்கள் ஆண்களால் எழுதப்படும் அதே நேரத்தில் பெண்களைப் பெண்கள் எழுதிக்காட்டவேண்டும் என்ற விருப்பத்தையும் பார்க்கிறோம். ஔவை, வெள்ளிவீதி, காக்கைப்பாடினி நச்செள்ளை, அள்ளூர் நன்முல்லை, கழார்க் கீரனெயிற்றி, கச்சிப்பேட்டு நன்னாகை , ஒக்கூர் மாசாத்தி, மாறோக்கத்து நப்பசலை, வெறிபாடிய காமக்கண்ணி, பெருங்கோழி நாயகன் மகள் நக்கண்ணை, வெண்பூதி, நக்கண்ணை, பொன்முடி, பூங்கண் உத்திரை,நெடும்பல்லியத்தை, மாற்பித்தி, நன்னாகை, மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளை, தாயக்கண்ணி, நல்வெள்ளி போன்றோர் ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகளை எழுதிய 20 பேர் இருக்கிறார்கள். ஒற்றைக் கவிதைகளை எழுதிய பெண்களாக 20 -க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். அவர்கள் தங்களைப் பெண்ணாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. கண்ணகி, மாதவி, மணிமேகலை எனப் பெண்களை மையமிட்டுத் தொடர்நிலைச் செய்யுள்களை எழுதிய மரபு தமிழ் மரபு. ஆண்களால் எழுதப்பெற்ற இப்பெண்களுக்கீடாகப் பெண்களால் எழுதப்பெற்ற பெண்கள் வாசிக்க கிடைக்கவில்லை. அதே நேரத்தில் பக்தி இலக்கியக்காலத்தில் பக்தர்களாக ஆண்களும் பெண்களும் எழுதப்பெற்றார்கள் என்றாலும் ஆண்டாளும் காரைக்கால் அம்மையும் தாங்கள் பெண்களாக இருந்து செலுத்திய பக்தியின் சிறப்பை – வேற்றுமையை எழுதியது இன்றளவும் கவனிக்கத்தக்கனவாக இருக்கின்றன. மொத்தத்தில் காணாமல் போக விரும்பாமல் தங்களை வெளிப்படுத்த நினைப்பது உணர்தலின் – அறிதலின் ஆவல்.
பாரதி தொடங்கி வைத்த நவீனத்தமிழ் இலக்கியம் பெண்களை எழுதுவதின் வழியாகவே நவீனமடைந்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. புனைகதைகளில் மாயூரம் வேதநாயகம் பிள்ளையும் மாதவைய்யாவும் ராஜம் அய்யரும் பெண்களை மையமிட்டு எழுதியே நவீனத் தமிழ் இலக்கிய வகைமைகளை முன்வைத்தார்கள். அவர்கள் தொடங்கிய நவீனத்தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் 1936 இல் மூவலூர் ராமாம்ருதம் எழுதிய வெளியிட்ட தாசிகளின் மோசவலை அல்லது மதிகெட்ட மைனருக்கு வேறுபட்ட இடம் இருக்கிறது.
கவிதையிலும் புனைகதைகளிலும் ஆண்களால் பெண்கள் பற்பல விதமாய் எழுதப்படுகிறார்கள் என்றாலும் நாங்கள் வேறுவிதமாய்த் தங்களை எழுதிக்காட்டுவோம் எனப் பெண்களும் எழுதுகிறார்கள். இந்தத் தன்முனைப்பின் தேவை என்னவாக இருக்கும்? எழுதும் பெண்களின் கதைகளுக்குள் நுழைந்து பார்க்கலாம்.
தொடரும்.