கேளாய், எல்ல தோழி! அல்கல்
வேணவா நலிய, வெய்ய உயிரா,
ஏ மான் பிணையின் வருந்தினெனாக,
துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை,
‘துஞ்சாயோ, என் குறுமகள்?’ என்றலின், 5
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்,
‘படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின், பரல் அவல்,
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ?’ என்றிசின், யானே. 10

“தோழி…”

“கேள்…”

“நேத்து இரவு நான் உறங்கவே இல்லை…”

“எனக்கு அவன் நினைப்பாகவே இருக்கிறது.”

“பெருமூச்சு விட்டுக்கிட்டு நெளிந்து கொண்டும் புரண்டு கொண்டும் காதல் வலியில் நான் துடித்துக் கொண்டிருந்தேன்.”

“அம்பு பட்ட ஒரு பெண் மான்… வலியில் அது எப்படித் துடிக்கும்?”

“நான் அப்படித் துடித்துக் கொண்டிருந்தேன்.”

“உறங்காமல் நான் நெளிந்து கொண்டும் புரண்டு கொண்டும் வருவதைப் பார்த்து எங்க அம்மா முழிச்சிட்டாவ…”

“எங்க அம்ம எங்ட்டக் கேக்காவ…”

“நான் பெத்த என் செல்லம். நீ இன்னும் ஒறங்கலையாம்மா…”

“எங்க அம்மைக்கு நான் என்ன பதில் சொல்வே?”

“எங்க அம்மைக்கு நான்சொல்ல வேண்டிய பதிலை, மெல்லமாய், ரொம்ப்ப ரொம்ப்ப மெல்லமாய் நான் என் மனசுக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன்..”

“பெரிய மலைகளும் பெரிய காடுகளும் சூழ்ந்த ஒரு பெரிய நாட்டை ஆளுகிற ஒரு பெரிய தலைவனைக் காதலிக்கிற உன் மகளுக்கு ஒறக்கம் வருமா அம்மா?

சிறுமோலிகனார் 
நற்றிண61