ஒரு பொருள் கவிதைகள்–6 : “காகம்” கவிதைகள்

தொகுப்பு: செல்வராஜ் ஜெகதீசன்

 

என் வீடு

தேவதச்சன்

மொட்டை மாடியிலிருந்து

விருட்டென்று எழுந்து பறந்து செல்கிறது காகம்.

அது விட்டுச் சென்ற

என் வீட்டில்

குக்கர் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

O

வீடு

 ராஜ சுந்தரராஜன்

வீடொன்று வேண்டும்.

வெயிலையோ மழையையோ

பகைப்பதற்கு அல்ல.

 

காக்கையும் கூடு கட்டும்

அடைகாக்க.

O

மொழி

பெருமாள் முருகன்

காக்கையின் மொழியில்

சில சொற்கள்தான்

எனக்குத் தெரியும்

கோர்வையாகப் பேச முடியாது

எனினும்

புரிய வைத்துவிடலாம்

 

என் மொழியில்

காக்கைக்கு

ஒரு சொல்லும் தெரியாது

என்முன் வந்து எப்போதும்

தன் மொழியிலேயே

கத்திக் கரைகிறது

 

காக்கை ஒருபோதும்

வருந்தியதாகத் தெரியவில்லை.

 

o

சுலபமாய்

ஷங்கர்ராமசுப்ரமணியன்

சுலபமாய்

சாவைக் கைவிரித்து

நாதுருத்தி

சிறுபெண் நிகழ்த்திக்

காட்டுவது

பயமாய் இருக்கிறது.

 

ஏதோ ஒரு

சமனற்ற நிலையில்

காகத்தின் இறக்கை

பட்டும்

என் மரணம் நிகழக்கூடும்.

 

O

பிதுர்தோஷம் மாற

என். டி. ராஜ்குமார் 

 

பிதுர்தோஷம் மாற

அப்பா படத்தில் மாலையிட்டு

பாயாசம், பப்படம் சோறு எடுத்து

காக்கைக்கு கொண்டு வைக்க

உள் பயத்தோடு

பிகுசெய்து போகும் காக்கை

பின்

கா…கா…சொல்லி

காகம் வந்து சோறு தின்று போனபின்பு

பிள்ளைகள்வந்து உண்ணும்

மறுநாள் வரும் காக்கை

ஒரு பிடி சோற்றுக்காய்

கா…கா…வென கரையும்

அப்பாவைப்போல்.

O

இப்படியும் சில விஷயங்கள்

ராஜமார்த்தாண்டன் 

பறவைகளில் காகங்கள் மீது
அலாதி பிரியம் எனக்கு

குழந்தைகள் கைப்பண்டத்தை
லாகவமாகப் பறித்துச் செல்லும்
திருட்டு ஜென்மம்தான்

வீட்டு மதில்மேல் வந்தமர்ந்து
சமயா சந்தர்ப்பம் அறியாது
கத்தித் தொலைக்கும் மூடப்பிறவிதான்

எனினும்

நான் தவழ்ந்து வளர்ந்த கிராமத்திலும்
இன்று பிடுங்கி நடப்பட்ட இந்த நகரத்திலும்
தினமும் என்னைப் பார்த்து

கரைந்தழைக்கும் நண்பனல்லவோ அது.

o

இரயில்  கிளம்பிச் சென்றதும்

மகுடேசுவரன்

இரயில்

கிளம்பிச் சென்றதும்

நிலையத்தில்

சூழ்ந்த தனிமையை

நானும் ஒரு காக்கையும்

பகிர்ந்துண்டோம்!

 

தனிமையை

முழுதாகத் தின்ன முடியாமல்

காக்கை பறந்துவிட்டது.

 

தின்று தீர்க்க வேண்டிய

என் பங்கு

மிகுந்துவிட்டது!