நீர்கால் யாத்த நிரையிதழ்க் குவளை
கோடை ஒற்றினும் வாடா தாகும்
கவணை அன்ன பூட்டுப்பொரு தசாஅ
உமணெருத் தொழுகைத் தோடுநிரைத் தன்ன
முளிசினை பிளக்கு முன்பின் மையின் 5
யானை கைமடித் துயவும்
கானமும் இனியவாம் நும்மொடு வரினே.

ஒரு பாலைவனம்.

அந்தப் பாலைவனத்தில் ஒரு ஒத்தையடிப் பாதை.

அந்தப் பாதை நெடுகிலும் மரங்கள் வரிசையாக நிற்கின்றன.

ஒரு யானை அங்கே வேகமாக வந்து கொண்டிருக்கிறது.

அது ஒரு பெரிய ஆண் யானை.

அந்த யானை ஒரு பெரிய மரத்தில் ஒரு கிளையை ஒடிக்கிறது. அந்தக் கிளை ஒடியவில்லை.

அந்தப் பெரிய யானையால் அந்த மரத்தில் ஒரு கிளையைக்கூட ஒடிக்க முடியவில்லை.

அது பட்ட மரம்.

அங்கே வரிசையாக நின்று கொண்டிருக்கிற எல்லா மரங்களும் பட்ட மரங்கள்தான்.

அந்த யானை தாகத்தோடு இருக்கிறது. அது பசியோடு இருக்கிறது. அது களைத்துப் போய் இருக்கிறது. பெலம் குறைந்துபோய் இருக்கிறது அந்தப் பெரிய யானை.

அது தன் நீளமான தும்பிக்கையைச் சுருட்டி வைத்துக்கொண்டு வருத்தத்தோடு நின்று கொண்டிருக்கிறது.

ஒளவையார்
குறுந்தொகை 388