வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து,
குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து,
உள்ளினென் அல்லெனோ யானே- ‘முள் எயிற்று, 5
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்,
எமதும் உண்டு, ஓர் மதிநாட் திங்கள்,
உரறு குரல் வெவ் வளி எடுப்ப, நிழல் தப
உலவை ஆகிய மரத்த
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது’ எனவே? 10

ஒரு பெரிய பாலைவனத்தில் நான் நடந்து போய்க் கொண்டிருக்கிறேன்.

அது ஒரு இரவு நேரம்.

நான் வானத்தை அண்ணாந்து பார்க்கிறேன்.

ஒரு முழு நிலவு மலைகளுக்கு மேல் ஊர்ந்து ஊர்ந்து அழகாகப் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த முழு நிலவைப் போல் என் மனைவியும் ஒரு முழு நிலவுதான். வட்டமும்… ஒளி வீசும் பற்கள்… நறுமணம் கமழும் சிறிய நெற்றி. என் மனைவி அவள் நெற்றியில் வரைந்திருக்கிற அழகான திலகம்.

எங்கள் மலைமேல் இருக்கிறது எங்கள் ஊர். எங்கள் ஊர் மரங்கள் எல்லாம் இலைகளையெல்லாம் உதிர்த்தி விட்டு மொட்டையாக நின்று கொண்டிருக்கின்றன.

காற்று எங்கள் ஊரில் இரைச்சல் போட்டுக்கொண்டுபலமாக வீசுகிறது.

ஒரே ஒரு ஒத்தக் கல்லில் உயரமாக ஓங்கி வளர்ந்திருக்கிறது எங்கள் மலை. உயரமான எங்கள் மலைக்கு மேல் இருக்கிறது எங்கள் கிராமம். உயரமான எங்கள் மலை மேல் இருக்கும் எங்கள் கிராமத்தில் இருக்கிறாள் முழு நிலவைப் போல் என் இளம் மனைவி.

ஒரு பெரிய பாலைவனத்தில் நான் நடந்து போய்க்கொண்டிருக்கிறேன்.

இளங்கீரனார்
நற்றிணை 62