தமிழில்: கனியமுது மொழி
கி.மு.84—54 கால கட்டத்தில் ரோமானியக் குடியரசில் வாழ்ந்த லத்தீன் மொழிக் கவி காடுல்லுஸ். வெரோனா அருகில் உள்ள கார்டா எரிக்கருகில் சிர்மியோ என்னும் இடத்தில் இவரது குடும்பம் வசித்தது. இவரது அப்பா ஜூலியஸ் சீசரிடம் மகிழ்வூட்டும் கலைஞராக இருந்தார். இவரது இளமைக் காலம் முழுவதும் ரோமில் கழிந்தது. அவரது கவிதைகளில் சிசரோ, சீசர், பொம்பி பற்றிய தகவல்கள் இருக்கின்றன.
ரோமில் இருந்த போது அவரது கவிதைகளில் வரும் “லெஸ்பியா” என்னும் பெண்ணின் மேல் ஆழ்ந்த காதல் கொண்டார். கிளாடியா மெட்டலி என்னும் பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான பெண்ணே லெஸ்பியா என அடையாளம் காணப்பட்டிருக்கிறார். கிளாடியாவுக்கு, காடுல்லுஸ் உட்பட ஐந்து காதலர்கள் இருந்திருக்கிறார்கள். கி.மு.59ல் கிளாடியாவின் கணவர் மர்மமான முறையில் இறந்தார். வீட்டிலேயே விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாகவும் ஒரு குறிப்பு இருக்கிறது கிளாடியாவின் வெளிப்படையான புறக்கணிப்பையும் மீறி அவருடன் ஆழமான, நிரந்தரமான் உறவை ஏற்படுத்த காடுல்லுஸ் விரும்பினார். ஆனால் இந்த உறவால் காடுல்லுஸ், உளவியல் ரீதியாக மிக ஆழமாகப் பாதிக்கப்பட்டிருப்பதை அவரது கவிதைகளில் காண முடிகிறது.
கிளாடியாவின் இரவு கடற்கரை விருந்துகளும் காதலும் பிரபலமாக பேசப்பட்ட தருணத்தில் அவரைப்பற்றி எழுதிய இக்கவிதைகள் அதிக கவனத்தை ஈர்த்தன. கிளாடியா தன் முனைப்புடைய அழகான சுதந்திரமான பெண் என்பதே கவியின் ஈர்ப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம் . இவ்வளவு காதலையும் நேசத்தையும் தாங்க முடியாமல்தான் இவர் தனது முப்பதாவது வயதில் மரணமடைந்திருப்பார்.
இவரது 116 கவிதைகள் 14 ம் நுற்றாண்டில் மீட்டெடுக்கப்பட்டது . இவற்றுள் 60 சிறிய கவிதைகள் நவீன கவிதைகளின் கூறுகளை உள்ளடக்கி இருந்ததால் பலரையும் ஈர்த்தன. இவரது காமக்கிளர்வுக் கவிதைகள் இவரது உற்சாகமான உள்ளுணர்வுகளைப் பிரதிபலிப்பவை. இவரது உணர்ச்சிகளின் வீச்சும் பரப்பும் வசீகரமானது. இவையெல்லாம் இவர் லெஸ்பியா மீதிருந்த தனது காதலை வெளிப்படுத்தி எழுதிய கவிதைகளில் மிகவும் துல்லியமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
1
சிட்டுக் குருவி, ஓ, லெஸ்பியாவின் இனிய பறவையே
உன்னை அவள் பக்கத்தில்
வைத்திருக்கிறாள் அவளது மார்பைத்
தடவிக் கொடுக்க, மகிழ்ச்சியுடன் அதற்கு அவள்
ஒரு அமைதியற்ற விரலைத் தருகிறாள்,
கொத்திக் கடிக்க, சிறிய காயங்கள்,
எப்பொழுதாவது எனது தீயாய் சுடுகிற சீமாட்டிக்கு
பெருவிருப்பின் இனிய வலியிலிருந்து கவனம் திரும்ப வேண்டுமெனில்
ஓ, அதை நானே உன்னுடன் விளையாட முடியும்
சின்னஞ்சிறு சிட்டுக்குருவியே, எனது எண்ணங்களை
நீ கசப்பிலிருந்து விடுதலை செய்.
2
லெஸ்பிய வா நாம் காதலித்து வாழ்வோம், இந்தத் துஷ்டக்
கிழ முட்டாள்களின் இழிந்த உளறல்களுக்குச் செவிடாய் இருப்போம்
சூரியன் தினமும் மேலெழுந்து வரலாம்
ஆனால் நமது நட்சத்திரம் உதித்து விட்டால் நமது இரவு முடிவற்று
என்றென்றும் நிலைத்திருக்கும் மேலும்
எனக்கு ஓராயிரம் முத்தங்களைக் கொடு மேலும் ஒரு நூறு
மீண்டும் மேலுமொரு ஓராயிரம், மேலும் இன்னும் ஒரு நூறு
இன்னுமொரு ஆயிரம் மீண்டும் ஒரு நூறு அதிகமாக
நாம் இந்தக் காதலின் ஆயிரமாயிரம் முத்தங்களை முத்திக் கொண்டிருக்கையில்
நாம் நமது பாதையை இழப்போம்; நமது மறதியில் நாம் தவிர்த்து விடுவோம்
நம்மைக் கண்காணிக்கும் முட்டாள்தனமான கெட்ட விவசாயிகளின் கண்கள்
எத்தனை முத்தங்களை நாம் முத்திக்கொண்டோம் என்று .
எண்ணிக் கண்டுபிடிக்கும் பசியோடிருக்கின்றன.
3
லெஸ்பியா, நான் பைத்தியம்
என் மூளை முற்றிலுமாக திருகிவிட்டது
உன்னை வழிபடும் இந்த திட்டத்தினால்
மேலும் உன்னை அடைதல்
மேலும் இப்பொழுது அது வெறுப்பில் ஆவேசமாகப் பறக்கிறது
நீ நலமாக இருக்கிறாய் என்னும் வெறும் எண்ணத்தால்,
மேலும் அதே சமயம், நாம் உதவ முடியாது, ஆனால் தேடுகிறது
கற்பனைக்கெட்டாத ஒன்றை–
உனது பிரியம். இது தொடர்ந்து
வேட்டையாடிக் கொண்டே இருக்கும், அதன் பொருள்
என்னை முற்றிலும் அழித்தொழிப்பது என்றாலும் கூட.
4
என் இனிய லெஸ்பியா
என் இனிய லெஸ்பியா, நாம் வாழ்வோம் காதலிப்போம்,
நம்முடைய செயல்கள் சாதுர்யமானதாக இருப்பினும்,
அவைகளை நாம் பொருட்படுத்த வேண்டாம். சொர்க்கத்தின் மாபெரும் விளக்குகள் அவற்றின் மேற்கில் மூழ்கிவிடுகின்றன, மீண்டும் புதுப்பித்து நேர்செய்கின்றன,
ஆனால் நமது சின்னஞ்சிறு விளக்கு மறைந்தவுடன்,
பிறகு நாம் எப்போதும் நிலைத்திருக்கும் ஒரு இரவைத் தூங்கத்தான் வேண்டுமா?.
எல்லோரும் என்னைப்போலவே தங்களது வாழ்வை காதலால் வழிநடத்தினால்,
பின்னர் இரத்தக்களரி மிக்க வாள்களும் கவசங்களும் இருக்கக்கூடாது;
மத்தளமோ துந்துபியோ அமைதியான உறக்கங்களைக் கலைக்கக் கூடாது,
காதல் முகாமிலிருந்து எச்சரிக்கை ஒலி வந்தால் ஒழிய..
ஆனால் முட்டாள்கள் வாழ்கிறார்கள், தங்களது சிறிய ஒளியை வீணாக்குகிறார்கள்,
அவர்கள் வாதையுடன் தங்களது எப்போதும் நீடிக்கும் இரவைத் தேடுகிறார்கள்.
உரியநேர மரணம் வந்து என் வாழ்வையும் சொத்தையும் முடிக்கும் போது,
எனது சொர்க்க ஊர்தி துக்கம் அனுஷ்டிக்கும் நண்பர்களால் வெறுப்புற வேண்டாம் .
ஆனால் எல்லாக் காதலர்களும், வெற்றியில் செழித்தவர்கள், வரட்டும்
இனிய பொழுதுபோக்குகள் எனது மகிழ்ச்சியான கல்லறைக்குக் கருணை புரியட்டும்.
லெஸ்பியா, நீ என் சின்னஞ் சிறிய விளக்கை மூடிவிடு
மேலும் எனது எப்போதும் நீடிக்கும் இரவை உன் காதலால் மகுடம் சூட்டு.