சினிமா யதார்த்தம் என்பது எப்போதும் கேள்விக்குரியது நிஜநிகர் என்ற ஒன்று சினிமாவில் இல்லவே இல்லை.
-க்ரிஸ்பின் க்ளோவர்
சினிமா எதையும் பூடகமாய்ச் சொல்லும். நேரடியாகப் பேசுவதன் கடினத்தை அனாயாசமாகக் கையாளும். அது தனி மனிதர்களின்மீது எய்யப்படும் ஒற்றை அம்பைப்போலத் தோற்றமளித்தாலும்கூட நிசத்தில் அது கூட்டத்தின்மீது கட்டவிழ்க்கப் படுகிற கண்ணீர்ப்புகைக் குண்டினை ஒத்தது. சினிமா காலம் கடந்த பிற்பாடும் கேள்வியெழுப்பும். அது ஒரு நிழல் நீதி மன்றம்.
இயல்புக்கு அருகே சினிமா உருவாக்கம் வருகையில் நல்லதோர் யதார்த்தப் படம் உண்டாகிறது. எதிர்பார்ப்புக்கு மேலாக நிசத்தின் அருகே அமர்விக்கப்படுகையில் கண்ணுறும் ரசிகன் விதிர்விதிர்க்கிறான். மற்ற எந்தக் கலையின் விளைதல்களைவிடவும் சினிமா மூலமான பண்படுத்துதலுக்கான பலாபலன் அதிகம். மேலும் சினிமா மக்களுக்கு என்றென்றும் ப்ரியமான ஊடகம். அதனை விஞ்ச அடுத்தவோர் கலை இன்னும் உருவாகவில்லை என்பதே நிதர்சனம்.
சமூகம் விடாப்பிடிவாதத்தோடு பற்றிக் கொண்டிருக்கிற தவறான பிடிமானங்களினின்றும் மெல்லிய சேலையை முட்பரப்பினின்றும் சின்னதொரு கிழிசலும் ஏற்பட்டுவிடாமல் அகற்றுவதுபோலவே வெகுதூரம் அழைத்துச் செல்கிற வேலையைப் பண்பாடும் கலாச்சாரமும் நிரந்தர முழக்கங்களாக வைத்திருக்கின்றன. அப்படியான முழக்கங்களை மீண்டுமீண்டும் நிகழ்த்துவதற்கு உபயோகமாகும் தொடர்சாலையாகவே அடுத்தடுத்த சினிமாக்களின் வருகை தேவையாகிறது. மாபெரிய மாற்றத்துக்கு ஒற்றை சினிமா போதவே போதாது.
சினிமா என்பது மறைமுகமாகவும் நேரடியாகவும் சரி மற்றும் தவறு ஆகிய இரண்டு தரப்புக்களை ஓங்கி ஒலிப்பதான பிரச்சாரத்தைவிடாமல் செய்தவண்ணம் இருந்தே ஆகவேண்டும் அல்லாமற்போனால் சமூகம் தன்மீது குறித்த காலங்களில் பெய்ய வேண்டிய குளிர்மழை அற்றுப்போய் வெம்மையின் உக்கிரத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுக்கவேண்டி வரும்.
சாதிகளுக்கு இடையில் நிரந்தரமாய்ப் பேணப்பட்டு வருகிற பகையும் ஒவ்வாமையும் நாடெங்கிலும் சாதி ஆணவத்திற்குப் பலியானவர்களின் கண்ணீர்வற்றாத கதைகளும் சமூகத்தின் எல்லா மௌனங்களையும் எப்போதும் ஆட்சேபித்த வண்ணம் பல கலைகளின் மூலமாகவும் வெளிப்பட்ட வண்ணமே இருக்கின்றன. கலை என்பது ஒரு போராட்ட முறை. கலை என்பது கலகம். எல்லாவற்றுக்கும் மாறாகக் கலை என்பது இன்றளவும் தீர்ந்திடாத வழக்குகளின் மேல் முறையீடு. கலை என்பது சமரசத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்திடாத கொள்கைவாதியின் வினா.
ஒயின் ஷாப் அதிபரின் செல்ல மகள் ஐஸ்வர்யாவுக்கும் மெகானிக் முருகனுக்கும் இடையில் பதின்பருவத்தின் கடைவாசலில் அன்பு பூத்துக் காதலாகிறது. வழியற்ற வழியில் திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டுச் சென்னை செல்கின்றனர். பெண்ணின் உறவினர்கள் நைச்சிய மௌனத்தோடு புதுமணத் தம்பதியினரை அன்போடு அரவணைப்பதுபோல பாசாங்கு காட்டித் தங்களூருக்கு அழைத்து வருகின்றனர். முழுவதும் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தை நெருங்கியவுடன் அவளது தாலி பறிக்கப்படுகிறது. அவளைக் காதலித்துக் கல்யாணம் செய்தவன் அடித்து நொறுக்கப்பட்டு அவனுடலில் உயிர் மட்டும் எஞ்சுகிறது. தான் யாரென்பதையே மறந்த முருகன் நினைவுகளை இழந்து மனம் பிறழ்ந்து வாழ்வு சிதைந்து பைத்தியமாய்க் காணக்கிடைக்கிறான். தன் கணவன் குழந்தை சகிதம் அந்தச் சாலையில் எதிர்ப்படும் ஐஸ்வர்யா முருகனின் நிலை கண்டு அழுதுவெடிக்கிறாள். காதல் திரைப்படம் முற்றுப்பெறுகிறது.
பாலாஜி சக்திவேலின் படைப்பு நேர்மையும் சமரசம் செய்துகொள்ளாத உருவாக்கத் திறனும் காதல் படத்தை உலகளவிலான ஒன்றாக நிகழ்த்தின. ஷங்கரின் எஸ். பிக்சர்ஸ் சார்பாக பாலாஜி சக்திவேல் எழுதி இயக்கிய காதல் படத்திற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்திருந்தார். நா முத்துக்குமாரின் எழுத்தில் உனக்கென இருப்பேன் சாகாவரப் பாடலாயிற்று. விஜய் மில்டன் ஒளிப்பதிவு உன்னதமான இருளாகவும் இயல்பான ஒளியாகவும் காணவாய்த்தது.
தண்டபாணி க்ரூரமான வில்லனாகத் தோற்றமளித்தார். பரத், சந்தியா இருவருக்கும் இடையே உலர்மலராகக் காதல் காண்பவர் நம்பகங்களின் நிரம்பிற்று. சுகுமார் சரண்யா பசங்க சிவக்குமார் ஆகியோரும் குறித்த நடிப்பை நல்கிச் சிறந்தார்கள்.
சாதி ஆணவம் ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் விட்டு அகல வேண்டிய காட்டுமிராண்டித் தனம். அடுத்தடுத்த காலத்திற்குத் தன் மனமறைபொருளாக சாதியை மேலெழுதி வருவதும் சின்னஞ்சிறிய பிஞ்சுகளின் மனதிலும் சாதி நஞ்சைவிடாமல் புகட்டிவருவதும் ஒப்புக்கொள்ளவே முடியாத செயல்பாடுகள். என்றைக்கு மனிதன் முழுவதுமாய் சாதியினின்றும் அகலுகிறானோ அன்றைக்குத்தான் இருளற்ற புதிய ஒளியை அவனடைவதாகப் பொருள். சாதியின் வன்மத்தை காதல் திரைப்படம் உண்மைக்கு மிக நெருக்கமாக ஒளி பாய்ச்சிற்று.
முந்தைய தொடர்: https://bit.ly/2y9nKt7