வறுமை என்பது வன்முறையின் மோசமான வடிவம்

-மகாத்மா காந்தி

ஷோபாவுக்கு நடிக்கத் தெரியாது. தன்னை அகழ்ந்து கதாபாத்திரத்துக்கு உயிரூட்டி நியாயம் செய்யத் தெரியும். பாத்திரத்தில் தன்னை நிரப்பிக் கொள்கிற தண்ணீர் போலவே தன் நடிப்பாற்றலால் கதைகளை சிறப்பிப்பது கலையின் தர்மம். ஷோபா குறுகிய காலமே நடிக்க வாய்த்தாலும் தமிழ்த் திரை உள்ளளவும் பேரும் புகழும் நிலைத்திருக்கும் வண்ணம் அவரது கலைப்பங்கேற்பு திகழ்ந்தது.

அபூர்வமான நடிகை என்பதைவிட அபாயகரமான நடிப்பாற்றல் கொண்டவர் என்றால் பொருந்தும். எந்தக் கதாபாத்திரமும் ஒற்றைத் தன்மை கொண்டதல்ல. ஒரு பாத்திரத்தை சுவர்ப்படம்போல மனங்களில் எழுதுவது சுலபம். ஆனால் ஷோபா முப்பரிமாணம் கொண்ட சிலைக்கு உயிர்தருகிறாற்போல் மாயம் செய்பவர். வீட்டுக்கு வீடு வாசப்படி, ஏணிப்படிகள், சக்களத்தி, முள்ளும் மலரும் உள்பட பல உதாரணங்கள். ஷோபாவின் ஆற்றல் சிற்சில அத்தியாயங்களாய்ச் சுருங்கி விடுவதல்ல. அது ஒரு சகாப்தம்.

துரை எழுதி இயக்கியது பசி திரைப்படம். கே.பாலச்சந்தரின் அரங்கேற்றம் படம் தந்த பாதிப்பு ஒருவிதம் என்றால் பசி இன்னும் முகத்துக்கு நேரே வீசப்பட்ட பந்து எனலாம். 1979 ஆமாண்டு வெளியாகி தேசிய விருதுகளைப் பெற்ற படம். இசை சங்கர் கணேஷ் . ஒளிப்பதிவு ரங்கா. நடிப்பு ஷோபா, விஜயன், தாம்பரம், லலிதா, டெல்லிகணேஷ், நாராயணன், செந்தில், சத்யா, ஜெயபாரதி மற்றும் பலர்.

இது சென்னையின் கதையல்ல. மெட்ராஸின் கதை… பம்பாய் போன்ற எத்தனையோ நகரங்கள் பிறவூர்களிலிருந்து குடியேறியவர்களை தனியே ஒதுக்குவது நகரமாக்கலின் இயல்பு. மெட்ராஸ் மட்டும்தான் தன் படிப்படியான விரிவாக்கத்தினூடாக மண்ணின் மைந்தர்களை ஓரங்களுக்கு அனுப்பியது. மெட்ராஸாக இருந்த சென்னையின் விஸ்தீரணத்தை தரிசிக்க பதிவாக்கப்பட்ட வாய்ப்பாகவும் பசி திரைப்படம் விரிகிறது.

பசியின் கதையில் முனியன் வள்ளியம்மாவுக்கு (டெல்லிகணேஷ் தாம்பரம் லலிதா) 7 பிள்ளைகள். கிஷ்ணன் மூத்த மகன் படித்தவன். ஆனால் குடும்பத்தைக் காப்பாற்றவில்லை. தன் விருப்பப்படி ஒருவளைத் திருமணம் செய்து கொண்டு தனியே சென்றுவிட்டவன். மூத்த மகள் குப்பம்மா (ஷோபா)தான் குடும்பத்தைத் தாங்குபவள். ஒவ்வொன்றும் ஒரு தினுசு. எதற்கெடுத்தாலும் பொய் சத்தியம் செய்தபடி எஸ்கேப் ஆவான் ஒருவன். இன்னொருவன்தான் தான் படித்து தாயை காப்பாற்ற போவதாக முழங்குவான். இருப்பதில் பெரியவன் ஒருத்தன் பல வேலைகள் செய்பவன். தான் மாத்திரம் தனியே காசு பார்த்துக் காசு சேர்க்கும் சமர்த்து தினமும் சம்பாதிக்கும் ஏழு ரூபாயில் நாலு தனக்கு மூன்று தன் குடும்பத்துக்கு என்று அராஜகநீதி பரிபாலனம் செய்யும் தலைவன் தகப்பன் முனியன். தன் இஷ்டத்துக்கு வாழ்பவர். மதுதாசன்.

தந்தையற்ற குடும்பத்தின் மூத்த மகள் குமுதா(ப்ரவீணா பாக்யராஜ்). அவளைப் பாலியல் தொழில் செய்து பொருளீட்டி வரும்படி கட்டாயப்படுத்துகிறாள் அவளைப் பெற்றவள். தன்னைப் போல் தன் தங்கையும் பலியாகிவிடக் கூடாதென்பதற்காகப் பல்லைக் கடித்தபடி தாயின் நிர்ப்பந்தத்தை பொறுத்துக் கொள்கிறாள் குமுதா. தினமும் முனியனின் ரிக்சாவில் தான் அவள் பயணங்கள். முனியனின் குடும்பம் மீது குமுதாவுக்கு ஏற்படுகிற பரிவினால் அவள் மனதார அவர்களுக்கு உதவ நினைக்கிறாள்.

செல்லம்மாவோடு தானும் குப்பை பொறுக்க செல்கிறாள் குப்பம்மா… அது அவர்கள் குடும்பச்செலவுகளை ஓரளவுக்கு சமாளிக்க உதவுகிறது. செல்லம்மா மூலமாக அறிமுகமாகும் லாரி ட்ரைவர் ரங்கனுக்கு குப்பம்மா மேல் ஈர்ப்பு உருவாகிறது. அது மெல்ல வளர்கிறது. ரங்கன் தானறிய நேரும் சந்தர்ப்பங்களிலெல்லாம் வலிய குப்பம்மாவுக்கு உதவுகிறாற்போல் அவளின் நன்மதிப்பை பெறுகிறான். குடி போதையில் வரும் முனியனை காவலர்கள் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றுவிட ஜாமீனுக்கு யாரும் முன்வரவில்லை. சைக்கிள் கடைக்காரன் நேரடியாகவே குப்பம்மாவைத் தன் ஆசைக்கு இணங்கினால் தன்னால் ஜாமீன் தர முடியும் என்று நிர்ப்பந்திக்கிறான். அவனை ஏசிவிட்டு நகர்கிறாள் குப்பம்மா. அவளைத் தேடி வந்து தான் உதவுவதாக சொல்லிச் செல்லும் ரங்கன் சொன்னாற் போலவே முனியனை மீட்டு அழைத்து வருகிறான். குப்பம்மாவுக்கு அவன் மீது நன்றியுணர்ச்சி பெருக்கெடுக்கிறது. அவனைத் தேடிச் சென்று நன்றி கூறுகிறாள்.

காரசாரமாய்க் கோழி பிரியாணி வாங்கி வருமாறு மகளிடம் கேட்கிறார் முனியன். அவருக்குக் காய்ச்சல் நெருப்பாய்க் கொதிக்க நீ வீட்டிலேயே இரு என்று கிளம்பி வருகிறாள். ஓட்டலில் தற்செயலாக சந்திக்கும் ரங்கன் குப்பம்மா வீட்டார் அனைவருக்கும் பிரியாணி வாங்கித் தருகிறான். ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு கிளம்பும் குப்பம்மாவைத் தானே அழைத்துச் சென்று வீட்டருகே விடுவதாக அழைக்கிறான். ஒரு முக்கிய விஷயம் பேசவேண்டும் என்று அவளை அழைத்துச் சென்று தன்னைப் பற்றிய அவளது அபிப்ராயத்தைக் கேட்கிறான். அவள் நீ என்னப் பொறுத்தவரைக்கும் நல்லவரு என்கிறாள். அவளைப் பேசி வசியம் செய்கிறான். தன் ஆசையை அவளிடம் தெரிவிக்கும் ரங்கனிடம் கடைசிவரைக்கும் என்னை கைவிட்டுற மாட்டியே எனக் கேட்கிறாள். அவன் அதனை ஆமோதிக்கிறான். குப்பம்மா ரங்கனை நம்பி அவனது ஆசைக்கு இணங்குகிறாள்.

குப்பம்மா யாருடனோ லாரியில் வந்து இறங்கியதைப் பார்த்து அவளை விசாரிக்கிறாள் வள்ளியம்மா. நடந்ததை அவளிடம் மறைக்காமல் சொல்கிறாள் குப்பம்மா. அதனைத் தாளாமல் வள்ளியம்மா ரயிலில் விழுந்து சாகிறாள். ரங்கன் திருமணமானவன் என்பது பின்னால் தான் தெரிய வருகிறது. குப்பம்மா கர்ப்பமாகிறாள். தாய்மாமன் வந்து தன் தங்கை சாவுக்கு அப்பாலாவது உண்மையை சொல் எனக் கேட்டும் குப்பம்மா வாய் திறக்க மறுக்கிறாள். சைக்கிள் கடைக்காரன் தூண்டலில் ஒருவன் சாட்சி சொல்ல எல்லோரும் பெட்ரோல் பங்கில் இருக்கும் ரங்கனைத் தேடிச் சென்று உதைக்கிறார்கள். அங்கே வரும் குப்பம்மா ரங்கனுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என மறுக்கிறாள். எல்லோரும் அவளைத் திட்டுகிறார்கள். ரங்கன் தப்பினோம் பிழைத்தோமென வீடு திரும்புகிறான்.

குப்பம்மாவைத் தனியே சந்தித்து மன்னிப்புக் கோருகிறான் ரங்கன். அதற்கு அவள் அவனிடம், “கைவிட மாட்டேன்னு சொன்னியே கன்னாலமாய்டிச்சின்னு சொன்னியா… உன்னைய நான் மன்னிச்சு என்னய்யா இனியாச்சும் என்னை மாதிரி இன்னொரு பொண்ணை ஏமாத்தாம இருய்யா” எனக் கேட்கிறாள். தான் வேண்டுமென்று செய்யவில்லை என்று அவளிடம் சமாதானம் சொல்கிறான் ரங்கன். அது ஏற்கமுடியாத சமாதானம் என்பது அவனுக்கும் தெரியும். மெல்ல அந்தப் பகுதிக்கு வருவதையே நிறுத்திக் கொள்கிறான் ரங்சன்.

காலம் செல்கிறது. குப்பம்மாவும் குமுதாவும் நட்பாகின்றனர். குப்பம்மாவுக்கு உதவுவதற்காகத் தன் நண்பரைச் சந்திக்க செல்லும் குமுதா கைதாகிறாள். குப்பம்மா எத்தனையோ முயன்றும் அவளால் ரங்கனை சந்திக்க முடியவில்லை. வழியில் வலி கண்டு சாலையில் மயங்குகிறவளை அக்கம்பக்கத்தார் குடிசைக்கு அழைத்துச் சென்று பிரசவம் பார்க்கையில் குழந்தை பிறந்ததும் குப்பம்மா இறந்துவிடுகிறாள். குப்பம்மா கையிலிருந்த துண்டுச்சீட்டோடு ரங்கனைத் தேடிச் செல்பவர் மூலம் விபரமறிந்து ரங்கனின் மனைவியும் ரங்கனும் தேடி வரும்போது தெருவில் குப்பம்மாவின் சடலமும் அருகே அழுதபடி ஒரு கிழவியின் கையில் குழந்தையும் இருப்பதைப் பார்த்து குழந்தையைத் தான்வாங்கிக் கொள்கிறாள் ரங்கனின் மனைவி. படம் நிறைகிறது.

“ஒரு டீ கடனாகக் கொடு…” என்றதும் கையை வருடும் டீக்கடைக்காரன். “ஜாமீன் வேண்டுமா என் ஆசைக்கு இணங்கு” என்று நேர் நிர்பந்தம் செய்யும் சைக்கிள் கடைக்காரன்.தேவைக்கு உதவுகிறாற் போல் நடித்துத் தன்னைப் பற்றிய நற்பிம்பத்தை உருவாக்கி அதற்கு விலையாகப் பெண்மையைக் களவாடும் லாரி ட்ரைவர் ரங்கன். “ஊர் உலகத்ல இல்லாததா இது” என்று தன் பிரியாணியே தனக்கு பெரிது எனத் தின்னும் தகப்பன் காதல் மனைவிக்குப் பிடிக்கவில்லை என்று பெற்ற தாயோடு நாலு வார்த்தை பேசுவதற்குக் கூடத் தயங்கி “இந்தா பாரு… இந்த வட்டத்துக்கே நீ செயலாளரா இருக்கே குடிச்சுட்டு உள்ள போனது உங்கப்பன்னு தெரிஞ்சா காறி துப்புவாங்க… கெளம்பும்மா அப்பறம் அவ ஃபீல் பண்ணுவா” என்று துரத்தும் மூத்த மகன் கிஷ்ணன்

வித விதமான ஆண்மிருகங்களைத் தன் கதையெனும் வெட்டுக் கத்தி கொண்டு தோலுரிக்கிறார் துரை. குமுதா வந்து குப்பம்மாவுக்கு உதவுவதற்காகப் பணம் கேட்கும் அந்த நண்பன் கதாபாத்திரம் மட்டும் ஆறுதலளிக்கும் ஆடவனாக முன் நிற்கிறது. இறுதியில் ஷோபா தன் குழந்தையோடு வாழ்வதாகப் படத்தை முடிப்பதில் இயக்குனருக்கு என்ன மனத்தடை என்பது தெரியவில்லை. பெண்ணின் கதையை விவரிக்கும்போது அவளைக் கடைசியில் சாகடிப்பது பசி போன்ற பல முக்கியமான படங்களில் காணவாய்ப்பது சமூக அவலத்தின் சாட்சியமா அல்லது அதுவும்கூட ஆண் மனோபாவமா என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

தன் படத்தில் காட்டுகிற மனிதர்களின் உலகத்துக்குச் சென்று அவர்களை அழைத்து வந்தாற்போன்ற பாத்திரத் தேர்வு தாம்பரம் லலிதா டெல்லிகணேஷ் விஜயன் சத்யா என எல்லாருமே நடிப்பென்றே சொல்லவியலாத நிசத்தை வார்த்துத் தந்தனர். ஷோபா தன் வாழ்கால வலுவெல்லாம் திரட்டி இயங்கினாற்போல் பேருருக் கொண்டார். மெட்ராஸ் பாஷை என்று தனித்துவமாக அறியப்படும் தமிழின் தனித்த வழங்குமொழியை சந்திரபாபு, நாகேஷ் உள்பட சிலரே அதன் கச்சிதத்துக்குள் பேசியிருக்கின்றனர். அந்த வரிசையில் ஷோபா மெட்ராஸ் வட்டாரமொழியைப் பேசியது அற்புதம். பசி ஷோபாவின் ருத்ரதாண்டவம் ரங்காவின் ஒளிப்பதிவும் ஷங்கர் கணேஷின் இசையும் சிறந்து விளங்கின.

குறிப்பாக ஷங்கர் கணேஷின் பின்னணி இசை மெல்லிய போதையின் கிறக்கத்திலிருந்து கொள்ளிப் பசியின் மயக்கம் வரை மனோபாவங்களை உருவாக்கியும் கலைக்காமலும் இசைத்தது. படத்தின் பெரிய பலம் இதன் வசனங்களும் அவற்றை உச்சரித்த குரல் தன்மைகளும் சேர்த்துச் சொல்லலாம். ஆங்காங்கே தென்படக்கூடிய போஸ்டர்கள் குறிப்பாக நியாயம் கேட்கும் காட்சி ஒன்றில் பின்னணியில் நெஞ்சுக்கு நீதி என்ற போஸ்டர் காணப்படும்.

க்ளைமாக்ஸில் ஷோபா இறந்து கிடக்கும் இடத்தில் வந்தமரும் ரங்கனின் மனைவி குழந்தையுடன் யாரென்றறியாத கிழவி கையறு நிலையில் விழிக்கும் ரங்கன் இத்தனை பேரையும் உள்ளடக்கிய காட்சிப் பின் புலச்சுவரில் திசை மாறிய பறவைகள் என்ற படத்தின் போஸ்டர் . சொல்லிக் கொண்டே செல்லலாம் பசி படத்தின் உள்ளார்ந்த சிறப்புக்களை. மனிதர்களை உரித்து நிசத்தை முன் நிறுத்தியவகையில் பசி உன்னதமான திரைப்படம்.

காலங்கடந்து ஒளிரும் திரைவைடூரியம்.

முந்தைய தொடர்: http://bit.ly/2yLKiQU