விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்
வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால்
அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் 5
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்,
‘இவை காண்தோறும் நோவர்மாதோ;
அளியரோ அளியர் என் ஆயத்தோர்!’ என
நும்மொடு வரவு தான் அயரவும்,
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே. 10

ஒரு சிறிய கிராமம்.

அந்தச் சிறிய கிராமத்தில் ஒரு சிறிய வீடு.

அந்தச் சிறிய வீட்டில் ஒரு பெரிய மண் பானை இருக்கிறது. அது மோர் கடைகிற பெரிய மண் பானை.

அந்தப் பெரிய மண் பானையின் வெகுநாட்களாக மோர் கடைந்து மோர் கடைந்து நாள்பட்ட மோர் மணம் புளிப்பேறிப் புளிப்பேறி அது மொரண்டை மணம் வீசிக்கொண்டிருக்கிறது. இந்த மொரண்டை மணத்தை மாற்றுவதற்காக அந்தப் பெரிய மோர்ப் பானையில் விளாம்பழங்களைப் போட்டு வைத்திருக்கிறார்கள்.

மோர் கடைகிற முரட்டுக் கயிறால் கடைந்து கடைந்து ‘மத்து’ அங்க அங்க தேய்ந்திருக்கிறது.

அந்த அழகான வீட்டில் ஒரு இளம்பெண்.

அழகான அந்த இளம் பெண் அவள் முகம் தெரியாமலும் அவள் உடம்பு தெரியாமலும் ஒரு துணியால் மூடியிருக்கிறாள்.

இருட்டு தேய்ந்து தேய்ந்து, இருட்டு மெல்ல மெல்ல விலகிக் கொண்டிருக்கிற அழகான ஒரு விடியக்காலம்.

தன்னை முழுவதும் ஒரு துணியால் மூடிக்கொண்டிருக்கிற அழகான அந்த இளம்பெண், அவள் கால்களில் அணிந்திருக்கிற கால் சிலம்புகளைக் கழட்டுகிறாள். இவ்வளவு நாளும் அவள் விளையாடிக் கொண்டிருந்த, வண்ணவண்ண நூல்களால் சுற்றிய அழகான பந்தை அவள் தேடி எடுக்கிறாள்.

வண்ண வண்ண நூல்களால் அழகாகச் சுற்றிய அவளுடைய அழகான பந்தையும், அவள் கால்களில் அணிந்திருந்த அவளுடைய அழகான கால் சிலம்புகளையும் அவள் வீட்டில் உள்ளவர்கள் பார்வைக்குத் தெரியும்படியான ஒரு இடத்தில் வைக்கிறாள் அந்தப் பெண்.

இவைகளைப் பார்த்துப் பார்த்து நீங்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருங்கள் என்று அவள் ஞாபகார்த்தமாக அவைகளை அங்கே அவள் வைக்கிறாள்.

அழகான அந்த இளம் பெண் அவளை முழுசா மூடிக்கொண்டு அவள் வீட்டை விட்டு வாசல்படியைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறாள்.

அழகான இந்த இளம் பெண்ணின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது.

கயமனார்
நற்றிணை 12