உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,
அது கழிந்தன்றே- தோழி!- அவர் நாட்டுப் 5
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,
பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே.

ஒரு மாமரம் எங்கள் ஊருக்கு மத்தியில் இருக்கிறது. அந்த மாமரத்தில் ஒரு பெரிய வவ்வால் குடியிருக்கிறது.

அந்தப் பெரிய வவ்வால் அந்த மாமரத்தில் ஒரு உச்சாணிக் கொப்பில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

அந்தப் பெரிய வவ்வால் உறங்கிக் கொண்டே ஒரு கனவு கண்டுகொண்டிருக்கிறது.

‘அழிசி’ என்று ஒரு சோழ அரசன் ஆர்க்காடு அவனுடைய நகரம். ஆர்க்காட்டுக்குப் பக்கத்தில் ‘அழிசி’ மன்னனுக்குச் சொந்தமான ஒரு பெரிய காடு இருக்கிறது.

அந்தப் பெரிய காட்டில் ஏகப்பட்ட நெல்லிமரங்கள் இருக்கிறது. அந்த நெல்லி மரங்கள் காய்த்திருக்கின்றன.

அந்த நெல்லிக்காய்கள் முற்றிக் கனிந்திருக்கின்றன. அந்தப் பெரிய வவ்வால் ஒரு பெரிய நெல்லிமரத்தில் உக்காந்திருக்கிறது.

அது நல்ல நெல்லிக்கனிகளைத் தேர்ந்தெடுத்துத் தேர்ந்தெடுத்துத் தின்று கொண்டிருக்கிறது. அந்த நெல்லிக்கனிகளின் ருசியான புளிப்புச் சுவையை அந்தப் பெரிய வவ்வால் ரசித்து ரசித்துத் தின்று கொண்டிருக்கிறது.

வவ்வால் கனவு கண்டதுபோல் நானும் ஒரு கனவு கண்டேன்.

நான் என் தலைவனோடு கூடி முயங்கி நான் மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

நக்கண்ணையார்
நற்றிணை 87