காதல்…

உடல் என்னும் நிலத்தில் உண்டாகும் முதல் நிலநடுக்கம்.

வறண்ட பாலையையும் நந்தவனமாக்கும் மாயவிதை.

காதல் வந்தால் இதயக்கூட்டின் ரத்த நாளங்களிருந்து பட்டாம்பூச்சிகள் மட்டுமே நாடி நரம்பெங்கும் பாய்ந்து பறந்துகொண்டிருக்கும்.

காதல் நீரை நெருப்பாக்கும். நெருப்பை நீராக்கும். தன்னை நேராக்கும். தனக்கெதிரான எல்லாவற்றையும் தூளாக்கி மண்ணாக்கும்.

மனிதன் மூளையால் சிந்திக்கிறான் என்கிறது அறிவியல். மனிதன் இதயத்தால் சிந்திக்கிறான் என்கிறது காதல்.

குழந்தையாய்ப் பிறந்து தவழ்ந்து நடந்து ஓடும் மனிதனை மீண்டும் விழுந்து எழுந்து பறக்க வைக்கிறது காதல். காதலுக்கு கண் காது மூக்கு வாய் என எந்த உறுப்புகளும் இல்லை. அதனிடம் இருப்பது இதயம் என்கிற ஓருறுப்பு மட்டுமே!

காதலுக்கு கால நேரம் கிடையாது. இருவருக்குள்ளும் புகுந்துபோக காற்றுக்கும் கூட அனுமதி கிடையாது. காதல்கொண்ட மனங்கள் கால்களால் நடப்பதில்லை. அவைகள் நாள்தோறும் நாள்தோறும்… இல்லையில்லை… நொடிதோறும் நொடிதோறும் சிறகுகளால் பறந்துகொண்டிருக்கும்.

காதலின் உலகம் வண்ணங்களால் நிறைந்தது. அது தொட்டதும் ஒட்டிக்கொள்ளும் வண்ணத்துப்பூச்சியாய் அன்பை அள்ளி அள்ளித் தெளிக்கும். காதல் என்ற சொல் மட்டுமே எழுதினாலோ சொன்னாலோ ஏன் நினைத்தாலோ கூட இனிக்கின்ற கற்கண்டு!

காதல் ஹார்மோன்கள் தொடுகிற வயதே மனிதனுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட ரட்சகக் காலம்.அந்த பருவத்தில் உடலில் ஊறும் பௌதிக மாற்றமே காதல் குறித்து நொடிதோறும் ஆய்வுகள் செய்கிறது

.தன் இணையிடம் காதலைச் சொல்லப் போகும் அந்த முதல் நாள் அத்தனைச் சுலபமாய் அமைந்துவிடாது ஒருவருக்கு. பலமுறை மனதுக்குள் ஒத்திகைகள் அரங்கேறும். நாமே நாமாகவும் நாமே அவராகவும் பல நூறு முறையாவது ஓரங்க நாடகம் நடத்தியிருப்போம். காதலை ஒரு பூட்டைப் போல உடைத்து உள்நுழைத்து உள்ளே புக முடியாது. காதல் என்பது உணர்தலில் கிடைக்கிற இரட்டைச் சாவி. ஒரே நேரத்தில் இரண்டு மனங்களின் பூட்டுகளும் இருவராலும் மாறி மாறி திறந்துகொள்ளும்.

காதலை உணர்தல் என்பது வாழ்வை உணர்தல். ஓடவும் பறக்கவும் அணைக்கவும் விட்டுக்கொடுக்கவுமென அத்தனை நல்லனவைகளையும் அட்சயமாய் அள்ளக் குறையாது அள்ளிக்கொடுக்கும் வாழ்க்கை மந்திரம்.

காதல் தன் இணையை இமைக்குள்ளும் இதயத்துக்குள்ளும் வைத்து அழகு பார்க்கிறது. காதலுக்கு கவிதைமொழி தான் தெரியும். அதற்குப் பலநேரங்களில் நடைமுறை கணக்குகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. ரத்த பந்தங்கள் எதற்காகவும் சாகத்துடிக்காத மனம் காதலுக்காக கழுத்தை நெறித்துக் கொள்கிறது. காதல் வந்தவன் தன்னை இவ்வுலகின் மீட்பனாக நினைக்கிறான். காதல் தொலைத்தவன் தன்னைத் தானே பாதாளத்தில் புதைக்கிறான். அப்படி புதைந்த ஒருவனையும் காதலே மீட்கிறது. அது கண்ணுக்குத் தெரியாத மாயமில்லை. காதலை அன்பால் கண்டடையலாம். காதல் மிருகத்தனத்தை வளர்பதில்லை. காதலுக்கு பழிவாங்கும் உணர்வில்லை அப்படி வாங்கத்துடிக்குமென்றால் அதுவரை அவர்கள் கொண்டது காதலே இல்லை.

காதல் தொடாமல் தொடரும் வரை அது கடலுக்கும் நிலாவுக்குமான அழகைத் தரும். காதல் தொட்டுத் தொடரும்போது அது கடல் அலைக்கும் கரைக்குமான அழகைத் தரும். காதலுக்கு இலக்கில்லை. அது அன்பின் ஆன்மாவின் முடிச்சு. அதை வரையறை செய்ய இயலாது . காதலின்றி வாழ்தல் நடக்கலாம். ஒருமுறையேனும் காதலைச் சுகிக்காமல் வீழ்தல் நல்லதல்ல.

காதல் என்னும் மந்திரச்சாவியை முத்தமிட்டுத் திறங்கள். வாழ்க்கைத் திறக்கட்டும்.

அன்பின் வீணையில் காதலை மீட்ட வாழ்த்துகள்!