யான் அஃது அஞ்சினென் கரப்பவும், தான் அஃது
அறிந்தனள் கொல்லோ? அருளினள் கொல்லோ?
எவன்கொல், தோழி! அன்னை கண்ணியது?
”வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன்,
ஆர் கலி வானம் தலைஇ, நடு நாள் 5
கனை பெயல் பொழிந்தென, கானக் கல் யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்;
தண்ணென உண்டு, கண்ணின் நோக்கி,
முனியாது ஆடப் பெறின், இவள் 10
பனியும் தீர்குவள், செல்க!” என்றோளே!

என் சேக்காளியும் நானும் எங்கள் வீட்டில் பல்லாங்குழி வெளையாண்டுக்கிட்டு இருக்கோம்.

எங்க அம்ம எங்கள்ட்டச் சொல்லுதாவ…

“விடிய விடிய மழ… இரவு பூராவும் இடி முழங்கிக்கிட்டேதான் இருந்தது… சாமத்துக்குப் பெறகு மழ பெலம்மாய் பிடிச்சிக்கிட்டுது…”

“வெள்ளம் ஆற்றில் பெருவாரியாய் போகுது… அந்தப் பெருவாரி வெள்ளத்தில் ஆற்றில் தண்ணியே தெரியாமல் பூக்கள் மிதந்துக்கிட்டுப் போகுது…”

இது

புதுமழ.

இது

புது வெள்ளம்.

“எம்மகா தொடை நடுங்கியாருக்காள்… இப்படித் தொடை நடுங்கியாவா இருப்பாள் ஒரு கொமரி…”

“சேக்காளிகள் ரெண்டு பேரும் நீங்க குளிக்கப் போங்க…”

“இந்தப் புதுவெள்ளம் மனிதர்களுக்கு நல்ல மருந்து…”

“நீங்க ரெண்டு பேரும் ஒங்க ரெண்டு கைட்டும் புதுத் தண்ணிய கை நெறையா அள்ளிக் குடிங்க…”

“வயிறு குளுந்தாக்கல இருக்கும்…”

“வெள்ளத்தில் முங்கிக் குளிங்க…”

“வெள்ளத்தில் நீந்தி விளையாடுங்க…”

“கண்ணு செவக்கிறவரைக்கும் குளிங்க…”

“சேக்காளியும் சேக்காளியும் கண்ணு செவக்கக் குளிச்சிட்டு மலையில் இருக்கிற மரங்களையெல்லாம் பாருங்க… செடிகளையும் பாருங்க… மலையெங்கும் கொடி வீசிப் படர்ந்திருக்கிற பச்சக்கொடிகளையும் பாருங்க…”

“நிதானமாக நின்னு பொறுமையாய் பாருங்க…”

“பொறுமையாக் குளிச்சிட்டுப் பொறுமையா வாங்க…”

“எம்மகளத் தொடை நடுங்கவைத்துக்கொண்டிருக்கிற நோய்கள் எல்லாம் ஓடிப்போய்ரும்…”

மிளைக்கிழான் நல் வேட்டனார்
நற்றிணை 53