வரும் 23ஆம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நிறுத்த மாவட்ட சங்க பதிவாளர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நடிகர் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் களமிறங்கியது. தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பாரதி பிரியன் உள்ளிட்ட 61 பேர் சங்கங்களின் பதிவாளரிடம் புகார் அளித்திருந்தனர். இந்தப் புகாரின் பெயரில் உரிய விளக்கம் அளிக்கக்கோரி நடிகர் சங்கத்துக்குப் பதிவாளர் கடந்த 14ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

விதிகளை மீறி உறுப்பினர்களை நீக்கியது தொடர்பாக நடிகர் சங்கத்திற்கு மாவட்ட பதிவாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தேர்தலில் அதிக குளறுபடிகள் உள்ளதால் தேர்தலைத் தற்காலிகமாக நிறுத்த மாவட்ட சங்க பதிவாளர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் வாக்களிக்கத் தகுதி உள்ள வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்ய வேண்டியுள்ளதாகவும், அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும்வரை தேர்தலை ஒத்திவைக்கவும் மாவட்ட சங்க பதிவாளர் அலுவலகம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. தேர்தலை நிறுத்த தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நடிகர் சங்க தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்துவதாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மநாபன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முன்னதாக நடிகர் சங்கத் தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எம்.பி, எம்.எல்.ஏ தேர்தலை விட நடிகர் சங்கத் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவது கவலை அளிப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.