மனிதன் என்பவன் மிக மோசமான விலங்கினம்

-ஃப்ரெட்ரிக் நீட்ஷே

நல்லவன் வாழ்வான் என்பது ஒரு தியரி. பொதுவாக நம்ப விரும்பப்படுகிற தியரி மட்டுமல்ல. திரும்பத் திரும்ப போதிக்கப்படுகிற தியரி. நல்லது செய்தால் நற்பலன் கிடைக்கும் என்பதும் தீயவற்றைச் செய்வது தீய பலனைத் தருமென்பதும் ஆழ்ந்த நம்பிக்கைகள். சக மனிதனை அன்பு செய்வது ஒன்றுதான் மனிதத்தைத் தழைக்கச் செய்யும் என்பது காலம் காலமாகத் தொடர்ந்து எழுதப்பட்டு வரக்கூடிய பொது விதி.

மனித வாழ்க்கை ஆசைகளாலும் நிராசைகளாலும் ஆனது. இரண்டையுமே சேர்த்து கனவு நோக்கம் லட்சியம் என்றெல்லாம் பல சொற்கள் நிறுவித் தருபவை. மனிதன் நம்ப விரும்புகிற தத்துவங்கள் காலம் காலமாய்த் தொடர்பவை மேலும் அந்தந்தக் கால கட்டங்களில் சேர்பவை இவ்விரண்டும் சேர்த்ததே. கதைகள் பாடல்கள் ஓவியம் இசை நடனம் எனப் பல கலைவடிவங்களும் மானுட நம்பிக்கைகளை எடுத்தோதுவதற்கான உபகரணங்களாகப் பயனாவது அவற்றின் பரவலுக்கும் முக்கியக் காரணமாகிறது.

ஏழாம் உலகம் ஜெயமோகன் எழுதிய புதினம். உடல் உறுப்புக் குறைபாடுகளைக் கொண்டவர்களைச் சிறையெடுத்துத் தன் லாபத்திற்காக அவர்களைப் பிச்சை எடுக்க வைக்கும் ஈரமற்ற மனிதவுருவிலான மிருகம் ஒன்றை அடிப்படையாகக் கொண்ட புதினம். இந்த ஒரு கதாபாத்திரத்தின் இரக்கமற்ற செயலைத் தன் திரைக்கதைக்கான ஒரு இழையாக எடுத்துக் கொண்டார் பாலா.

காசியில் காணக் கிடைக்கும் அகோரிகள் மனிதவாழ்வின் பாவபுண்ணியக் கணக்கை நேர்செய்பவர்களாகவும் அவர்கள் ஆசீர்வதித்தால் பிறவியைக் கடக்க முடியுமென்பதும் காலம் காலமாய் ஒரு நம்பிக்கை தொடர்கிறது. இறுதிக் கடனை காசியில் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்று விரும்பி அதனை காசியில் ஈடேற்றுவது பலரது செயல்முறை. தகனம் திதி உள்ளிட்ட கர்மவினை தீர்க்கும் ஈமச்சடங்குகளை பாவ பரிகாரங்களை செய்வதற்கான புண்ணியத் தலமாக அறியப்படுகிறது காசி நகரம். அங்கே மட்டுமே இருக்கும் அகோரிகளில் ஒருவரைத் தன் திரைக்கதையின் இரண்டாவது இழையாக்கிக் கதையை உருவாக்கினார் பாலா. வசனங்களை எழுதியவர் ஜெயமோகன்.

ஜோசியன் தன் ஒரு மகனைப் பிரிந்தாகவேண்டும் என்று சொன்னதால் தன் மகன் ருத்ரனைப் பதின்ம வயதில் காசியில் விட்டுவிட்டுத் தன் வீடு திரும்பி விடுகிறார் நமச்சிவாயம். தன் மனைவி மகளிடம் பதினாலு வருடம் அங்கே அவன் வேதம் படிப்பதாகப் பொய் சொல்லி விடுகிறார். அவரோடே இருக்கும் இன்னொரு மகன் தவறி விடுகிறான். 14 வருடங்கள் கழித்து எங்கே என் இன்னொரு மகன் என கேட்டழும் மனைவி நிர்ப்பந்தத்தை சமாளிக்க ருத்ரனைத் தேடிகாசிக்குத் தன் ஒரே மகளோடு வருகிறார் நமச்சிவாயம்.

குருவிடம் என் மகனை என்னோடு அனுப்புங்கள் எனக் கேட்க அவர் ருத்ரனிடம் நீ பிறவியின் பந்தங்கள் முழுவதையும் முதலில் அறுத்துவிட்டு வா. என்னை எப்போது வந்தடைய முடியும் என்பது உனக்குத் தெரியவரும் அப்போது வந்தால் போதும் என்று அவனை ஆசீர்வதித்து அனுப்புகிறார். அவர்கள் இருவரோடு ஊருக்கு வரும் ருத்ரன் அங்கே சிலகாலம் இருப்பதும் தன் காட்சிக்கு முன் நிகழும் நல்ல மற்றும் கெட்ட நிகழ்வுகளை இனம் பிரித்து அவற்றுக்கான விளைவுகளை ஏற்படுத்திய பிறகு மீண்டும் தன் குருவைத் தேடிச் சென்றடைவதும் நான் கடவுள் படத்தின் திரைநகர்தல்.

சாதாரணமாகப் பராமரிக்கப்படாத மற்றும் வழங்கப்படாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறவர்களை முழுவதுமாகத் தன் திரை மாந்தர்களாகக் கொண்டு நான் கடவுள் திரைக்கதையை பாலா அமைத்தது குறிப்பிடத்தக்கது. ‘மனுஷனா நீ’ என்று கேட்கக்கூட நியாயமற்ற மிருகமனம் கொண்ட தாண்டவனை கதையின் எதிர் மனிதனாக்கி மனுஷனல்ல கடவுள் என்று அஹம் ப்ரம்மாஸ்மி என்று தன்னை உபாசிக்கும் ருத்ரனை கதையின் காப்பானாக்கியதும் உடல் உறுப்புகள் குறைபாடுகளோடு பிறந்து தாண்டவனிடம் விற்கப்பட்டு அவனது மிருகத்தனத்துக்குக் கட்டுப்பட்டு யாசகம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் அவர்களைப் பராமரிக்கும் தாண்டவனின் வேலைக்காரர்கள் தாண்டவனிடம் மனிதர்களை விலைக்கு வாங்கவும் விற்கவும் வந்து செல்கிற அவனை ஒத்த சக மிருகங்கள் தாண்டவனுக்குப் பக்க பலமாக இருக்கும் காவலதிகாரி தாண்டவனின் பணத்துக்குப் பதிலாகத் தன் ஸ்டேஷனுக்கு பிடித்து வரப்பட்ட வேறொரு குழுவிலிருந்து தாண்டவனின் கூட்டத்திற்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்படுகிற அம்சவல்லி . அவளைத் திருமணம் செய்து கொள்ள வருகிற பெரிய வியாபாரி தாண்டவனிடம் வேலை பார்க்கிறவர்களில் ஈர மனம் கொண்ட முருகன் மலை மேல் இருக்கும் மாங்காட்டுச் சாமி எனக் கதையின் பெருவாரி மனிதர்களின் வருகை நிகழ்கிறது.

தாண்டவனால் பாதிக்கப்படுபவர்களின் கையறு நிலை. தாண்டவனால் பலனடைவோர். தாண்டவனால் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் அவ்வப்போது சிறு நிகழ்வுகளைக் கண்ணுறும் பொது மக்கள் தன்னை யாராலும் எதுவும் செய்யமுடியாது என்று கெக்கலிக்கும் தாண்டவன். வட காசியிலிருந்து கிளம்பித் தெற்கே வந்து தாண்டவனை வதம் செய்துவிட்டு மீண்டும் தன் குருவைச் சென்றடையும் ருத்ரனின் வருகை கதையை நிறைவு செய்கிறது. இரண்டு அதீத மனிதர்கள். நல்ல மற்றும் கெட்ட என்பதைவிட கெட்ட மற்றும் கெட்டதை அழிக்கிற என்ற இரண்டாகக் கிளைக்கிறது பாத்திரமாக்கல்.

கனவில் வரக்கூடிய குழப்பங்களைக் கோர்த்தாற்போலத் தோற்றமளித்தாலும் மிகத் தெளிவான நகர்தல்களால் மனங்களைத் தைத்தெடுத்தார் பாலா. மதுபால கிருஷ்ணன் பாடிய பிச்சைப் பாத்திரம் பாடலும் விஜய்ப்ரகாஷ் பாடிய ஓம் சிவோஹம் பாடலும் இரு கரைகளைப்போல அமைந்ததென்றால் படத்தின் பின்னணி இசை கடலாய்ப் பெருகிற்று. இளையராஜாவின் உக்கிரமான இசை இந்தப் படத்தில் கூடுதல் இயக்கமாகவே திகழ்ந்தது.

பாலா தன் படங்களில் தொடர்ந்து காட்சிப்படுத்துகிறவை இப்படத்திலும் உண்டு. உதாரணமாக அதிகார-நிறுவனத்தின் மீதான எள்ளல். இன்னொன்று திரையினால் கூட்டத்தை வசீகரித்தவர்களின் பிம்பங்களை வேறு காலத்தின் பாடல்களை இடம்பெறச் செய்வது சிறுசிறு கதையாடல்களாக முக்கியக் கதைத் திருப்பங்களை அப்படி அப்படியே வெட்டி நிறுத்தி அடுத்ததில் நுழையும் உலர் தன்மை எதிர்பாராத மற்றும் அதிர்வை நிகழ்த்துகிற கண்டனத்தைப் போகிற போக்கில் வசனமாக உதிர்த்தல் போன்றவை.

பாலா சிறந்த இயக்குனருக்கான தேசியவிருதைப் பெற்றார். யூகே சசி சிறப்பான ஒப்பனைக்கான தேசிய விருதை அடைந்தார். ஆர்யா, பூஜா, ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, சிங்கப்புலி, அழகன் தமிழ்மணி மற்றும் பலரது நெகிழ்நடிப்பு நான் கடவுள் படத்தைச் சிறப்புற சாத்தியமாக்கிற்று. சுரேஷ் அர்ஸ் தொகுப்பும் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவும் வாலி, இளையராஜா எழுதிய பாடல்களும் பக்கத் துணையாய் நின்றன.

நான் கடவுள் அஹம் பிரம்மாஸ்மி

உனக்குள் இறையை உண