பாபாசாகேப் என்று அன்போடு அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கர் இந்தியத் தலைமைகளில் மிகவும் வேறுபட்ட ஓர் ஆளுமை. அவரின் கோட்பாடுகள் தன் வாழ்பவனுபத்திலிருந்து பரந்துபட்ட ஒரு தேசத்திற்கு ஒளியூட்டுவதாகவே அமைந்திருக்கிறது. இன்றைக்கும் தேவைப்படும் ஒளியைப் போலவே அவரின் கருத்துக்களும் வாழ்வியலும் இருக்கின்றன.

இந்தியாவின் தீர்க்கமுடியாத நோய்மையாக இருக்கும் ஜாதியத்தின் கோரப்பிடியிலிருந்து கல்வி என்னும் கத்தியால் தன்னைத் தானே அறுத்துக் கொண்டு வெளியே வந்தவர் அவர். அரிதினும் அரிதாக அவர் தேடிப்படித்த கல்வி அவரை மாபெரும் சிந்தனையாளராகா உருமாற்றியிருந்தது, இழிமைகளைலிருந்து பெருமைக்கு என்னும் அவரின் வாழ்க்கையியல் உலகளவின் தனிமனித வாழ்விற்கு ஆகச்சிறந்த உதாரணம் அவர்,

இந்தியாவை விடுதலைக்குப் பிறகு ஒரு நவீன சமூக அமைப்பாகவே மாற்றவேண்டும் என்னும் எண்ணம் அவரின் எல்லா செயல்பாடுகளிலும் இருந்தது. அதற்காகத்தான் அவர் கல்வியை முன்னிருத்தினார். கல்விதான் மனிதர்களை அனைத்து அறியாமைகளிலிருந்தும் விடுதலை அடையச் செய்யும் என்பதை அவர் தெள்ளத்தெளிவாக உணர்ந்திருந்தார். அதற்கு அவர் மேலை நாடுகளில் பெற்ற கல்வி காரணமாக இருந்தது. வெறும் 25 ரூபாய் உதவித் தொகையில் அமெரிக்காவில், இங்கிலாந்தில் அவரால் படித்து அதில் சிக்கனம் பிடித்து 2000க்கும் மேலான புத்தகங்களையும் வாங்க முடிந்தது. அவர் பெற்ற கல்வியின் பயனாகவே அவர் அனைவருக்குமான கல்வியை வற்புறுத்தினார். கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு தங்கு தடையின்றி கட்டணமில்லா கல்வி கிடைத்திட வேண்டும் என்று அவர் ஆங்கிலேயே ஆட்சிக்காலத்திலேயே கோரியிருக்கிறார். கல்லூரிகளை உருவாக்கும் இடங்களாக பல்கலைக்கழகங்கள் இல்லாமல் ‘கற்பிக்கும்’ பல்கலைக்கழகங்களாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. எழுத்தர்களை உருவாக்கும் இடங்களாக பல்கலைக்கழகங்கள் இல்லாமல் அறிவொளி ஊட்டும் இடங்களாக அவை இருக்க வேண்டும் என்றும் நவீன உலகின் தேவைகளை நிறைவேற்ற பல்கலைக்கழகப் படிப்பு தேவை என்பதையும் அவர் வற்புறுத்தினார்.

அறிவியல் சார்ந்த ஒரு நவீன சமூக அமைப்பினை உருவாக்க வேண்டும் என்பது அவர் கனவு. நவீனச் சமூகம் ஏற்றத்தாழ்வு அற்றதாக இருக்க வேண்டும், பெண்விடுதலை, பெண்கல்வி உடையதாக இருக்க வேண்டும், பகுத்தறியும் பான்மை மிக்கதாக இருக்க வேண்டும் என்றே அவர் கருதினார். அவரின் அயராத வாசிப்பும் சமூக அக்கறையும் இந்தியச் சமூகத்தினை அதன் அனைத்து கோணல் மாணல்களிலிருந்து நேர்படுத்துவதற்காகவே இருந்தன என்பது முக்கியத்துவம் வாய்ந்த உண்மை. அதனால்தான் தேசியம் என்பதே சமூக உணர்வு கொண்டதாக  இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். எல்லைகளும் மண்ணும் மட்டுமல்ல மக்களின் மனங்களும் விடுதலைப் பெற வேண்டும் என்று எண்ணினார். அந்த விடுதலை உணர்வுதான் சமூக உணர்வு. அது ஜனநாயகத்திலிருந்துத் தழைக்கிறது என அவர் உறுதியாக நம்பினார்.  “ஜனநாயகம் என்பது ரத்தம் சிந்தாமல் மக்களின் பொருளாதார சமூக வாழ்க்கையில் புரட்சிகர மாற்றத்தை ஒரு வடிவம்” என்பது அவரின் கூற்று. ஒடுக்கும் சமூகம் என்றும் ஒடுக்கப்படும் சமூகம் என்று கிடப்பது இரத்தக்களரிக்கான நுண்ணரசியலை சுமக்கும் ஜனநாயகத்தின் இழிநிலையாகிவிடும். இன்று நடக்கும் பல்வேறு மோதல்களுக்கு இதுவுவே காரணமாக அமைகிறதை நாம் கண்கூடாகப்  பார்க்கிறோம்.

அவருக்குக் கிடைத்த அரசியல் சட்டம் எழுதும் வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் மூன்று முக்கியக் குறிக்கோள்களைத் தந்தார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். சுதந்திரம் தன்னளவில் ஒரு தனிமனிதர் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை. அதை அரசியல் சட்டம் நல்குகிறது. தன்னுடையக் கருத்துக்களைக் கூறும்  அல்லது மறுக்கும் உரிமை ஒருவருக்கு உண்டு. சமத்துவம் என்பது சமூக சமத்துவம். தேர்தல் அரசியலில் ஒரு ஓட்டுக்கு எல்லோருக்கும் ஒரே மதிப்புதான் ஆனால் சமூகத்தில் ஒரு மனிதருக்கு இருக்கும் மதிப்பும் மாண்பும் இன்னொரு மனிதருக்கு இல்லை. இது சமத்துவமின்மை. சக மனிதரின் மாண்பு சமத்துவமின்னையால் குலைக்கப்படுகிறது. இது இல்லாமல் அனைவரும் சமம் என்னும் நிலை அடையப்பட வேண்டும், சகோதரத்துவம் என்பது சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் அனுபவிக்கும் வாய்ப்பு. சமூக உறுப்பினர்களிடையே நல்லிணக்கம். குறைவுள்ள இடங்களை நிரப்பும் கண்ணியம். அனைவரும் ஒன்றாக கைக்கோர்க்கும் ஓர் ஏற்பாடு. ஆனால் இவையெல்லாம் இன்னும் எட்டாக் கனிகளாகவே இருக்கின்றன என்பதுதான் நமக்கிருக்கும் கெடுவாய்ப்பு.

 

இல்லையென்றால் ஒன்றுபட்ட இந்தியச் சமூகம் வென்றுவிட்ட இந்தியச்சமூகமாக மாறியிருக்கும். இங்கே இருக்கும் படிநிலைப் படுத்தப்பட்ட சமத்துவமின்மை இந்தியர்களை பின் தங்கியவர்களாகவே வைத்திருக்கிறது. வணிகத்தை நாம் எடுத்துக்கொள்வோமென்றால் சமூக முதலீடு முக்கியமாக இருக்கிறது. தேர்தல் அரசியலும் அப்படித்தான் மாறியிருக்கிறது சமூக அடர்த்தி தேர்தலை நடத்துகிறது. இதையெல்லாம் தான் வாழ்ந்த காலத்திலேயே ஆய்ந்த அறிந்து எழுதியும் பேசியும் போராடியும் வந்தவர் தான்  டாக்டர் அம்பேத்கர்.

அவரின் கொள்கைகள் அனைத்தும் கூறுபடாத ஒற்றுமைச் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றேதான் சுற்றிச் சுழன்றன. அதற்காக அவர் தொடங்கிய இயக்கங்களும் அவற்றின் செயல்பாடுகளும் அமைந்தன என்பதை வரலாற்றில் நாம் காண்கிறோம். பகிஷ்கரித் ஹித்தாகாரினி சபா, கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஒடுக்கப்பட்டோர் கல்விக்கழகம் மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தது. சமூக சமத்துவக் கழகம் சமூக வேறுபாடுகளை அகற்றப் போராடியது, சுதந்திரத் தொழிலாளர் கட்சி, மக்களை அரசியல் மயப்படுத்த, கூலிவிவசாயிகளுக்காக நிலகுத்தகைத்தாரர்களுக்காக,  விவசாயக் கூலிகளுக்காக போராடியது. பட்டியலின சமூகக் கூட்டமைப்பு விளிம்புநிலை மக்களின் அரசியல் உரிமைகளைக் கோரியது.

அவர் கொண்டு வந்த மசோதாக்கள் அதிமுக்கியமானவை அவரின் ’இந்து கோட் பில்’ இந்தியப் பெண்ணியத்தின் ஆதார மூலங்களைக் கொண்டது. பெண்களுக்கு சொத்துரிமை, கல்வி உரிமை, பிரசவக் காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு, விவாகரத்து உரிமை என பெண்ணியத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியது.

தான் சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவதற்கானக் காரணங்களில் அன்றைய அரசு இந்த இந்து மசோதோவை ஏற்காதது என்பதும், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடுக்கான ஆணையத்தை அமைக்காததும் என்று அவர் அறிவித்தது நாம் ஈண்டு நோக்கத் தக்கது.

இத்தகைய நவீன இந்தியாவின் சிற்பியை நாம் இன்றைய சமூகம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். மாறாக நாம் அவரை கம்பிக் கூண்டிற்குள் வைத்திருக்கிறோம். பல்துறை வல்லுனரான அவரை இந்தியச் சமூகம் அறிவுக்கண் கொண்டு பார்க்க வேண்டும் என்பதே இன்றைய தேவை.

யாழன் ஆதி,  கவிஞர். இசையுதிர்காலம், செவிப்பறை, நெடுந்தீ போதலின் தனிமை, காலிகோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும், யாருமற்ற சொல், கஸ்பா, சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு, தம்மபதம், போன்ற நூல்களின் ஆசிரியர்.

yazhanaathi@gmail.com