சுரேஷ் பாலாஜி தயாரிப்பு ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கம் ஜி.ஆர் நாதன் ஒளிப்பதிவு சக்ரபாணி எடிடிங் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை கண்ணதாசன் பாடல்கள் ஏஎல் நாராயணன் வசனம்  ரஜனிகாந்த் ஸ்ரீப்ரியா பாலாஜி மேஜர் சுந்தர்ராஜன் தேங்காய் ஸ்ரீனிவாசன் மனோகர் அசோகன் மனோரமா ஏவிஎம் ராஜன்
1980 ஜனவரி 26 அன்று வெளியானது.

எதிர் மனிதர்களை விரும்பச் செய்வதில் காட்சி ஊடகமான திரைப்படத்தின் பங்கு அளப்பரியது. எம்ஜி.ஆருக்கும் ரஜினிக்கும் இடையிலான புறத்தோற்ற வித்யாசங்களே எம்ஜி.ஆருக்கு அப்புறமான தமிழ் சூப்பர் ஸ்டாராக ரஜினியை விரும்பச் செய்தது என்றால் சிலருக்குக் கசக்கக் கூடும். ஆனால் அதுதான் நிஜம். அதுவரை விரும்பத்தக்க என்பது பொத்தி வைக்கப்பட்ட நற்குணங்களின் தோரணமாகவே இருந்து வந்த நிலையில் கமல்ஹாஸன் தான் அடுத்த உச்ச நட்சத்திரமாக வருவார் என்பதும் நிச்சயிக்கப்படாத எழுபத்தி ஐந்தாம் ஆண்டுவாக்கில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ரஜினிகாந்த் முதலில் சின்ன வேடங்கள் அப்புறம் வில்லன் வேடங்கள் என்று தன் ஆரம்பத்தை நிகழ்த்தினார். கிடைத்த வேடங்களிலெல்லாம் நடித்துக்கொண்டே தனக்கான ஒளிர்தலம் ஒன்றை நோக்கிப் பயணித்த ரஜினிகாந்த் ஆரம்ப நாட்களில்தான் சென்று சேரப் போவது சூப்பர்ஸ்டார் ஸ்தானம் என்று சத்தியமாக எதிர்பார்த்திருக்க மாட்டார். எண்ணாததை எல்லாம் நிகழ்த்திப் பார்ப்பதன் பேர்தான் இந்த வாழ்வென்பது. அதுதான் நிகழ்ந்தது.

ஸ்டைல் வில்லன் ரஜினிகாந்த் இதுதான் ஆரம்பத்தில் தன்னைக் கவனிக்க ரஜினி கைக்கொண்ட ஆயுதம். அது எதிர்பார்த்ததைவிடப் பன்மடங்கு விளைச்சலைத் தந்த நல்விதையானது. ரஜினியின் கொஞ்சுதமிழ் வேகமான உச்சரிப்பு சிரிப்பு சிகரட் புகைக்கும் பாணி சண்டைக் காட்சிகளின்போது அவர் தனக்கே உரித்த விதத்தில் பிறரை எதிர்கொண்டது. மிக முக்கியமாக அவரது தலை முடி என எல்லாவற்றின் பின்னாலும் ஒரு மாய இழை கொண்டு கோர்த்தால் அது சென்றடையும் இடம்தான் வெற்றி சிகரம்.

முழுமையான விதத்தில் ரஜனிகாந்தை நிலைநிறுத்திய படமாக பில்லா வெளியானது. பில்லா ஒரு எதிர்நாயகனின் பெயர். முழுப்பெயர் டேவிட் பில்லா. அவன்தான் சர்வதேச குற்றவுலகத்தின் சக்கரவர்த்தி. அவனை எல்லா தேசத்தின் போலீஸூம் தேடி வந்தன. அவனும் அவனது நெருக்கமான உள்வட்ட சகாக்களும் இந்தியாவில் இருக்கையில் கூட்டத்தை விட்டுவிட்டு திருமணம் செய்துகொண்டு தனித்த வாழ்க்கை நோக்கி செல்ல முயலும் ராஜேஷைக் கொல்கிறான் பில்லா. அவனது தங்கை ராதாவும் அவனது காதலி ரீனாவும் பில்லாவின் எதிரிகளாகின்றனர். ராதா பல தற்காப்புக் கலைகளை எல்லாம் கற்றுக்கொண்டு பில்லாவின் குழுவில் இணைகிறாள். அவளை பில்லா நம்புகிறான். பில்லாவைத் தேடும் போலீஸ் டீஎஸ்பி அலெக்சாண்டர் பல முறை அவனைப் பிடிக்க முயன்று தவற விடுகிறார்.

கடைசியாக போலீஸ் துரத்தலில் பில்லா கொல்லப்படுகிறான். அவனது பிணத்தை டிஎஸ்.பி யாருமறியாமல் புதைத்துவிடுகிறார். எங்கோ எப்போதோ சந்தித்த ராஜப்பா என்பவன் அச்சு அசலாக பில்லாவின் முகசாயலில் இருந்ததை நினைவுகூர்ந்த அலெக்சாண்டர் அவனை பில்லாவாக மாற்றி அதே குழுவிற்குத் தன்னுடைய நபராக அனுப்பி வைக்கிறார். ராஜப்பா என்றறியாத ராதா அவனைக் கொல்லத் துடிக்கிறாள். தன் மனைவி மரணத்திற்கு காரணம் டி.எஸ்.பி என்று அவரைப் பழிவாங்கத் துடித்தபடி ஜெயிலில் இருந்து விடுதலையாகிறான் ஜேஜே.

பில்லாவாகத் தன்னை நம்பும் குழுவினருக்கு சந்தேகம் வராதபடி டி.எஸ்பியின் திட்டத்தை அரங்கேற்றி சர்வதேச குற்றவாளிகளையும் கூடவே இண்டர்போல் அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கும் கயவன் ஒருவனையும் பிடித்துத் தருகிறான் ராஜப்பா. மீண்டும் தன் சுயவாழ்வு நோக்கித் திரும்புவதோடு நிறைகிறது திரை.

ரஜினி என்ற ஒற்றைச் சொல்லை எடுத்துவிட்டு இந்தத் திரைப்படத்தை கற்பனை செய்யவே முடியாது. இதே படத்தை வேறொரு வண்ணத்தில் முற்றிலும் வெளிநாடுகளில் நடக்கிற கதையாக மாற்றி அஜீத்குமார் நடிக்க இருபத்தி ஏழு ஆண்டுகளுக்கு அப்புறம் பில்லா என்ற அதே பெயரில் மீவுருவாக்கம் செய்தார் விஷ்ணுவர்தன். ஆனால் அதற்கும் பழைய பில்லாவுக்கும் பெயரும் கதையின் அடி நாதமும் மட்டும்தான் ஒற்றுமை என்ற அளவுக்கு வெவ்வேறான அனுபவங்களையே இரண்டு படங்களும் முன்வைத்தன. பில்லா முதல் உருவேகூட இந்தியில் டான் என்ற பேரில் அமிதாப் நடித்த படத்தின் மறுவுருதான் என்றாலும் பில்லாவின் செல்வாக்கு ரஜினியின் திரைவாழ்வில் முக்கிய ஒளியாய் பெருகிற்று.

ரஜினிகாந்தின் நாயகத்துவத்தைக் கட்டமைத்த அவரது வாழ்வின் முதல் இருவேடப் படமாக பில்லா அமைந்தது. ரஜினியின் ஆரம்பகால வண்ணப்படங்களில் பில்லாவுக்கு முதன்மையான ஒரு இடம் உண்டு. சண்டை மற்றும் பாடல் காட்சிகளில் அழகிய வித்தியாசங்களை எல்லாம் தந்து மகிழ்வித்தார் ரஜினி. இரவுக்கும் பகலுக்கும் இடையிலான அத்தனை வித்தியாசங்களை, ராஜப்பாவும் பில்லாவுமாக வழங்கித் தன் திரைவாழ்வின் சிறந்த படமொன்றை நிகழ்த்தினார்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்கள் இன்று அளவும் மீண்டுகொண்டே இருக்கக்கூடிய கரையோரத்து அலைகளாகவே பில்லாவை நினைவுபடுத்துவதைச் செய்துகொண்டே இருக்கின்றன. மை நேம் இஸ் பில்லா தேவமோதிரமாகவே மனமென்னும் வாத்தியத்தை விடாமல் இசைக்கும் விரலொன்றில் மிளிர்கிறது.

இந்தப் படத்தின் குணச்சித்திர நடிகர்கள் மேஜர் சுந்தரராஜன், பாலாஜி, மனோகர், அசோகன், தேங்காய் சீனிவாசன், மனோரமா, மற்றும் நாயகி ஸ்ரீப்ரியா, அனைவரும் தங்கள் நடிப்புத் திறமையின் சிறந்தவற்றை வழங்கி இந்தப் படத்தைச் சிறப்பித்தார்கள். மொத்தத்தில், வில்லத்தனத்திலிருந்து நாயகராஜாவாக நடைபோடுவதற்கான செந்நிறக் கம்பளமாகவே பில்லா திரைப்படத்தை ரஜினியும், இன்றளவும் அவரை விரும்புவதைக் கைவிடாத பெருங்கூட்டமொன்றின் முதற்கூட்டமும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

பில்லா நில்லாமழை.

தொடரலாம்.

 

முந்தைய தொடர்: https://bit.ly/2Yuivzc