நான்கைந்து ஸ்பைடர் மேன்களுக்கு மத்தியில்

ஒரு ஹல்கிற்கு

ஹல்காகவே இருக்க முடிவதில்லை…

 

ஸ்பைடர் மேன்கள்

ஹல்கின் தடித்த புஜங்களைப் பார்த்துவிட்டு

‘இந்த புஜங்கள் காற்றின் வேகத்தை

சாதகமாகப் பயன்படுத்த அனுமதிக்காது”

என்று குறை சொன்னார்கள்…

 

ஹல்க் ஆக்ரோஷமாக வன்மத்துடன் கர்ஜிக்கையில்

“ஹல்கிற்கு புத்தியை பயன்படுத்தத் தெரியவில்லை”

என்றார்கள்…

 

ஹல்க், ஒரு கண்டத்திலிருந்து

மற்றொரு கண்டத்திற்கு தாவுகையில்

“தடித்த உடலால் அவனால் தொடர்ந்து

பறக்க முடியாது”

என்றார்கள்…

 

ஹல்கின் துரதிருஷ்டம்,

அவனை

ஸ்பைடர் மேன்களின் கூடாரத்தை விட்டு

வெளியே தள்ளுவதுமில்லை…