அம்மு என்ற பெயரின் மீது

அவளுக்கு அத்தனை காதல்

அத்தனை ஏக்கம்.

 

அவன் அவளை அம்மு என அழைக்கவேண்டுமெனெ

எப்போதும் விரும்பினாள்

ஆனால் அவனோ  கடைசி வரையில் இவளுக்கு

எந்த செல்ல பெயரையும் சூட்ட வில்லை..

 

கடைசியில் இவள் அவனை

அம்மு என்று அழைக்கத் தொடங்கினாள்

அவன் பெயரை கூட அம்மு என்றே

தன் அலைபேசியில் பதிந்து வைத்தாள்.

 

அவனோ அவள் தன்னை

அம்மு என்று அழைப்பது

தனக்கு பிடித்திருக்கிறதா என சொல்லவே இல்லை..

எப்படி அவளை அவனுக்கு  பிடிக்குமா

என்று சொல்லவில்லையோ

அதே போல் இதையும் அவன் சொல்லவில்லை..

 

அவன் தான் அவளை காதலிக்கவே இல்லையே

பிறகு எப்படி சொல்வான்..

இவளும் நீ என்னை காதலிக்கவில்லையா

என்று அவனிடம் கேட்கவேயில்லை.

 

அம்முவுக்கு எதையும் கேட்டு பெறுவது பிடிக்கவில்லை.

ஆனாலும் எப்படிக் கேட்பதென்றும்

அவளுக்கு தெரியவில்லை

 

-எஸ்.விஜய ஷாலினி