பரவி வரும் கொரோனா வைரஸ் மரணங்களை விட பட்டினிச் சாவுகளால் ஏற்படப்போகும் மரணங்களை கண்டு உலகமே அஞ்சுகிறது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
150 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இந்திய தேசத்தில் 80 சதவீத மக்கள் அன்றாடக் கூலி தொழிலை நம்பி வார்த்தை வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் வருமானம் அன்றைய வாழ்வாதாரத்தை மட்டுமே பூர்த்தி செய்யும் வகையில் இருந்து வந்துள்ளன.
அமைப்புசாரா தினக் கூலிகளாக இருக்கும் இந்த மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் புரட்டிப் போட்டுள்ளது மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் மற்றும் பெரு வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சம்பளம் சரியாக வழங்கப்பட வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டாலும் தினக்கூலி அடிப்படையில் கட்டிட வேலை வீட்டு வேலை ஏனைய அமைப்புசாரா வேலைகளில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு அரசு தரப்பில் எந்த ஒரு முன்னேற்ற ஏற்பாடுகளையும் எடுக்காதது அவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலவச அரிசி 1000 ரூபாய் உதவித்தொகை கொடுத்துவிட்டால் அனைத்துப் பிரச்சினையையும் சரியாகிவிடும் என தவறான கணக்கை போட்டு தப்பான வழியில் பயணிக்கின்றன மத்திய மாநில அரசுகள். மாதம் 5000 ரூபாயாவது ஆறு மாதங்களுக்குக் கொடுத்தால்தான் அவர்களின் தற்போதைய பிரச்சினை சற்று ஆறுதல் தரும் படியாக இருக்கும்.
இந்தியாவில் நடைமுறையில் உள்ள இது போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் ஏற்படும் ஊரடங்கு வேலையில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை கூட செயல்படுத்தாமல் வணிக ரீதியில் நொடிந்து போய் உள்ளது அரசாங்கம்.
கொரோனா தாக்குதலில் இரண்டாம் கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறுகிறது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம். 80 சதவீத மக்களுக்கு இந்த வைரஸின் வீரியம் என்னவென்று அடிப்படை அறிவு கூட தெரியாத நிலையில் அவர்களின் அடிப்படை வாழ்வாதாரம் முடக்கப்பட்டுள்ளதைப்பற்றி மத்திய மாநில அரசுகள் துளி கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை .
இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தப்போகும் மரணங்களை விட. முடக்கப்பட்டுள்ள வியாபார சேவைகளால் உண்டாகப் போகும் வேலை இழப்புகளால் அடுத்தடுத்த மாதங்களில், பசி பட்டினியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் நிவாரண பொருட்கள் சில நாட்களுக்கு உதவிடும் என்றாலும் அந்த மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வியை முன்வைக்கின்றனர் வருமான ரீதியாக இழப்பினை சந்தித்துள்ள மக்கள்.
2016ல் பணமதிப்பிழப்பு அறிவித்த நாளிலிருந்து படிப்படியாகக் குறைந்து இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 3 சதவீதமாக மாறிவிட்டது இந்த வேளையில் தற்போது இந்தியப் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
இந்தியாவில் சுமார் 60 கோடி மக்கள் தினக்கூலி வேலை செய்கிறவர்கள். இவர்களின் வேலைக்கு உத்திரவாதம் இல்லாத நிலையில் இவர்கள் அனைவரின் வேலைக்கு அரசு தரப்பில் உத்திரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மாதத்திற்கு 20 முதல் 25 நாட்கள் வரை கூலி வேலை கிடைத்து வந்த அவர்களின் தினசரி வருமானம் தற்போது முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் பட்டினியால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறித்து Welthungerhilfe என்ற நிறுவனம் ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தி பட்டியல் வெளியிட்டு வருகிறது. இந்த நிறுவன அறிக்கையின்படி அண்டை நாடுகளான சீனா, நேபாள், மியான்மர், இலங்கை மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் பட்டினி இறப்புகளைக் காட்டிலும் இந்தியாவில் பசியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது.
கடந்த 2016ம் ஆண்டு முதல் இதுபோன்ற சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பட்டினியால் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது இந்த நிறுவனம்
மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது கூட அரசின் வேலையா? அரசு நிவாரணங்களை மட்டும்தான் வழங்க முடியும் மற்றபடி மக்கள் தான் அவர்களின் வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆளும்கட்சியினர் இல்லாதவர்கள் பரிகாசம் பேசி வருவதை குறைத்துக் கொண்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது ஒவ்வொரு அரசாங்கத்தின் தலையாய கடமையுடன் செயல்பட வேண்டும்.
பஞ்சாப், கேரளா, ஒடிஷா மாநில அரசுகள் மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு பண்டங்களை அவர்களின் வசிப்பிடங்களுக்கு சென்று வழங்கி வருகிறது. ஒடிசா அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது. கேரள அரசு அடுத்த நான்கு மாதங்களுக்கு ஆன அரிசி பருப்பு மளிகை பொருட்களை முன்னெச்சரிக்கையாக வழங்கி உள்ளது. மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக டெல்லி அரசாங்கம் வீட்டு வாடகை கார்களில் வாழ்க்கையை முழுவதுமாக ரத்து செய்துள்ளது.
சரியான திட்டமிடல் இன்றி அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில் முழுவதுமாக முடங்கிப் போயுள்ள வருமான இழப்பை இந்த நிவாரண நிதி ஈடு செய்து விட முடியுமா என்ற கேள்வி எழுப்புகின்றனர் தினசரி வருமானத்தை நம்பி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் மக்கள்.
21 நாட்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கும் முன் கோடான கோடி சாமானிய உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பற்றிய எந்தவித சரியான திட்டமிடல் இன்றி எடுக்கப்பட்ட முடிவு இது என் பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். கைதட்டி கூட்டம் கூட்டவா இந்த ஊரடங்கு என. எந்தக் காரணத்திற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோ அந்தக் குறிக்கோளையே சிதைக்கும் வகையில் மாறியிருப்பதாக கண்டனம் தெரிவிக்கின்றனர் பொது மக்கள்.
ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன், இந்தியா முழுவதும் புலம்பெயர்ந்து பல்வேறு மாநிலங்களில் கூலிகளாக வேலை பார்க்கும் கோடிக்கணக்கான மக்களின் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள் என்று கூட அவகாசம் கொடுக்காமல் இந்த அறிவிப்பு வந்துள்ளதால். நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கால்நடையாகவே பல நூறு கிலோ மீட்டர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள தங்களின் சொந்த இடங்களுக்குச் செல்லும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவில் அமைப்புசாரா தொழிற்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 42 கோடிக்கும் மேல் உள்ளனர். இந்த மக்களுக்கு எந்தவித சமூகப் பாதுகாப்பு கிடையாது. தினம் தினம் உழைத்தால்தான் சோறு, இல்லை என்றால் அன்று பட்டினி கிடக்க வேண்டியதுதான்.
ஏற்கெனவே இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில். இந்த ஊரடங்கானது மேலும் கோடிக்கணக்கான வேலை இழப்புகளை உருவாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது.
குறிப்பாக குறு, சிறு தொழில்துறைகள், ஆட்டோமொபைல், ஜவுளி, தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள், நகை விற்பனை, உணவு தொழில்கள், சுற்றுலாத் துறைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் என அனைத்துத் துறைகளும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை இழக்க உள்ளனர். அரசு அறிவித்துள்ள இந்த 21 நாட்கள் ஊரடங்கால் மட்டும் சுமார் 9 லட்சம் கோடிக்கு மேல் வர்த்தக இழப்பு ஏற்படும் என கூறப்படுகின்றது.
இப்படி 21 நாட்கள் எந்தவித வேலைவாய்ப்பும் இன்றி முடக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு எந்தவித பொருளாதார நிதியளிப்பும் இன்றி அவர்களை எல்லாம் பட்டினி கிடந்து சாகும் சூழ்நிலையை இந்த அரசு தற்போது உருவாக்கியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்த வைரஸ் தாக்குதல் ஊடுருவிய வேலையில். அப்போதே எதிர்க் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் இதன் வீரியத்தை பற்றி அரசுக்கு எச்சரிக்கை செய்தனர். ஆனால் எச்சரிக்கை செய்து எதிர்க்கட்சிகளை ஏளனமாக பேசிய மாநில முதலமைச்சர் தற்போது செய்வதறியாது மௌனம் காத்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஊடகங்கள் வாயிலாக பேட்டி அளித்து வரும் சுகாதாரத் துறையின் தலைமைச் செயலாளர். இந்த வியாதியின் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையை மட்டுமே அறிவித்து சென்றுவிடுகிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
தமிழகத்தில் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் வெள்ளை அறிக்கை விவரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வந்தாலும். சுகாதாரத் துறை சார்பில் முன்னெச்சரிக்கையாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை கூற மறுக்கிறது தமிழக அரசு. மேலும் பரவிவரும் இந்த வைரஸ் தாக்குதலால் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்ட பின்னரும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு குறிப்பிட்ட தொகை ஒதுக்கியும் விரைவான காலத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்காததன் காரணமாக தற்போது தமிழகத்தில் இதன் பாதிப்பு உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கிய தொழிற்பேட்டைகளான கிண்டி, கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மேல்மருவத்தூர், காஞ்சிபுரம், மதுரை, கோவை, திருப்பூர் என பல பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் இந்த திடீர் ஊரடங்கால் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமலும், அடுத்த வேலை சாப்பாட்டிற்கு வழியற்றும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றார்கள்.
தினசரி வருமானத்தை நம்பி வாழ்க்கையை நகர்த்தும் இவர்கள் உயிர் பிழைத்திருக்கத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டியது அரசின் கடமை. இல்லையெனில் ஊரடங்கு முடிவதற்குள் கொரோனா மரணங்களை விட பட்டினி சாவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகி விடும்.
பருவ மழை பொய்த்துது வறட்சி ஏற்பட்டு நடைபெற்ற பட்டினிச் சாவுகளை விட தற்போதைய சூழலில் இதன் தாக்கம் வெகுவாக அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
1806-ல் வேலூர் சிப்பாய் கலகத்துக்குப் பிறகு, சென்னை மாகாணம், கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் வந்த போது, தானியங்களின் விற்பனை பெருமளவில் வணிகப்படுத்தப்பட்டது. இதனால் உள்ளூர்ச் சந்தைகள் நலிவடைந்தன. தானிய உற்பத்தி குறைந்தது, ஆனால் பிரிட்டிஷ் அரசின் உணவு ஏற்றுமதி மட்டும் குறையவே இல்லை. இதனால் பதுக்கல் பரவலாகி, உணவுத் தானியங்களின் விலை கட்டுக்கடங்காமல் போனது. விவசாயிகள் விதை நெல்லை உண்டு மரணித்தனர்.
1942-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி, ஒரிசா மற்றும் வங்காளத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பெரும் புயல் தாக்கியதில், 30 ஆயிரம் பேர் இறந்தனர். இதனால் ஏற்பட்ட நோய்களால், 20 சதவீத நெற்பயிர்கள் அழிந்தை அடுத்து, வங்காளத்தில் 1943-ம் ஆண்டு ஜூலை மாதம் பஞ்சம் ஏற்பட்டது. இதில் இறந்துபோன இந்தியர்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் அதிகம் என்கிறார் ஜான் கீ என்ற ஆய்வாளர்.
1900 முதல் 1920 வரையிலான இருபது வருடங்களில் இந்தியாவில் மட்டும் 80 லட்சம் மக்கள் காலராவால் இறந்ததாகக் கணக்கிடப் பட்டுள்ளது.
உலகில் 85 கோடிப்பேர் பசியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இவர்களில் 82 கோடிப்பேர், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும். ஆண்டுதோறும் பட்டினியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மட்டுமே மூன்று கோடியே 50 லட்சத்துக்கும் அதிகம் என்று கூறுகிறது உலக சுகாதார அமைப்பின் அறிக்கை.
இந்தியாவில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு உத்தரவு காலத்தின் அவசர நிலையில். மக்களுக்கு கிடைக்கக்கூடிய அத்தியாவசிய பொருட்களை சரியான தருணத்தில் வழங்கி. மனதளவில் உடைந்து போயுள்ள பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொள்ள வழி வகை செய்வதே தலையாய கடமையாக இருக்க வேண்டும்.