இவனிவ ளைம்பால் பற்றவும் இவளிவன்
புன்றலை யோரி வாங்குநள் பரியவும்
காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிரா
தேதில் சிறுசெரு வுறுப மன்னோ
நல்லைமன் றம்ம பாலே மெல்லியல் 5
துணைமலர்ப் பிணைய லன்னவிவர்
மணமகிழ் இயற்கை காட்டி யோயே.
ஒரு பெரிய பாலைவனம்.
அந்தப் பாலைவனத்தில் அது நடூ மத்தி.
ஒரு காதல் ஜோடி நடந்து போய்க்கொண்டிருக்கிறது. தெற்கே இருந்து வடக்காமல் அவர்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு தாத்தாவும் ஒரு பாட்டியும் வடக்கே இருந்து தெற்காமல், அந்தக் காதல் ஜோடிக்கு எதிரே வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த இளம் காதல் ஜோடியைக் கூர்ந்து பார்க்கிறார்கள். தாத்தாவும் பாட்டியும் அந்த இளம் காதல் ஜோடி, இன்னார் இன்னாருடைய பிள்ளைகள் அவர்கள் எனது அடையாளம் தெரிந்து கொள்கிறார்கள்.
பாட்டி சொல்கிறாள்..
இந்தப் பெண் சிறுமியாக இருந்தபோது இவன் தலைமுடியை ஐந்து பகுதியாகப் பிரித்து அழகாகப் பின்னி அழகாகச் சடை போட்டிருக்கும்.
இந்தப் பையன் சிறுவனாக இருந்தபோது இவள் சடை முடியைப் பிடித்து இழுத்துச் சண்டை போடுவான்.
இவள், இவன் தலைமுடியைப் பிடித்து இழுப்பதற்காக இவனை முடுக்கிக் கொண்டு ஓடுவாள்.
காரணமே இல்லாமல் இவர்கள் ரெண்டுபேரும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
இவர்களை வளர்க்கிற செவிலித் தாயார்கள் இவர்கள் போடுகிற சண்டையை விலக்குப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். இந்தச் செவிலித் தாயார்களால் இவர்கள் சண்டையை ஒருநாளும் தீர்த்து வைக்க முடிந்தது இல்லை.
இவர்கள் வளர்ந்து பருவ வயதுக்கு வந்த இப்போது காதல் இவர்களைச் சேர்த்து வைத்திருக்கிறது. பெற்றோர்களுக்குத் தெரியாமல் இவர்கள் கண்காணாத தேசத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
ஊழ்வினை இவர்களிடம் எப்படி விளையாடியிருக்கிறது?
மோதாசனார்
குறுந்தொகை 229