நசைநன் குடையர் தோழி ஞெரேரெனக்
கவைத்தலை முதுகலை காலின் ஒற்றிப்
பசிப்பிணிக் கிறைஞ்சிய பரூஉம்பெருந் ததரல்
ஒழியின் உண்டு வழுவி னெஞ்சிற்
றெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி 5
நின்றுவெயில் கழிக்கு மென்பநம்
இன்றுயில் முனிநர் சென்ற வாறே.
ஒரு பெரிய பாலைவனம்.
வெயில் கொளுத்துகிறது.
அந்தப் பெரிய பாலைவனத்தில், கொளுத்துகிற வெயிலில் ஒரு மான் குட்டி இரை கடித்துக் கொண்டிருக்கிறது.
அந்த மான்குட்டியின் அப்பா ஒரு மரத்தின் மேல் தன் முன்னத்திக் கால்களை எக்கிப்போட்டு எக்கிப்போட்டு கிளைகளைத் தாழ்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறது. தாழ்ந்த அந்தக் கிளை ஒடிகிறது. ஒடிந்த அந்த மரக்கிளையை அந்த ஆண்மான் தன் காலால் உதைத்து உதைத்துப் பட்டைகளைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது.
அந்த மரம் இலைகளையெல்லாம் உதிர்த்திவிட்டு அது மொட்டை மரமாக நின்று கொண்டிருக்கிறது.
அந்த ஆண்மானுக்கு வயதாகிவிட்டது. அந்த ஆண்மானின் தலையில் கொம்புகள் கிளைகிளையாக வளர்ந்து முற்றியிருக்கின்றன.
மான்குட்டி சிதைந்த பட்டையைக் கடித்துக்கொண்டிருக்கிறது.
தங்கள் குட்டி பசியாறுவதை அப்பாவும் அம்மாவும் பாசத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
“குட்டி திங்கட்டும்.குட்டி தின்னது போக மிச்சம் இருந்தால் திங்கலாம்” என்று தாயும் தந்தையும் பசியோடு பொறுத்திருக்கிறார்கள்.
அந்தப் பாலைவனத்தில் வெயில் கொல்லு கொல்லென்று கொல்லுகிறது.
தாய் மான் அந்தக் கடுமையான வெயிலில் நின்றுகொண்டிருக்கிறது. அதன் காலடியில் விழுந்துகிடக்கிற சிறிய நிழலில் அந்த மான்குட்டி நின்று கொண்டிருக்கிறது.
கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்
குறுந்தொகை 213