இருவரில் ஒருவர் : சூடாமணியின் அந்நியர்கள்

ஒரு பெண் தனது குடும்பத்தில் இருக்கிறாள். திருமணத்திற்குப் பின் இன்னொரு குடும்பத்தில் நுழைகிறாள். குடும்பத்தில் இருக்கும்போது அவளது பாத்திரப் பெயர் மகள். நுழைந்தபின் அந்தப் பாத்திரத்தின் பெயர்கள் இரண்டு இரண்டு. மருமகள்- மனைவி. பிறந்தகத்து மகள்கள் புக்ககத்தில் மருமகள்களாக/மனைவிகளாக மாறுகிறார்கள். பிறந்தகங்கள் எப்போதும் தந்தையின் குடும்பமாக அறியப்பட்டு ‘ அவரின்’ மகளாக அறியப்படுகிறாள். புகுந்தவீடு தனிக்குடும்பமாக ஆகாதவரை மாமனாரின் மருமகளாக அறியப்படுகிறார்கள் கூட்டுக்குடும்பமாக இருக்கும் பிறந்தகத்தில் இரு மகள்கள் இருந்தால் சகோதரிகள்; உடன் பிறப்புகள். அவர்களிடையே இருக்கும் வேறுபாடுகளுக்குப் பெற்றோரின் வளர்ப்பே காரணம். வேறுபாடுகள் காட்டப்படாமல் வளர்க்கப்பட்ட மகள்கள் புக்ககம் போனபின்பு அடையும் மாற்றங்களுக்கு யார் காரணமாக ஆவார்கள்.

பெண்ணெழுத்தின் நிகழ்வெளிகளில் முதன்மையானது குடும்பவெளி. பாலினம் சார்ந்த ஒடுக்குமுறை நிலவும் நுண் அமைப்பாக இருப்பது குடும்பவெளிதான் என்ற அடிப்படையில் குடும்ப அமைப்பே தொடர்ந்து விவாதப்பொருளாகப் பெண்களால் முன்னெடுக்கப்படுகின்றன. குடும்ப வெளிக்குள் பெண் x ஆண் என்ற பாலின முரண்பாட்டைக் கட்டமைத்து எதிர்நிலைச் சொல்லாடல்களால் ஆணின் இருப்பும் இயக்கமும் பெண்ணை இரண்டாவதாக உணரச்செய்கிறது என்ற முடிவை நோக்கி நகர்த்திச் செல்வது எளிது என்பதால் கூடக் குடும்பவெளியைக் கதைப்பரப்பாகத் தெரிவுசெய்வது முதன்மை பெற்றிருக்கலாம்.

இப்படியொரு கேள்வியை நேரடியாக எழுப்பிக் கொண்டு விடைதேடும் விதமாக கதையொன்றை ஒருவர் எழுதியிருக்கலாம்.  நான் இன்னும் வாசிக்கவில்லை. அதற்குப் பதிலாக அந்நியர்கள் என்ற தலைப்பில் ஆர்.சூடாமணி. எழுதிய கதையில் இரண்டு சகோதரிகளை முன்வைக்கிறார். இருவரும் பிறந்தகத்தில் வேறுபாடு காட்டப்படாமல் வளர்க்கப்பட்டவர்கள். திருமணத்திற்குப் பின் அவர்களின் சிந்தனை, செயல் ஆகியன எதிரெதிராக இருக்கின்றன எனக் காட்டுகிறார். இவ்விருவரில் யாரை ஏற்பது? யாரை நிராகரிப்பது? என்பதான கேள்விகளை நேரடியாக எழுப்பாமல் வாசிப்பு மனத்திற்குள் விவாதம் எழும் விதமாக உரையாடல்களையும் மனவோட்டங்களையும் எழுதிக் காட்டுகிறார். இருக்கிறது என்பதை வாசிப்பவர்கள் உணரும்போது அந்தக் கதை  வெறும் பெண்ணெழுத்து அல்ல பெண்ணிய எழுத்து என உணர முடியும்.

மகள்களாக இருந்த சகோதரிகள் நீண்ட இடைவெளிக்குப் பின் சந்தித்துக் கொள்வதாகவும் குறுகிய காலத்திற்கு இருவரும் நெருங்கி இருக்கப்போகிறார்கள் என்பதான கதைச் சூழலை உருவாக்குவதற்காக ஓய்வு தேவைப்பட்ட ஸௌமியா( தங்கை) பம்பாயிலிருந்து சென்னைக்கு ஸவிதாவின் (அக்கா) வீட்டிற்கு –வந்திறங்குவதில் கதையைத் தொடங்குகிறார் சூடாமணி.

சகோதரிகளாக வாழ்ந்த காலத்தில் ஸௌமியா ஸவிதாவும் என்னென்ன விதங்களில் ஒத்தவர்களாக – ஒன்றுபோல் இருந்தார்கள் என்பதையும் மனைவிகளாக மாறியபின் என்னவிதங்களிலெல்லாம் வேறுபட்டவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதையும் அடுக்கிக் காட்டுவதுதான் கதையின் கட்டமைப்பு. ஸவிதாவின் வருகை நடந்த முதல் நாள் இரவைப் பற்றிய விவரிப்பு இது:

மற்றவர்களுக்கு உறைப்புச் சமையலைப் பரிமாறிவிட்டுத் தானும் தங்கையும் மட்டும் காரமில்லாத சாம்பாரை உட்கொள்ளும்போது அந்த ஒத்த ருசி இன்னும் ஆழ்ந்த ஒற்றுமைகளின் சிறு அடையாளமாய்த் தோன்றியது. அவ்விருவருக்கும் காபியில் ஒரே அளவு இனிப்பு வேண்டும். இருவருக்கும் அகலக் கரை போட்ட புடைவைதான் பிடிக்கும். மாலை உலாவலைவிட விடியற்காலையில் நடந்துவிட்டு வருவதில்தான் இருவருக்கும் அதிக இஷ்டம். உறக்கத்தினிடை இரவு இரண்டு மணிக்குச் சிறிது நேரம் கண்விழித்து நீர் அருந்திவிட்டு, மறுபடி தூங்கப் போகும் வழக்கம் இருவருக்கும் பொது. இப்படி எத்தனையோ! ஒரே வேரில் பிறந்த சின்னச் சின்ன இணக்கங்கள். ஒவ்வொன்றுமே ஒவ்வோர் இனிமை. ஸவிதா நாற்பது வயதாகப் போகிறது. ஸௌம்யா அவளைவிட மூன்றரை வயது இளையவள். ஆனால் அந்த இனிமைக்குச் சிரஞ்சீவி யௌவனம். ஏனென்றால் அவர்கள் இருவரும் ஒன்று.

உணவுப்பழக்கங்கள் மாறவில்லை. உடைத்தெரிவுகள் மாறவில்லை.  காலை நடை, இரவுத் தூக்கத்திதினிடையே எழுந்து தண்ணீர் குடித்துவிட்டுத் திரும்பவும் படுக்கும் பழக்கம் எனச் சின்னச்சின்ன நடவடிக்கைகள் எதுவுமே மாறவில்லை என்பதைத் தொடக்கத்தில் சொல்லிவிட்டு, செயல்கள் மாறவில்லை; கருத்துகள் மாறியிருக்கின்றன என்பதைக் காட்டுவதற்காக கதையின் நிகழ்வுகளை அடுக்கிறார். செயல்பாடுகளில் பெரிதாக அவர்கள் இருவரும் மாறவில்லை என்பதில் இருவருக்கும் ஏற்பட்ட திருப்தியை சொல்லும் விவரிப்பை ஆசிரியர் கூற்றாகவே சொல்கிறார்:

இத்தனை வருஷம் ஆனாப்பலேயே தோணலே. ஸவி தலை கொஞ்சம் நரைக்க ஆரம்பிச்சிருக்கு. வேறெதும் வித்தியாசமில்லேஎன்றாள்.

நரை! ஸவிதா லேசாய்ச் சிரித்துக் கொண்டாள். ‘காலம் செய்யக்கூடியதெல்லாம் அவ்வளவுதான். பாவம் வருஷங்கள்!’ என்று சொல்வதுபோல் இருந்தது. அந்தச் சிரிப்பு

பழக்கவழக்கங்களில் சகோதரிகள் இருவரிடையேயும் வேறுபாடுகளோ வித்தியாசங்களோ காணப்படவில்லை எனக் காட்டும் சூடாமணி, அவர்களின் பார்வைகள் -குறிப்பாகத் தன்னைத் தவிர்த்து மற்றவர்களைப் பற்றிய பார்வைகளும் கருத்தியல் சார்ந்த நம்பிக்கைகளும் மாறிப்போய்விட்டன என்பதைக் காட்ட ஒவ்வொரு நிகழ்வாக ஸௌமியாவின் முன்னால் நிகழ்த்திக்காட்டுகிறார். அந்நிகழ்வுகளின் மீதான இருவரின் பார்வைகளும் வேறுவேறாக இருக்கின்றன. இதைப் புரியவைப்பதற்காக நிகழ்ச்சிகளை எழுதிக்காட்டாமல் பாத்திரங்களின் கூற்றாக உரையாடல்களை எழுதிக்காட்டுகிறார்.

முதல் நிகழ்வு ஸவிதாவின் மகன் நண்பர்களோடு ஒரு இரவு தங்குவதற்கு அனுமதிப்பது.

அம்மா, நாளைக்கு எங்க காலேஜில் எம்.எஸ்.ஸி. முடிச்சுட்டுப்போற ஸ்டூடண்ட்ஸுக்கெல்லாம்ப்ரேக்அப் பார்ட்டி நடக்கிறது.நான் நாளைக்குச் சாயங்காலம் வீட்டுக்கு வரமாட்டேன். ராத்திரி தங்கிட்டு அடுத்த நாள்தான் வருவேன்என்றான்.

சரிஎன்றாள் ஸவிதா. ஸௌம்யா அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

இப்படி அனுமதிப்பதை ஸௌம்யாவால் ஏற்கமுடியவில்லை. அக்காவிடம் தன் நிலைபாட்டைச் சொல்லியே விடுகிறாள்.

இப்படியெல்லாம் வீட்டை விட்டு வெளியே தங்க ஆரம்பிச்சுதான் இந்தநாள் பசங்க எல்லா வழக்கங்களையும் கத்துக்கறா. இல்லையா? சுருட்டு, கஞ்சா, குடி அப்புறம் கோஎட் வேற.. நான் இப்ப ராஜூவை ஏதும் பர்சனலாய்ச் சொல்லலே.”

புரிகிறது ஸௌமி. ஆனா காலம் மாறரதை நாம் தடுத்து நிறுத்திட முடியுமா?”

குழந்தைகளை நாம் தடுத்துக் காப்பத்தலாமே?”

உலகம்னா இப்படியெல்லாம் இருக்குன்னு தெரிஞ்சுண்டுதான் இந்த நாள் பசங்க வாழ்ந்தாகணும். அதுக்குமேல ஒழுங்காகவோ ஒழுக்கங்கெட்டோ நடந்துக்கறது அவா கையில இருக்கு.” 

எல்லாவிதத்திலும் ஒன்றுபோல இருப்பதாக நம்பும் சகோதரிக்குப் பிள்ளை வளர்ப்பில் வேறுவிதமான பார்வை இருக்கிறது என்பது முதல் இடறல். அவளுக்கு மேலும் இடறல்களையும் வேறுபாடுகளையும் காட்டுவனவாக இருப்பன கலை, இலக்கியம் பற்றிய பார்வைகள். குறிப்பாகச் சினிமா, பத்திரிகைகள், அவற்றில் வரும் கதைகள் போன்றவற்றில் ஆண் -பெண் உடல்கள், உறவுகள் குறித்த பார்வைகளில் வேறுபடுகிறார்கள்.

தங்கை ஸௌமியா, தான் எழுதிய கதையை அக்கா பாராட்டுவாள் என எதிர்பார்த்து அவளிடம் தருகிறாள். கதையை அதன் மொழிநடைக்காக ரசித்துப் பாராட்டும் அக்கா, அதன் விஷயம் பற்றிக் கேட்டபோது,

ரொம்ப அருமையாய் எழுதியிருக்கே ஸௌமி! நீ காலேஜில் இங்கிலீஷ்லே மெடலிஸ்ட்னு ஒவ்வொரு வரியும் சொல்றது. அற்புதமான நடை.”

நடை கிடக்கட்டும். விஷயம் எப்படி?”

ஸவிதா ஒரு கணம் தயங்கினாள். பிறகு, “நல்ல கதைதான், ஆனா நவீன ஃபேரி டேல்ஸ் மாதிரி இருக்குஎன்றாள்.

நம்மைச் சுத்தி எங்கே பார்த்தாலும் ஆபாசமும் பயங்கரமும் இருக்கறதனால எழுத்திலேயாவது நல்லதையும் தூய்மையையும் காட்டணுங்கிறது என் லட்சியம்.”

இருவரும் மௌனமானார்கள். அந்த மௌனம் ஸவிதாவின் நெஞ்சில் உறுத்தியது.

என எழுதுகிறார் சூடாமணி.  வாசிக்கும் பத்திரிகைகளில் கூடத் தீவிரத்தை எதிர்பார்க்கிறாள் தங்கை. ஆனால் எல்லாவற்றையும் வாசித்துவிட்டுக் கடந்துவிட வேண்டுமென நினைப்பவளாக இருக்கிறாள் அக்கா. அது வெளிப்படும் நிகழ்வாக அவர்கள் பார்த்த  சினிமாவைப் பற்றிய உரையாடல் எழுதப்பெற்றுள்ளது:

இப்படிப் பச்சையாய் எடுத்தால்தான் நல்ல படம்னு அர்த்தமா? இப்போதெல்லாம் சினிமா, இலக்கியம் எல்லாத்திலேயும் இந்தப் பச்சைத்தனம் ரொம்ப அதிகமாகி அசிங்கமாயிண்டு வரது. உனக்கு அப்படித் தோணலே?” என்றாள்.

நாம அசிங்கத்தை விட்டுட்டு அதிலெல்லாம் இருக்கக்கூடிய கதை, கலை முதலான நல்ல அம்சங்களை மட்டும் எடுத்துண்டு ரசிப்போம்.”

சினிமாவைப் பற்றிய பார்வையில் வேறுபாடுகள் வெளிப்படுவதுபோலவே சமூக நடப்பில் தனிமனிதர்கள் எடுக்கவேண்டிய பொறுப்புகள் குறித்தும் இருவரும் வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை வீட்டிற்கு வெளியே நடக்கும் நிகழ்வொன்றின் மூலம் காட்டுகிறார். அக்காள் உறுப்பினராக இருக்கும் மகளிர் சங்கத்தின் – லேடீஸ் கிளப்பின் – நிகழ்ச்சி நிரல் அது. அங்கே நடந்ததில் இருவரின் மனங்களும் விரிசலாக இருப்பதைச் சகோதரிகள் உணர்கிறார்கள்.

மன்றத் தலைவி ஸவிதாவிடம் அருகாமையில் உறைந்த ஓர் ஏழைப் பையனைப் பற்றி அன்று கூறினாள். கால் விளங்காத அவனைக் குடும்பத்தார் கைவிட்டார்களாம். பையன் படிக்க வேன்டும். அதைவிட முக்கியமாய்ச் சாப்பிட்டாக வேண்டும். அருகிலிருந்த ஒரு பள்ளிக்கூடக் காம்பவுண்டுக்குள் நாலைந்து நாட்களாகப் படுத்துக்கொண்டு அங்கிருந்து நகரமாட்டேனென்று அடம்பிடிக்கிறான். அவனது உடனடி விமோசனத்துக்காக மன்றத்தலைவி நிதி திரட்டிக் கொண்டிருந்தாள். “உங்களாலானதைக் கொடுங்கஎன்று அவள் கேட்டபோது ஸவிதா பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்தாள். “நீங்க?” என்று அப்பெண்மணி ஸௌம்யாவைப் பார்த்துக் குரலை நீட்டினாள். கணநேரம் தாமதித்த ஸௌம்யா ஒருதரம் சகோதரியை ஏறிட்டு விட்டுத் தன் பங்காக ஐந்து ரூபாயைக் கொடுத்தாள்.

வீடு திரும்பும் வழியில் ஸவிதா, “பாவம், இல்லே அந்தப் பையன்?” என்றபோது ஸௌம்யா உடனே பதில் சொல்லவில்லை.

என்ன ஸௌமி பேசாமலிருக்கே?”

என்ன பேசறது? பாவம். எனக்கு மட்டும் வருத்தமாயில்லேன்னு நினைக்கிறியா? ஆனா..”

ஆனா?”

இதெல்லாம் பெரிய பெரிய நிறுவன அடிப்படையில் சமாளிக்க வேண்டிய பிரச்சினை. தனி மனுஷா உதவியில் என்ன ஆகும்? நம்ம நாட்டில் வறுமை ஒரு அடியில்லாத பள்ளம். அதில் எத்தனை போட்டாலும் நிரம்பாது. அதனால், போட்டு என்ன பிரயோசனம்?”

அடியில்லாத பள்ளந்தான். போட்டு நிரம்பாதுதான். அதனால் போட்டவரைக்கும் பிரயோசனம்.”

சட்டென்று பேச்சு தொய்ந்தது. இருவரும் மௌனமாகவே வீடு வந்து சேர்ந்தனர்.

 

இந்த விரிசலின் உச்சமாகத் தங்கை நினைத்தது அக்காவிற்குக் கடவுள் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என்பதை அறிந்தபோதுதான்.

 

“ஆனா இங்கே பூஜை அறையே இல்லையே?” என்றாள் தொடர்ந்து.

“இல்லாட்டா என்ன? மனசிலேயே வேண்டிக்கோயேன். நம்பிக்கை இருந்தால் அது போதாதா?”

“நம்பிக்கை இருந்தால்னா? உன் நம்பிக்கை அந்த மாதிரின்னு சொல்றயா?” திடீரென்று ஸௌம்யாவின் முகம் மாறியது. “அல்லது உனக்கு நம்பிக்கையே இல்லைன்னு அர்த்தமா?”

“நான்… நான் அதைப்பத்தி ஏதும் யோசிச்சுப் பார்த்தது கிடையாது” ஸவிதாவுக்கு சங்கடம் மேலோங்கியது. “இப்போ எதுக்கு விவாதம் ஸௌமி, ஊருக்குக் கிளம்பற சமயத்திலே?”

“என்ன ஸவி இது! இவ்வளவு பெரிய விஷயத்தைப் பத்தி உனக்கு ஏதும் தீர்மானமான அபிப்ராயம் இல்லையா?”

கடவுளின் தேவை மற்றும் இருப்பு பற்றிய அக்காவின் தீர்மானமில்லாத  போக்குக்கு முன்னால் அப்பாவின் மீது கொண்டிருந்த பற்றும் உணர்ச்சிகரமான பிடிமானமும் தங்கைக்கு ஆச்சரியம் ஊட்டுகிறது.  அதனை வெளிப்படுத்தும் கருவியாக இருவருக்கும் கிடைத்த கட்ஜாடி இருக்கிறது.

சகோதரிகள் இருவரும் அவர்களின் அப்பாவை – அப்பாவின் நினைவை எப்படிப் பார்க்கிறார்கள் என்ற பார்வையோடு தொடர்புடையது அந்தக் கட்ஜாடி மீது கொண்ட பிடிமானம்.  மகள்கள் இருவரும் அப்பா வாங்கிவைத்திருந்த ஒரு ஜோடி கட்கிளாஸ் ஜாடிகளை ஆளுக்கொன்றாய் எடுத்துச் சென்று அவரின் ஞாபகமாய் வைத்துக் கொள்வது என்ற முடிவில் பிரித்திருந்தார்கள். அதனை ஸவிதா பாதுகாப்பாக அலமாரியின் மேல் வைத்திருந்தாள். அதைக் கீழே விழுந்துவிடும் விதமாகத் தன் மகன் மோதிவிட்டபோது பதறிப்போகிறாள். ஜாடி விழுந்து நொறுங்கியிருந்தாள் தனது உயிரே போனதாக நினைத்திருப்பேன் என்கிறாள். ஆனால் இதற்கு மாறாக ஸௌமியா அந்த ஜாடியை அழகாக இருக்கிறது என்று சொன்ன மாடிவீட்டுக்காரிக்கு   அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டேன் என்கிறாள்.

 உணவு, உடை, உறக்கம் எனப் பழக்கவழக்கங்கள் எதிலும் வேறுபாடுகள் இல்லாமல் வழக்கப்பட்ட இரண்டு பெண்கள் – சகோதரிகள் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்குப் போன பின்பு வேறுவேறாய் ஆகிப்போனார்கள் என்பதை நுட்பமாக எழுதிக் காட்டச் சின்னச் சின்ன நிகழ்ச்சிகளையும் அதனையொட்டி நடக்கும் உரையாடல்களையும் பயன்படுத்தும் சூடாமணி தனது சார்பு ஏதாவதொரு பாத்திரத்தின் பக்கம் இருக்கிறது என்பதாக க்காட்டிவிடவும் கூடாது என்பதிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்.

ஒன்றாய்ப் பிறந்து வளர்ந்தவர்கள்தான். ஒரே மரபினாலும் ஒரே வகையான பராமரிப்பாலும் உருவானவைதான் அவர்களுடைய எண்ணங்களும், கண்ணோட்டங்களும், மதிப்புகளும்! ஆனால் வளர வளர அவற்றில் எவ்வளவு மாறுபாடு? ஒவ்வொரு மனித உயிரும் ஓர் அலாதியா? அதன் தனிப்பட்ட தன்மையை ஒட்டித்தான் வாழ்க்கை எழுப்பும் எதிரொலிகள் அமைகின்றனவா? ஒருவரையொருவர் தெரியும் புரியும் என்று சொல்வதெல்லாம் எத்தனை அறிவீனம்? எவ்வளவு நெருங்கிய உறவாயிருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருத்தரையும் ஒரு புதிய இருப்பாகத்தான் கண்டு அறிமுகம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. காலம் கொண்டுவரும் மாற்றம் வெறும் நரை மட்டுமல்ல…

அன்பு… அது அடியிழை, உள்ளுயிர்ப்பு. அது இருப்பதாலேயே, வேறுபாடுகளினால் அழிவு நேர்ந்துவிடாதிருக்கத் தான் அது இருக்கிறது.

கதைசொல்லியான ஆசிரியர் கூற்றில் இப்படியொரு பத்தியை அவர் எழுதினாலும் சூடாமணியின் சார்பும் பார்வைக்கோணமும் எல்லாவற்றையும் அதன் போக்கில் ஏற்றுக் கொள்ளும் அக்காவின் பார்வையோடு நெருக்கம் கொண்டது என்பதைக் கதையை வாசிக்கும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால் தனது செயல் மறுபரிசீலனைக்குரியது என்ற கோணத்தில் அக்கா ஸவிதா எதனையும் நினைத்துக்கொள்வதில்லை. ஆனால் தங்கை ஸௌமியா ஒவ்வொரு நிகழ்வின் பின்னும் அப்படியான மறுபரிசீலனைகள மனதிற்குள் உருட்டிக்கொண்டே இருக்கிறாள்.

யாருடைய பார்வைக்கோணம் மறுபரிசீலனைக்குரியதாகவும் மாற்றம் செய்ய வேண்டியதாகவும் இருக்கிறது எனப் புனைவில் காட்டுவதில் – வேறுபடுத்தி எழுதுவதில் வெளிப்படுகிறது பெண்ணியப்பார்வை. இத்தகைய நிலைப்பாடுகளின் வழி ஆரவாரமில்லாமல் பெண்ணியச் சார்பு மேற்கொண்டவர் சூடாமணி என்பது அவரின் பல கதைகளில் வெளிப்பட்டிருக்கிறது.