முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியுள்ள நிலையில், தங்களது தரப்பு கருத்தைக் கேட்காமல் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என சிபிஐ தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில், “நான் சட்டத்திலிருந்து தப்பி ஓடி ஒளிய அவசியமில்லை” என ப.சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டில், மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 305 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றது. இதற்காக நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை முறைகேடாகப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் ஐஎன்எக்ஸ் நிறுவனத்துக்குச் சிதம்பரத்தின் மகன் கார்த்தி உதவியதாகவும், அதற்கு ஈடாக லஞ்சம் தரப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார் ப.சிதம்பரம். இந்த வழக்கை நீதிபதி சுனில் கவுர் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து, டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்றிரவு மற்றும் இன்று காலை என 4ஆவது முறையாக சிபிஐ அதிகாரிகள் வந்து சென்றுள்ளனர். இதற்கிடையே, உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 21) மேல்முறையீடு செய்த ப.சிதம்பரம், இதை அவசர வழக்காக விசாரிக்க கோரியுள்ளார். இந்த மனு நீதிபதி ரமணா அமர்வு முன்பு இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ, அமலாக்கத்துறை முயற்சித்து வருவதாகக் காங்கிரஸ் வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார்.

இதையடுத்து ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவில் உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்தார். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவெடுப்பார் எனவும் அதுவரை கைது செய்ய தடையில்லை எனவும் நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கக் கோரி ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் முறையிட்ட நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.

இதற்கிடையே ப.சிதம்பரம் கைது செய்வதற்கான பலமான வாய்ப்புகள் உருவாகி இருப்பதால், அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் தடுக்கும் வகையில் அமலாக்கப்பிரிவு அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார நடவடிக்கை, காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கம், முத்தலாக் தடைச் சட்டம் உள்ளிட்டவை குறித்து ப.சிதம்பரம் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் காரணங்களால் அவரை பழிவாங்கவே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

“முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வேட்டையாடத் துடிப்பது வெட்கக்கேடு சிதம்பரத்துக்கு காங்கிரஸ் துணைநிற்கும்; உண்மைக்காக அதன் விளைவுகளைச் சந்திக்கத் தயார்” என்று ட்வீட் செய்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.

இதேபொன்று ராகுல் காந்தியும், “ப.சிதம்பரம் விவகாரத்தில் நடைபெற்று வரும் அதிகார துஷ்பிரயோகத்தைக் கண்டிக்கிறேன்; அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.