பெயன்மழை துறந்த புலம்புறு கடத்துக்
கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி
துதைமென் தூவித் துணைப்புற விரிக்கும்
அத்தம் அரிய என்னார் நத்துறந்து
பொருள்வயிற் பிரிவா ராயினிவ் வுலகத்துப் 5
பொருளே மன்ற பொருளே
அருளே மன்ற ஆருமில் லதுவே.

 

ஒரு பெரிய பாலைவனம்.

அந்தப் பாலைவனத்தில் மழையே இல்லை.

அந்தப் பாலைவனம் வறண்டிருக்கிறது.

அந்தப் பாலைவனத்தில் ஒரு கள்ளிமரம் இருக்கிறது. அந்தக் கள்ளி மரத்தில் ஏராளம் முட்கள் இருக்கிறது. அது காய்த்திருக்கிறது. அந்தக் காய்கள் முற்றிக் காய்ந்திருக்கின்றன.

இரண்டு புறாக்கள் அந்தக் கள்ளி மரத்தில் இருக்கிறது. அந்தப் புறாக்களுக்கு மெத்மெத்தென்று மென்மையான இறக்கைகள். அவைகள் கணவனும் மனைவியும்.

ஆண்புறா அதன் மனைவிக்கு ஆசையோடு முத்தம் கொடுக்கிறது. அந்த நேரத்தில் அந்தக் கள்ளி மரத்தில் ஒரு காய் வெடிக்கிறது. அது ‘படார்’ என்று சத்தமாக வெடிக்கிறது.

அந்தப் புறாக்கள் வெடிச்சத்தம் கேட்டதும் பயந்து போய் கணவனும் மனைவியும் பிரிந்து திசைக்கு ஒன்றாகப் பறந்து போய்க் கொண்டிருக்கிறது.

-வெண் பூதியார்
குறுந்தொகை 174