காலங்காலமாய் காதல் பற்றி இங்கு எவ்வளவோ அதியுணர்வுநவிற்சி (Romantic) சொல்லாடல்கள் திரும்பத்திரும்ப சொல்லப்படுகின்றன. உலக இலக்கியங்களில் ஆதி நாள் தொட்டே காதல் ஒரு முக்கிய பாடுபொருள். மறுபுறம் பகுத்தறிவின் துணைகொண்டு சொல்லப்படும் கார்ட்டீசிய ஆய்வுமுறையிலான காரணகாரிய விளக்கங்கள். இந்த இரண்டுமே ஏதோ ஒருவகையில் குறையுடையதாகவேதான் எப்போதும் இருந்துவந்திருக்கின்றன.

காதல் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒரே பதில் எப்போதும் சாத்தியமில்லை. உலகில் எத்தனை முகங்கள் உள்ளதோ அத்தனை மனங்கள் உள்ளது என்றால் காதல் பற்றியும் அத்தனைக் கருத்துகள் இருக்கக்கூடும். அதனதன் அளவில் அவரவர்க்கு அது சரி என்றே வைத்துக்கொள்வோம். கிட்டதட்ட எல்லோரும் காதல் என்றால் என்னவென்று ஏற்றுக்கொள்ளும் பொதுப் பண்பு என்னவென்று பார்த்தால் அது மற்றமை மீதான நேசம் என்று சொல்லலாம்.

இந்தப் பிரபஞ்சத்தில் அனந்த கோடி ஸ்தூலப் பொருட்கள் இருக்கின்றன. இந்தப் புவியைவிட பல மடங்கு பெரிய, பல மடங்கு ஆற்றல்கொண்ட விண்மீன்கள், நெபுலாக்கள், கருந்துளைகள் என நம் கற்பனை செய்யக்கூட சாத்தியமற்ற ஸ்தூலப் பொருட்கள் இருக்கின்றன. இந்த அத்தனைக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு ஓர் உள்ளங்கை அளவு ஸ்தூலப் பொருளுக்கு உண்டு. அதன் பெயர் மூளை. இந்த சின்னஞ்சிறிய ஸ்தூலப் பொருளுக்கு மட்டுமே இப்பிரபஞ்சத்தில் தான் என்று தன்னை உணரும் பேராற்றல் உள்ளது.

ஆமாம்! டி.என்.ஏ எனும் உயிர்கட்டுமானம் கொண்ட அத்தனை பொருட்களுக்கும் தான் எனத் தன்னை உணரும் தன்மைஉண்டே என்று நீங்கள் கேட்கலாம். உண்டுதான். ஆனால் மனிதன் அளவுக்கு மற்றமையைப் பிரித்துப் புரிந்துகொள்ளும் ஆற்றல் மற்ற உயிர்களுக்கு இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ஒரு விலங்குக்கு மற்றமை என்பது இரை, எதிரி, இணை என்கிற மூன்றே வகையினதுதான். இரை என்று தெரிந்தால் வேட்டையாடும். எதிரி என்றால் பொருதும் அல்லது விலகிப் போகும். இணை என்று தெரிந்தால் புணரும். பெரும்பாலான உயிர்களுக்கு மற்றமை என்பது இவ்வளவுதான். ஆனால், மனிதன் எனும் ஹோமோ சேப்பியன்ஸுக்கு மற்றமை என்பது அண்டை வீட்டுக்காரன் முதல் அமைச்சர்வரை அத்தனை வகையுடையதாய் இருக்கிறது. இத்தனை வகைமகளில் இணை என்ற ஆதி வகைமைதான் மானுடர்க்கு இன்றும் கவர்ச்சி நிறைந்ததாய் இருக்கிறது.

மனிதன் மற்றமையை நேசிப்பது என்பதை தாய்மையிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கலாம் என்று ஒரு தரப்பு சொல்கிறது. அதாவது, தாய் என்ற உணர்வுதான் மற்றமைமீதான நேசத்துக்கு அடிப்படையாய் அமைந்தது என்பது ஒரு பார்வை. மனிதன் மற்றமையை நேசிப்பதை காதலியிடமிருந்து அல்லது இணையை நேசிப்பதிலிருந்து கற்றுக்கொண்டிருக்கலாம் என்று இன்னொரு தரப்பு சொல்கிறது. தாய்மைக்கும் முந்தையது காதல்; காதல் இல்லாமல் தாய்மை ஏது என்பது இந்தத் தரப்பின் வாதம். இது ஒரு முடிவில்லாத பட்டிமன்ற விவாதமாய் இருக்கக்கூடும். ஆனால், மனிதன் தன் சக மனிதன் எனும் மற்றமையை நேசிப்பதை காதலில் இருந்தும் கற்றுக்கொண்டான் என்றே நாம் இப்போதைக்குப் புரிந்துகொள்ளலாம்.

சிவில் உணர்வுமிக்க ஒரு சமூகத்துக்கு மற்றமையை நேசிப்பதும் மற்றமையை வாழ அனுமதிப்பதும், அதன் கருத்துகளோடு முரண்பாடுகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதை சகித்துக்கொள்வதும் அடிப்படையான தேவைகள். ஏதேனும் ஒரு வகையில் இந்தக் காதல் மற்றமையை நேசித்தல் எனும் அந்த மாண்பை செய்கிறது என்ற வகையில் நம் நவீன சமூகத்துக்கு முக்கியமானதாகிறது.

இந்தப் பிண்ணனியில் யோசித்தால் அடிப்படைவாதிகள், கலாசார காவலர்கள் ஏன் காதலுக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பது இன்னும் நன்கு புரியும். ஒருவகையில் அவர்கள் நவீன சமூகத்தின் அத்தனை விழுமியங்களுக்கும் எதிரானவர்கள். மனிதர்களுக்கு இடையே ஒற்றுமை, இணக்கம் என்பதைவிடவும் பிரிவினையையும், அந்நியமாதலையும் முன் வைப்பவர்கள். அவர்களின் மதம் முதல் அத்தனையும் இந்தப் பிரிவினைவாத எதிர்மானுட சிந்தனைகளை முன்வைப்பவை. காதல் இந்த எதிர் மானுட சிந்தனைகளுக்கு எதிராகச் செயல்படுகிறது. இதுவே அவர்களின் சிக்கல்.
இன்றைய நவீன காதல் முந்தைய தலைமுறையின் காதலில் இருந்து எவ்வளவோ மாறிவிட்டிருக்கிறது. அது எப்போதுமே அப்படித்தான். சமூகத்தில் ஆண் பெண் உறவுகளுக்கு இடையிலான ஊடாட்டம் மாற மாற காதல் என்ற சொல்லுக்கான வரையறைகளும் மாறவே செய்யும். வேறு எங்கும் செல்ல வேண்டாம் நம்முடைய திரைப்படங்களின் உள்ளடக்கங்களைப் பார்த்தாலே காதல் எப்படி மாறிவந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

1950-60களில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் ஒரு பெண் தனிமையில் பாடும் பாடல்கள் நிறைய இருப்பதைக் கவனித்திருக்கலாம். ‘கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ’, ‘மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’, ‘என்னை மறந்ததேன் உயிரே’, ‘நீ வருவாய் என நான் இருந்தேன்’, ‘நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்’ போன்ற பல பாடல்கள் அன்று இருந்தன. ஆண்களின் சராசரி வயது நாற்பதாகவும் வரதட்சணைக் கொடுமை அதிகமாகவும் இருந்த இந்தியக் கூட்டுக் குடும்பங்களில் அன்று பெரும்பாலான வீடுகளில் ஏதேனும் ஒரு தங்கையோ, அக்காவோ, அண்ணியோ வீடுகளில் தனித்திருந்த காலங்கள் இருந்தன. தங்கள் வீட்டில் உள்ள சகோதரனோ, சக்களத்தியோ மகிழ்ச்சியாய் இருப்பதைப் பார்த்து மனம் வெதும்பிக் கிடந்த தனியர்கள் அவர்கள். அந்தப் பாடல்கள் அவர்களின் தனிமைக்கான ஆறுதல்களாக இருந்ததால் இப்படியான பாடல்கள் தொடர்ந்து ஹிட் ஆகவே, இவை திரும்பத்திரும்ப உருவாக்கப்பட்டன. கைம்பெண்கள், கணவனைப் பிரிந்தவர்கள் மறுமணம் செய்யக் கூடாது என்று சொல்லப்பட்ட நாட்களவை.

பின் ஒரு காலம் வந்தது. பெண்கள் வீட்டை விட்டு படிப்பதற்காகவும் வேலைக்காகவும் வெளியே வந்த காலங்கள். அந்நாட்களில்தான் இந்திய சமூக ஆண் என்பவன் வரலாற்றில் முன் எப்போதைவிடவும் அதிகமாக மற்ற சமூகத்துப் பெண்களை (சமூகம் என்ன சமூகம் ஜாதிதான்) பார்க்க நேர்ந்தது. அவர்களோடு பழக நேர்ந்தது. வீட்டைவிட்டு பெண்கள் வெளியே வராத காலங்களில் காதல் என்பது சொந்த சமூகத்துக்குள்ளாக நிகழ்வதாக அத்தை மகன், மாமன் மகள் உறவாகவே இருந்தது. சிறுவயதிலிருந்தே பார்த்து, பழகி, ஒன்றாய் விளையாடிய இணையிடம் பரஸ்பர கூச்சம், தயக்கம் அதிகம் இருந்திருக்காது.

ஆனால், அதில் இல்லாத கூச்சமும் தயக்கமும் பிற சமூகத்துக்குப் பெண்களிடம் பழக நேர்ந்தபோது ஏற்பட்டிருப்பது இயல்புதான். என் தலைமுறையின் அண்ணன்கள், அக்காக்கள் காதல் முழுதும் ஒருதலைக் காதல்தான். சொல்வதற்கே கூச்சப்பட்டு, சொன்னாலும் தயங்கித் தயங்கி காதலித்து, கடிதம் மூலமே ஆசை வளர்த்து, காதலைப் பரிமாறி, சந்திக்கத் தயங்கி, சந்தித்தாலும் தொட்டுக்கொள்ளத் தயங்கி, தொட்டுக்கொண்டாலும் மணம் செய்யத் தயங்கி எவரையோ மணமுடித்து என்றே முடிந்துபோனது அந்தத் தலைமுறை. அதனால்தான் அந்தத் தலைமுறையில் சினிமா பாடல்களில் அத்தனை ஒருதலைக் காதல்கள் இருந்தன. டி.ராஜேந்தர் முதல் முரளி வரை பலரின் வெற்றிக்கதைகளும் எங்கள் அண்ணன்களின் கதைகள்தான்.

தொண்ணூறுகளின் மத்தியில் செல்போன் சந்தைக்கு வந்தபோது அதன் நிறுவனர் ஒரு வணிக இதழுக்கு அளித்த பேட்டியில் இந்தப் பொருள் இந்தியாவில் ஒரு பெரிய கலாசாரப் புரட்சியையே நிகழ்த்தப் போகிறது என்றார். எப்படி என்று கேட்டபோது அவர் சிரித்துக்கொண்டே சொன்ன பதில், ‘இதைக் கொண்டு பெண்கள் ஆண்களை எளிதாகத் தொடர்புகொள்ள முடியுமே’ என்பதாக இருந்தது. அப்போது அது அவ்வளவு புரியவில்லை. இப்போது யோசித்துப் பாருங்கள். கையடக்க செல்போனும் இந்த நவீன தகவல் தொடர்பு சாதனங்களும் நம் ஆண் பெண் உறவுகளை எத்தனைப் பாதித்திருக்கின்றன.
ஆண்களும் பெண்களும் ஒன்றாகப் புழங்கும் வெளிகள் இன்று அதிகரித்திருக்கிறது என்பதால் காதல் போன்ற சொல்லாடல்களின் பரிணாமங்களும் முன்னைவிடவும் நிறைய மாறியிருக்கின்றன. காதல் என்பதை டேட்டிங், ஃப்ரெண்ட்ஸ் வித் பெனிபிட், நோ ஸ்ட்ரிங்ஸ் அட்டாச்டு, லிவிங் டுகெதர் என்று விதவிதமான சொற்களில் சொல்லிக்கொண்டிருக்கிறது இந்தத் தலைமுறை. ஆனால், இப்போதும் தமிழ்ச் சமூகத்தில் காதல் என்பது திருமணத்தில் முடிய வேண்டும் என்பதைப் போன்ற மனநிலைகளும் இருக்கவே இருக்கின்றன. குடும்பம் என்ற அமைப்புக்கு சமூகத்தில் உள்ள வலிமை எத்தகையது என்பதன் வெளிப்பாடு இது.

இத்தனையைப் பேசிவிட்டு பாய் பெஸ்ட்டி, கேர்ள் பெஸ்ட்டியைப் பற்றி பேசாவிட்டால் எப்படி? இந்தச் சொல்லாடல்கள்தான் புதிது. மற்றபடி இப்படியான உறவுநிலைகள் எப்போதுமே இருந்து வந்திருக்கின்றன. ஆண் பெண் உறவுநிலைகளில் உயர்வாக்கம் (Sublimation) என்றொரு செயல் உண்டு. தன்னால் அடையமுடியாத மாற்றுப் பாலின இணையை இணை என்று சொல்லாமல் அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, தம்பி, தங்கை என்று உயர்வாக்கம் செய்து அன்பு செய்துகொள்ளும் நடைமுறையாக அது போன காலங்களில் இருந்தது. பின்னர் ஒரு தலைமுறையில் ‘தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்’ என்று பரிணாம வளர்ச்சி அடைந்து, அதுதான் பாய் பெஸ்ட்டி, கேர்ள் பெஸ்ட்டியாக உயர்வாக்கம் பெற்றுள்ளது என்று தோன்றுகிறது. முன்பு இப்படியான உறவுகளைப் பேசவே தயங்கிக் கொண்டிருந்த காலம் போய், இன்று இப்படியான உறவுகள், மற்றமை மீதான நேசத்தையும் பேச நாம் முன்வந்திருக்கிறோம் என்பதே இந்த பாய் பெஸ்ட்டி, கேர்ள் பெஸ்ட்டி உரையாடல்கள் வழியாக நான் புரிந்துகொள்கிறேன்.

காதல் சாதி, மதங்களை ஒழிக்குமா என்ற ஹைதர் காலத்துக்குக் கேள்விக்கு நம்பிக்கையான பதில்கள் என்னிடம் இல்லை என்றே சொல்வேன். ஆனால், காதல் என்ற அற்புத உணர்வு ஏதேனும் ஒரு புள்ளியில் நம் சக மனிதனை நேசிக்கச் சொல்கிறது என்றவகையில் இந்த நவீன சமூகத்துக்கு முக்கியமானது என்றே நான் சொல்வேன். அந்தவகையில் பாரதி சொன்னதுபோல் செவ்விது செவ்விது பெண்மை. செவ்விது செவ்விது செவ்விது காதல். ஹேப்பி வேலடைண்ஸ் டே!