பாலசந்தர் ட்ராமாவிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். எது நாடகம் என்பதில் இருக்கும் குழப்பங்கள் ஒரு பக்கம். நாடகக் கலை நம்பகத்துக்கும் நிரூபணத்துக்கும் இடையில் எப்போதும் இரு வேறாய்க் காணக்கிடைத்திருக்கிறது. வாழ்வாதாரக் கவலையற்ற மத்யமக் கண்களைக் கொண்டு, கவலைகள் என்று உணர்ந்தவற்றை நாடகமாக்கும் போக்கு சினிமாவின் செல்வாக்குக் காலத்தின் ஆரம்பத்தில் ஒரு இணை நிகழ்வாக நடந்தேறியது. மேடை நாடகங்கள் புராண இதிகாச ஒருமையிலிருந்து விலகி, திராவிட இயக்கத்தின் தோன்றல் காலத்தில் ஒரு தொடர் பிரச்சாரச் சாதனமாகவே நிலைபெற்றது.

அதே காலகட்டத்தில் சொந்த தாகத்துக்கான கானல் நீர்ச் சுனைகளைத் தேடி அலையும் அமெச்சூர் பாணி நாடக முயல்வுகள், குழுக்கள், அவற்றை நிகழ்த்துவோரில் தொடங்கி, சிறு சிறு தோன்று முகங்கள்வரை பலருக்கும் சமூக வாழ்வின் உள்ளிருந்தபடியே மிதமாய்த் தனித்தல் வாய்த்தது. சினிமாவுக்குக் கதைகள் தேவைப்பட்டன. வெற்றிகரமான நாடகங்கள் அவற்றுக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் கரவொலிகள் ஒரு முன்படத் தயாரிப்புக்கு நிகரான உத்தரவாதத்தை ஏற்படுத்தின. சினிமா மாயக் கயிற்றின் கண்ணுக்குத் தெரியாத விழுதொன்றைப் பற்றிக் கொண்டு அந்தர மரத்தில் ஏறிப் பறிக்க வேண்டிய கனி. திசையாவது, வெளிச்சமாவது தெரிவது நல்லதுதானே.

ஏஜி’ஸ் அலுவலகத்தில் அரசு சம்பளம் பெறும் வேலையிலிருந்து நட்சத்திர வனத்தின் ராஜராஜ நாற்காலிக்கு இடம் பெயர்ந்தவர் பாலசந்தர். அவர் பார்த்துப் பார்த்து வடிவமைத்த கமலஹாசன், போனால் போகிறதென்று வரவழைத்த ரஜினிகாந்த் இருவரும் தமிழ்த் திரை உலகின் இரண்டாம் முதலாம் இடங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். பாலசந்தர் பள்ளியிலிருந்து கிளம்பிச் சென்ற பல்லிகூட திரை பழகியதென்றே தமிழ் நிலம் நம்பிற்று. நாகேஷை, ஜெமினி கணேசனை, ஸ்ரீதேவியை, டெல்லி கணேஷை, ராதாரவியை, நாஸரை, சிவச்சந்திரனை, பிரகாஷ் ராஜை, ஏ.ஆர்.ரஹ்மானை எனத் தொடங்கி ஒரு பெரும் பட்டாளத்தை சொந்தம் கோருவதற்கான முழுத் தகுதி கொண்ட ஒருவராக பாலசந்தர் திகழ்ந்தார். மின் பிம்பங்களும், கவிதாலயாவும் திரையுலகச் சந்நிதானங்களகவே மதிக்கப் பெற்றன.

தன் பாணியைத்தானே கலைத்தபடி அடுத்ததைத் தேடும் தீரா ஆர்வம் கொண்டவர் பாலசந்தர். எதிர்பாராத மற்றும் விதவிதமான சேர்மானங்களைப் படங்கள் தோறும் முயன்று பார்ப்பவர். அந்தவகையில் மரகதமணியின் இசையில் மம்முட்டி, மதுபாலா, பானுப்ரியா, கீதா, இவர்களையெல்லாம் கொண்டு பாலசந்தர் எடுத்த அழகான திரைப்படம் அழகன். நிகழ்தலும், நெகிழ்தலும் கலந்த கதாமுறையைத் தன் படங்களுக்குள் முயன்றுகொண்டே இருந்தார் பாலசந்தர். குடும்பம் எனும் அமைப்பின் சகல அங்கங்களையும் முரண்பட்டு மீறுவதன் மூலமாக அவ்வமைப்பின் உட்புறப் புரையோடல்களைத் தன் படங்களின் மூலமாக தொடர்ந்து சாடினார்.

சின்னஞ்சிறிய குழந்தைகளுடன் வசித்து வரும் அழகப்பன் தன் கடின உழைப்பால் முன்னேறிய ஓட்டல் அதிபர். மனைவியை இழந்தவரான அழகப்பன் வாழ்வில் அடுத்தடுத்து மூன்று பெண்கள் அவர் மீதான அன்புவிருப்பத்தோடு நுழைகிறார்கள். ஒருவள் கல்லூரி மாணவி, அடுத்தவளோ நடனத் தாரகை, மூன்றாமவர் ட்யூடோரியல் ஆசிரியை. இந்த மூவருக்கும் அழகப்பனுக்கும் இடையிலான பரிச்சயம் பந்தம் என்னவாகிறது நடனத் தாரகைக்கும் அவனுக்கும் ஒருங்கே மலரும் காதல் எங்கனம் வாழ்வில் அவர்கள் இணைகிறார்கள் என்பதையெல்லாம் கதையாகக் கொண்ட படம் அழகன். சின்னச்சின்ன உணர்வுகள் காதலின் ஊசலாட்டங்கள் சொல்ல முடியாத அன்பின் கனம் எதிர்கொள்ளக் கடினமான அன்பின் வெளிப்பாடுகள் இத்தனையும் கலந்து பிசைந்த நிலாச்சோற்றுக் கலயம்தான் அழகன்.

மதுபாலாவின் உற்சாகமும் கீதாவின் உலர்ந்த மேலோட்டமான அணுகலும் பானுப்ரியாவின் தனித்துவக் கோபமும் திரைக்கதையிலிருந்து படமாக்கப்பட்டதுவரை நன்கு இயங்கின. சாதாரண அறிதல், பிரிதல், சேர்தல் கதைபோலத் தோற்றமளித்தாலும் கவிதை பொங்கும் கணங்களினாலும் அழகனை அழகுபடுத்தினார். மரகதமணியின் இசையும் வைரமுத்துவின் வரிகளும் அழகனின் அணிகலன்களாயின. துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி என்ற பாடலும் தத்தித்தோம் பாடலும் சித்ராவின் குரலில் பிரமாதமாய் ஒலித்தன. சாதி மல்லிப் பூச்சரமே மழையும் நீயே நெஞ்சமடி நெஞ்சம் இவையாவும் எஸ்.பிபாலசுப்ரமணியத்தின் குரலால் மிளிர்ந்தன. அழகன் படத்தின் அடையாளப்பாடலாகவே ஒரு இரவெல்லாம் மம்முட்டியும் பானுப்ரியாவும் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருக்க பின்னணியில் ஒலிக்கும் மாண்டேஜ் பாடலான சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா பாடல் உருக்கொண்டது.

கோவை செழியனின் தயாரிப்பில் பாலச்சந்தர் இயக்கிய அழகன் எக்காலத்திற்குமான காதல் படங்களின் வரிசையில் நிச்சய இடம் வகிக்கும் நற்படம்.