“எனக்குத் திரைப்படம் என்பது மக்களை விடவும் முக்கியமானதல்ல.”

-ஜான் கெஸாவெட்ஸ் அமெரிக்க நடிகர் திரைக்கதாசிரியர் மற்றும் இயக்குனர்

திரைப்பட நடிகர் அரசியல்வாதி என்ற இரு பதங்களையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க இயலாத மனிதர் எம்ஜி.ஆர். திரை நாயகனாக அவரது எழுச்சியின் காலமெங்கும் அவரது அரசியல் ஈடுபாடும் குன்றாமல் தொடர்ந்து வந்தது. தன் படங்களைத் தான் சார்ந்திருந்த கட்சி அதன் கொள்கை ஆகியவற்றை மக்கள் மனங்களில் கொண்டு சேர்க்கும் பணியை மிகுந்த ஆர்வத்தோடு அவர் செய்தார். திரை ஊடகத்தின் மக்கள் செல்வாக்கை ஆழ்ந்த கவனத்தோடு கையாண்டவர் எம்ஜி.ஆர். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறி தனிக்கட்சி கண்டு ஆட்சியைப் பிடித்து அதன் பின்னரும் திரைப்படங்களில் நடிப்பதை விடுவதற்கு விருப்பமின்றித்தான் இருந்தார். வேறு வழியின்றி நடிப்பிலிருந்து விலக நேர்ந்த எம்ஜி.ஆர் 1972 முதல் 1977இல் ஆட்சியைப் பிடிக்கும் வரையிலான காலகட்டம் அவரது வாழ்வின் சவால் மிகுந்த காலம் என்று கூறத்தக்க அளவில் அமைந்தது.

எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய காலம் முதற்கொண்டு தானுண்டு தன் நடிப்புண்டு என இருந்தவரில்லை. தணியாத ஆர்வமும் கற்றுக்கொள்ளத் துடிக்கும் மனமும் அவருடைய பலங்கள்தான் விரும்பிக் கலந்த சினிமாவின் சகல துறைகளைப் பற்றியும் தொடர்ந்து தன் ஞானத்தை வளர்த்துக் கொண்டவர் எம்ஜி.ஆர் முதல் இடம் வகித்துப் பேரும் புகழும் கொட்டுகிற பணமும் சர்வகாலமும் பார்க்க வாய்த்த போதும் அவர் ஓய்வறியாமல் தன் ஈடுபாட்டை அணையாவிளக்கெனவே வளர்த்தார். எம்ஜி.ஆர் ஒரு முழுமையான திரை ஆளுமை. அவர் வெறும் நடிகர் அல்ல. திரைப்பட உருவாக்கத்தின் பல நுட்பங்களை ஆழ்ந்து கற்றுத் தேர்ந்தவர். தன் திரைவரிசையில் மொத்தம் 3 படங்களை அவர் இயக்கி இருக்கிறார். அவை மூன்றுமே பெரு வெற்றிப் படங்கள். அவற்றில் இரண்டு அரசகாலக் கதைகளைக் கையாண்டவை. உலகம் சுற்றும் வாலிபன் சமகாலப் பிரதிபலிப்பைக் கொண்டிருந்தது. பல நாடுகளில் படமாக்கப்பட்டது. முதல் அறிவிக்கையிலிருந்து வெளியீடு வரைக்கும் பற்பல இன்னல்களைச் சந்தித்த படமாக இருந்தது. எம்.ஜி.ஆரின் முந்தைய வசூல் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து வெற்றி பெற்றது.

விஞ்ஞானி முருகன், தன் ஆராய்ச்சி முடிவில் வெற்றி அடைந்தாலும் அது தீய நோக்கங்களுக்குப் பயன்படலாம் என்ற அச்சம் கொள்கிறார். அவர் பொய் சொல்வதாக எள்ளும் போட்டி விஞ்ஞானி பைரவன் என்ன செய்தாவது முருகனின் ஆராய்ச்சி முடிவை விலைக்கு வாங்க முயன்று தோற்கிறார். அவற்றை அழித்துவிட ஆவேசம் கொள்கிறார். தன் காதலி விமலாவோடு உலக நாடுகளுக்கு சுற்றுலா கிளம்பிச் செல்லும் முருகன் தன் ஆய்வுகள் ரகசிய இடத்தில் பத்திரமாக இருப்பதை சொல்ல அதைக் கேட்கும் பைரவன் அதைத்தான் அடைய சூழ்ச்சி செய்கிறார். முருகன் தன் நினைவை இழக்கிறார். ரகசியத்தை அறிய முருகன் நினைவு மீள்வதற்காக பைரவன் காத்திருக்கிறார். சி.ஐ.டி. அதிகாரி ராஜூ தன் அண்ணன் முருகனைத் தேடி சிங்கப்பூர் வருகிறார், சகோதர்கள் எப்படி சூழ்ச்சிகளை வெல்கிறார்கள் என்பதே உலகம் சுற்றிய வாலிபக் கதை.

அசோகன் அழகான தமிழைப் பேசி நடித்த வில்லன். வித்யாசமான குரலும் முகமொழியும் தனித்துவமான மானரிசங்களும் கொண்டவர். அசோகன் நடிப்பில் உலகம் சுற்றும் வாலிபன் மிளிர்ந்தது.

அப்படியா? ராஜூவா? முருகனுடைய தம்பியா? வந்திட்டானா?” என்பார் ஜானி வேட ஆர்.எஸ்.மனோகரிடம்

எஸ் மாஸ்டர் நானே அவனைப் பார்த்தேன்

“ஜானி அவனொரு போலீஸ் சீ.ஐடி தகுந்த பாதுகாப்போட தான் வந்திருப்பான்
அவன் இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் நமக்கு ஆபத்து தான்.” என்றதும்

அவனை ஒரேயடியா க்ளோஸ் பண்ணட்டுமா மாஸ்டர்

பண்ணிட்டு வந்திருந்தா பரிசு குடுத்திருப்பேன் என்பார் ஜானியிடம் சீக்கிரமா அவன் பிணத்தோட வர்றேன் எனக் கிளம்பும் ஜானியைப் பார்த்து நான் பணத்தோட காத்திட்டிருக்கேன் எனச்சொல்லும் போது அசோகனின் கண்கள் மின்னும். இன்னொரு காட்சியில் மிஸ்டர் முருகன் நீங்க கண்டுபிடிச்ச ஆராய்ச்சிக் குறிப்பை எனக்குக் குடுத்திருங்க. உங்களைக் கோடீஸ்வரன் ஆக்குறேன் என்று அழாக்குறையாகக் கெஞ்சுவார் விஞ்ஞானி பைரவன். பெரிய புத்தர் சிலைதான் ஷூட்டிங் ஸ்பாட். அதை எப்படிக் கதைக்குள் கொண்டுவருவது என்று எம்.ஜி.ஆருக்கா தெரியாது..?

“விமலா ஏன் பேசாம நிக்கிறே அவங்கிட்ட ஏதாவது பேசு அவன் புத்தியை எப்பிடியாவது ஸ்வாதீனத்துக்கு கொண்ட்டு வா என்று கட்டளையிடுவார்.பைரவன் அடுத்த கணமே என்னாங்க இது யாருன்னு உங்களுக்குத் தெரியுதா எனக் கேட்பாள் விமலா. உடனே இது யாருன்னு சொன்னாத் தானே அவனுக்கு ஞாபகம் வருதா இல்லையான்னு பார்க்கலாம் என்று ஆல்ட்ரேசன் தீர்மானமாக பைரவனே பேசத்தொடங்குவார் “முருகன் இவருதான் புத்தர் உலகத்துக்கே வழிகாட்ட நம்ம நாட்டுல பிறந்தவர்” என்றதும் பெரிய புத்தர் சிலையை ஒருமுறை உற்று நோக்குவார் “முருகன். அன்பை மறக்காதே ஆசைக்கு அடிபணியாதே உயிரை வதைக்காதேன்னு தத்துவம் சொன்ன மகாமேதை” என்று தொடர்வார் பைரவன் உடனே நன்றாகப் பார்த்துக் கொண்டிருந்த முருகன் திடீரென்று தலையைப் பிடித்துக் கொண்டு அய்யோ அம்மா என்று அலறுவார்.கொஞ்சம் அமைதியா இருங்க என்று முருகனை ஆசுவாசப் படுத்தும் விமலா சட்டென பைரவன் பக்கம் திரும்பி “பார்த்தீங்களா இவரை ஏன் இப்படி சித்ரவதை பண்றீங்க” என்று அதட்டுவார்.

“ஒண்ணுமில்லை விமலா ஏதோ குணமாயிடணுமேன்ற ஆசையால அப்டி பேசிட்டேன் என்னைய மன்னிச்சிடு இனிமே இங்க இருக்க வேண்டாம் வா போலாம் வா போலாம்” என்று குழைவார்.பைரவன் படம் பார்க்கும் யாவருக்குமே பைரவன் பாவம் ஒரே ஒரு ஃபார்முலாவுக்காக என்னவெல்லாம் கஷ்டப்படுகிறார் பாவம் என்று தோன்றுமளவுக்கு அவரது குரலும் குழைந்து குழைந்து அவர் பேசும் ஸ்டைலும் பைரவன் விஞ்ஞானியா அல்லது டூரிஸ்ட் கைடா என்று குழப்பும் அளவுக்கு தமிழில் அபூர்வமான தமாஷ் வில்லனாகத் தோன்றினார் அசோகன். எம்ஜி.ஆர் டபுள் ஆக்சன் படத்தில் வில்லனாக நடிப்பதெல்லாம் “ஒளதொளதாய்” தான் என்பது நன்றாகத் தெரிந்து கொண்டாற் போலவே ஜானி வேடத்தில் ஆர்.எஸ்.மனோகரும் நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் நாகேஷூம் உண்டு. எதைப் பார்த்தாலும் திருடும் ஓட்டல் ஊழியராக வரும் நாகேஷ் ஒரே ஒரு வசனத்தில் தனித்து மிளிர்வார். முருகனுடைய வாட்ச்சை ராஜூவிடம் தந்ததும், மகிழ்ந்து போய் இந்தப் பணமெல்லாம் உனக்குத் தான் என்று கத்தை டாலர்களை நாகேஷ் மீது பொழிந்து செல்வார் ராஜூ அடுத்த கணமே நாகேஷின் வசனம் எல்லாப் பயலுக்கும் அண்ணன் காணாமப் போயிட்டா எனக்கு எவ்வளவு தேறும்..?” அது தான் நாகேஷ்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பத்துப் பாடல்கள் இரண்டு அயல்தேசமொழிப் பாடல்கள் மூன்று தீம் ம்யூசிக் விள்ளல்கள் என இசைமயமான படமாகவும் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு ஒரு முகவரி இருக்கிறது. என்றும் அலுக்காத பாடல்கள் படம் வெளிவரும் முன்பு ரசிகர்களின் ஆவலைப் பெருமளவில் அதிகரித்து வைக்க உதவிற்று. பன்ஸாயீ சிரித்து வாழவேண்டும் உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம் அவளொரு நவரச நாடகம் நிலவு ஒரு பெண்ணாகி லில்லி மலருக்குக் கொண்டாட்டம் தங்கத் தோணியிலே பச்சைக்கிளி எனப் பாடலின் முதற்சொல் முழுப்பாடலையும் அழைத்து வந்துவிடும் அளவுக்கு மெகா ம்யூசிகல் ஹிட் ஆகத் திகழ்ந்தது. கண்ணதாசன் வாலி வேதா புலமைப்பித்தன் ஆகியோர் பாடல்களை எழுதினர்.

எல்லா தலங்களின் அனேக அழகான இடங்களையெல்லாம் பற்பல லாங்ஷாட்களில் படத்தில் அடிக்கடி தோன்றச்செய்து கொண்டே இருந்தார் எம்ஜி.ஆர் படம் எத்தனை முறை பார்த்தாலும் தீராத அழகோடு இன்றும் மின்னுகிறதன் காரணமும் அது தான். சண்டைக் காட்சிகள் எடிடிங் எனத் தமிழின் அந்தக் காலகட்டப் படங்களை அடுத்த திசை நோக்கி நகர்த்திய படமென்றே இதனைச் சொல்லலாம்.

இன்றும் பேசப்படுகிற படங்களில் ஒன்றெனவே தொடர்ந்தோடும் நில்லா நதி உலகம் சுற்றும் வாலிபன்.

ஒரே ஒரு எம்ஜி.ஆர்.