“நான்தான் எல்லாமேனு நீ இருந்தா ஒருநாள் you will hate me நித்யா” எப்போது காதலைப் பற்றி நினைத்தாலும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் வரும் இந்த வசனம் சட்டென நினைவிற்கு வந்துவிடும். காதலின் வெவ்வேறு நிலைகளை, ஒவ்வொரு பருவத்திலும் மாறிக்கொண்டிருக்கும் காதலின் பல்வேறு வடிவங்களை அத்தனை முதிர்ச்சியாக கையாண்ட திரைப்படம் இதுவாகத்தான் இருக்க முடியும் என்பது எனது எண்ணம். ஒரு விடலைப் பருவத்தில் அவர்களுக்குள் காதல் என்னவாக இருக்கிறது, என்ன அனுபவத்தை கொடுக்கிறது, எதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது அதேபோல ஒரு முதிர்ச்சியான பருவத்தை அடையும்போது இந்த அனுபவங்களும், நோக்கங்களும், எதிர்பார்ப்புகளும் எப்படி மாறுகின்றன என்பதை மிக துல்லியமாகக் காட்சிப்படுத்திய படமாக நான் இதைச் சொல்வேன்.
காதலின் முழுமையான பரிமாணத்தை ஓரளவிற்கு இந்தப் படம் வழியாக நாம் புரிந்துகொள்ளலாம். உதாரணத்திற்கு மேற்சொன்ன வசனம் காதலின்மீது போர்த்தப்பட்ட அத்தனை மிகையுணர்ச்சிகளையும், புனித பிம்பங்களையும் கட்டுடைப்பு செய்கிறது. காதல் என்பது ஒருவருக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுப்பதோ அல்லது அதை நிர்ப்பந்திப்பதோ அல்ல, ஆனால் அதைத்தான் காதலின் ஆதாரத்தன்மையாக பிற சினிமாக்கள் கட்டமைக்கின்றன.
காதல் என்பதைப்பற்றி பல்வேறு பார்வைகள் இங்கு இருக்கின்றன, பல்வேறு விளக்கங்களும் இருக்கின்றன. காதல் என்பது வெறும் உடல் கவர்ச்சி என்பது போன்ற சிறுமைபடுத்தலும் இங்கிருக்கின்றன. காதல் என்பது கலங்கமற்ற பரிசுத்தமான அன்பு என்பது போன்ற புனிதப்படுத்தலும் இங்கிருக்கின்றன. உண்மையில் நாம் என்னவாக இருக்கிறோம், காதலைப்பற்றி நமது அனுபவங்கள் என்னவாக இருக்கின்றன என்பதை பொறுத்தே அதனைப்பற்றிய நமது பார்வையும் மாறுபடுகிறது.
இரண்டு முழுமையடைந்த ஆளுமைகளுக்கிடையே தற்செயலாக எந்தவித முன் தயாரிப்புகளும் இன்றி மெல்ல மெல்ல உருவாகும் பிணைப்பு காதலின் தொடக்கமாக இருக்கிறது. இந்தப் பிணைப்பு உடல் சார்ந்தது மட்டுமல்ல, அகப்பிணைப்பும் கூட. இந்தப் பிணைப்பால் ஏற்படக்கூடிய ஒருவகையான சொற்களில் விளக்கமுடியாத நல்லுணர்வு (Wellbeing) நிலையை நாம் காதல் எனக் கொள்ளலாம். காதல் வார்த்தைகளாய் முழுமையாக விவரிக்க இயலாமல் இருப்பதற்குக் காரணமே அது ஒரு உணர்வு என்பதால்தான். எந்த உணர்வையும் வார்த்தைகளில் விவரிப்பது இயலாத ஒன்று. மிகச்சிறந்த சுவையுடைய ஒரு பழத்தை ருசித்துவிட்டு அந்த சுவையைப் பற்றி ஒரு குறிப்பொன்றை எழுத சொன்னால் அதை எழுத முடியுமா என்ன? அதனால் காதல் என்ற நுட்பமான உணர்வை நேரடி அனுபவத்தில் வாயிலாக உணர்ந்துகொள்வதற்கு ஈடான புரிதலை வேறெங்கிருந்தும் உங்களால் பெற முடியாது.
எண்பதுகளின் தொடக்கத்தில் இளைஞர்களுக்குக் காதல் மீதிருந்த பரவசங்களும், கிளர்ச்சிகளும் இன்றை தலைமுறை இளைஞர்களுக்கு இல்லை அதற்குக் காரணம் ஆண், பெண் உறவில் இந்த முப்பதாண்டுகளில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள். ‘இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் காதல் முக்கியத்துவத்தை இழந்திருக்கிறது’ என்று சிலர் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஏனென்றால் எண்பதுகளில் இருந்த மிக இறுக்கமான சமூக, குடும்ப சூழல்கள் ஆண், பெண் உறவின்மீது ஏராளமான கட்டுப்பாடுகளை நிறுவியிருந்தது. இயல்பாக நிகழும் ஆண், பெண் உறவுகள் இந்த இறுக்கமான நிர்ப்பந்தங்களில் மேற்பரப்பிற்கு வராமலேயே உள்ளுக்குள் அழுத்தப்பட்டன. இந்த அதீத கட்டுப்பாடுகளும், நிர்ப்பந்தகளும் இயல்பாகவே இளைஞர்களுக்கு எதிர் பாலினத்தின்மீதான சுவாரசியத்தையும், கவர்ச்சியையும் கூட்டின. அந்த இறுக்கமான அமைப்பில் இருந்து முளைக்கும் ஆண், பெண் உரையாடல்கள் இந்த அமைப்பிற்கெதிரான போராட்டங்களாகவே, சாகசங்களாவே பிற இளைஞர்களால் புரிந்துகொள்ளப்பட்டன. பொதுவாகவே இளைஞர்களுக்கு சாகசங்களின்மீது இருக்கக்கூடிய ஈர்ப்பின் விளைவாக காதல் அத்தனைக் கொண்டாட்டமானதாகவும், கலகத்தன்மையுடனும் அவர்களுக்கு இருந்தது. இதன் பின்ணணியிலேயே அன்றைய காதல் தொடர்பான இளைஞர்களின் நிலையை புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் இன்றைய சமூக, பொருளாதார காரணங்களின் விளைவாக ஆண், பெண் உறவு என்பது தவிர்க்க முடியாததாகவும், இயல்பான ஒன்றாகவும் மாறிவிட்டது. சுருக்கமாக சொன்னால் ‘ஒரு பெண்ணிடம் பேச வேண்டும் என்றாலே அவளைக் காதலிக்க வேண்டும்’ என்ற அவசியம் இன்றைய இளைஞர்களுக்கு இல்லை. அதன் விளைவாக காதலின் மீதிருந்த முந்தைய காலத்துப் புனித பிம்பங்கள் இப்போது இல்லை.
உளவியலைப் பொறுத்தவரை காதல் என்பது அடிப்படை உணர்வு அல்ல (Basic instinct) அது ஒரு மேம்பட்ட உணர்வுநிலை (Matured state of mind). அப்படி என்றால் மனிதனை சமூகப்படுத்தியதில் காதலுக்குப் பங்கிருக்கிறது. காதல் என்பது சமூகப்படுதலின் ஒரு அங்கம். அதே நேரம் அது சமூகப்படுதல் மட்டுமல்ல, உடலியல் கிளர்ச்சிகளும் அதில் அடங்கியிருக்கிறது. இந்த இரண்டுக்கும் இடையேயான முரண்கள்தான் காதலின் நிமித்தம் நாம் சந்திக்கக்கூடிய பிரச்சினைகளாகவும் இருக்கிறது. முன்பே சொன்னதுபோல காதல் என்பது ஒருவரின்மீது நமக்குள் உருவாகும் ஒருவகை நல்லுணர்வு இந்த நல்லுணர்வு என்பது உடல்சார்ந்தது இல்லை என்றாலும்கூட அது உடல் சார்ந்தே உணரப்படுகிறது. உடல்சார்ந்து ஏற்படும் ஈர்ப்புகள் தேவையானதாக இருந்தாலும்கூட அது மட்டுமே போதுமானதல்ல. இந்த உறவுசார்ந்த நமக்கிருக்கும் பொறுப்புணர்வுகளும், இந்த உறவு நீடித்திருப்பதில் நமக்கிருக்கும் அக்கறையும் முக்கியமானது. இதில் இருக்கும் குறைபாடுகளாலேயே அந்த உறவு பலவீனமடைகிறது. காதல்பற்றி நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஒரு விஷயமென்றால் நான் இதையே திரும்பத்திரும்ப சொல்வேன் காதலில் சேர்வதோ அல்லது பிரிவதோ இரண்டிற்குமே பாலியல் கவர்ச்சி பிரதான காரணமல்ல. காதலின் நிமித்தம் நாம் கொண்டிருக்கும் பொறுப்புணர்வும், அக்கறையுமே அதை நிர்ணயிக்கின்றன. நான் ஒருவரை காதலிக்கிறேன் என்பது அவரின்மீது அளவற்ற ப்ரியத்தில் இருக்கிறேன் என்று சொல்வதல்ல, அவருடன் நான் எந்த முரண்களும் இல்லாமல் இருக்கிறேன் என்று சொல்வதல்ல, அவருக்காக அனைத்தையும் விட்டுத்தர நான் தயாராக இருக்கிறேன் என்று சொல்வதல்ல, அவரில்லாமல் நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்று சொல்வதல்ல. மாறாக நான் ஒருவரின் நலன்கள் மீதும், இருப்பின் மீதின், மகிழ்ச்சியின் மீதும் தீவிர விருப்பத்தில் இருக்கிறேன் அதை எப்போதும் அருகிலிருந்து பார்க்க நினைக்கிறேன் என்பதேயாகும் ‘அவளைப் பார்த்தால் எனக்குள் நேரும் உணர்வுகளை வார்த்தைகளால் என்னால் சொல்ல முடியாமல் இருக்கலாம். ஆனால், அதை அவள் நிச்சயம் உணர்ந்துகொள்வாள் என்ற நம்பிக்கையிருக்கிறது ஏனென்றால் அது அவளுக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் தானே’ என நினைப்பதுதான் காதல். அந்தவகையில் காதல் என்பது பரிசுத்தமான அன்பு அல்ல பரிசுத்தமான நம்பிக்கை.