ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்
நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை
வரைமுதிர் தேனிற் போகி யோனே
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ 5
வேறுபுல னன்னாட்டுப் பெய்த
ஏறுடை மழையிற் கலிழும்என் னெஞ்சே.

ஒரு ஆறு.

அந்த ஆற்றின் வெள்ளம் கரைபுரண்டு வந்துகொண்டிருக்கிறது. மேற்கே, வேறு நாட்டில் பெய்த பெரிய மழை, வெகு தொலைவில் இருந்து கலங்கி வந்து கொண்டிருக்கிறது.

ஒரு பெண் அந்த ஆற்றாங்கரையில் உட்கார்ந்திருக்கிறாள். அந்த இளம்பெண் ஆற்றில் கலங்கி வருகிற அந்தப் பெரிய வெள்ளத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

இந்த இளம் பெண்ணிடம் ஒரு இளைஞன் முதல்முதலாக ஒருநாள் வந்தான்.

அந்த இளைஞன் அவளிடம் திரும்பத் திரும்ப பலநாள் வந்தான்.

அந்த இளைஞன் அவளிடம் பாசத்தோடு பழகினான். அந்த இளைஞன் அவளிடம் சிரித்துச் சிரித்துப் பேசினான்.

இந்த இளம் பெண் அவன் பேச்சில் மயங்கினாள். அவனிடம் மனதைப் பறிகொடுத்தாள்.

அவன் இப்போது இவளிடம் வருவதே இல்லை.

அவன் எங்கே இருக்கிறான் என்றே தெரியவில்லை.

அவனிடம் மனதைப் பறிகொடுத்த இவள் நெஞ்சம் ஆற்று வெள்ளத்தைப் போல் கலங்கியிருக்கிறது.

வருமுலையாரித்தியார்
குறுந்தொகை 176