‘போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது’
என்ற கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன்
அது இன்னொரு கொடுங்கனவின் விழிப்பு

‘இஸ்லாமிய அடிப்படைவாதம்
அதிகரித்துவிட்டது’ என்ற குரலும்
கூடவே கேட்டது
தேச பக்தர்கள் தங்கள் துருப்பிடித்த ஆணிகளால்
சிலேட்டில் எழுதுகிறார்கள்
பல் கூசுகிறது

எல்லாவற்றையும்தாண்டி
வேறொரு குரலும் கேட்டது

கருப்பு இரவில்
குண்டாந்தடிகள் தலையில் இறங்குகையில்
கேட்கும் கூக்குரல்

அதையும் மீறி
எதிர்ப்பின் இன்னொரு குரல்
உரத்துக் கேட்கிறது
‘அடிபணிவதென்றால்
அது அல்லா ஒருவனுக்கே’

அந்தக் குரல்
அளவற்ற தன்னம்பிக்கையைத் தருகிறது
அது தெருத்தெருவாகப் பரவுகிறது
பிறகு நகரம் நகரமாக
பிறகு ஊர் ஊராக
காற்றில் ஒரு நெருப்பைபோல
இருளில் ஒரு வெளிச்சம் போல

சாலைகளில் வாகனங்கள்
நிற்கின்றன
முடிவற்ற வரிசையில் நீள்கின்றன
‘கலைந்து செல்லுங்கள்’ என
காக்கிக்குரல்கள்
லவுட் ஸ்பீக்கரில் உத்தரவிடுகின்றன
‘எங்கே செல்ல வேண்டும்
தடுப்பு முகாம்களுக்கா?’
என்று கேட்கிறாள்
முகத்திரை அணிந்த ஒருத்தி
‘பாகிஸ்தானுக்குப் போக
எங்களுக்குப் பாதை தெரியாது’
என்று முழங்குகிறான் ஒரு இளைஞன்

முக்காடிட்ட பெண்கள்
அலை அலையாக தெருவுக்கு வருகிறார்கள்
வரலாற்றின் திரைகள் பற்றி எரிகின்றன
அவர்கள் குழந்தைகள் மடியில் உறங்குகின்றனர்
அவர்களின் உடல்களை அவமதிக்கும் கைகள்
நீள்கின்றன
அது ஒரு பழைய தந்திரம்
அவர்கள் உறுதியுடன் அங்கேயே நிற்கிறார்கள்

தடிகள் காற்றில்
ரத்தம் வேண்டி சுழல்கின்றன
அவர்கள் ஓடவில்லை
அங்கேதான் மெளமாக
தங்கள் குருதியை
வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள்

இழப்பதற்கு எதுவுமில்லாதவர்களை
எதிர்காலம் என்ற ஒன்று இல்லாதவர்களை
அச்சுறுத்துவது கடினம்
வரலாற்றின் காரிருள் அவர்கள் தலையில்
இறங்கிக்கொண்டிருக்கிறது
அவர்கள் விடிய விடிய அங்கேதான்
இருக்கப்போகிறார்கள்

நாடெங்கும் ஒரே இரவில்
எத்தனை ஆயிரம் வழக்குகளைத்தான்
பதிவுசெய்வது
காவல் நிலையங்களில்
காகிதப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது

கருப்பு இரவுகள்
கோபத்தால் சிவக்கின்றன
குருதியால் சிவக்கின்றன
நிலம் அதிர்கிறது
எதிர்ப்பின் டினோஸர் எங்கோ
கண் விழித்து எழுகிறது

குண்டாந்தடியை கீழே போடு
அவர்கள் நிராயுதபாணியாக அமர்ந்திருக்கிறார்கள்
அவர்கள் அமைதியின் வழியில் அமர்ந்திருக்கிறார்கள்
அமைதிக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது
சமாதானத்திற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது
நீதிக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது
இதையெல்ல்லாம் பேரவலமாக்காமல் இருக்க
இன்னும் அவகாசம் இருக்கிறது

நீ எல்லாவற்றையும்
திரும்பப் பெறாதவரை
அவர்களும் திரும்ப மாட்டார்கள்
அதில் எந்த மாற்றமும் இல்லை

கொஞ்சம் பொறுமையாக இருங்கள்
இப்போது வாகனங்களை நிறுத்தாவிட்டால்
கொடுங்கோன்மையின் தேர்ச்சக்கரங்கள்
எங்கள் தலையில் ஏறுவதை நிறுத்த முடியாது
நீங்கள் இன்று
கொஞ்சம் தாமதாமாக வீடுசெல்ல நேர்வதை
பொறுத்துக்கொள்ளுங்கள்
இல்லாவிட்டால் நாங்கள்
ஒருபோதும் வீடு திரும்பமுடியாது

அவர்களுக்கு காது கேட்கவில்லை
அதுதான் தெருவில் நின்று
இவ்வளவு உரத்துக் கத்துகிறோம்
அவர்களுக்கு கண்கள் இல்லை
அதுதான் நாங்கள் இங்கிருக்கிறோம்
என்பதை உணர்த்த
இவ்வளவு சத்தம் எழுப்புகிறோம்
அவர்களுக்கு இதயம் இல்லை
அதை உண்டாக்குவதற்கே
இவ்வளவு ரத்தம் சிந்துகிறோம்

15.2.2020
காலை 9.40
மனுஷ்ய புத்திரன்

(குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் மக்கள் மேல் நடத்தப்படும் வன்முறையின் பிண்ணணியில் எழுதப்பட்டது)