வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச்
செவ்வாய் வானத் தையெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ
மறந்தனர் கொல்லோ தாமே களிறுதன்
உயங்குநடை மடப்பிடி வருத்த நோனாது 5
நிலையுயர் யாஅந் தொலையக் குத்தி
வெண்ணார் கொண்டு கைசுவைத் தண்ணாந்
தழுங்க னெஞ்சமொடு முழங்கும்
அத்த நீளிடை அழப்பிரிந் தோரே.
ஒரு பாலைவனம்.
அந்தப் பாலைவனத்தில் வானம் செக்கச்செவேர் என்று சிவந்திருக்கிறது.
நிலவு தோன்ற இன்னும் நேரம் இருக்கிறது.
ஒரு பெரிய ஆண் யானை தன் இளம் மனைவியோடு வேகமாக வந்து கொண்டிருக்கிறது.
அந்தப் பெண் யானைக்கு அகோரமான பசி. அந்தப் பெண் யானை பசியில் கிறுகிறுத்து நடக்க முடியாமல் கால் ஓய்ந்து திணறித்திணறி நடந்து வந்து கொண்டிருக்கிறது. அவைகளுக்கு எதிரில் ஒரு ‘யா’மரம் இருக்கிறது. அந்த ஆண்யானை தன் தந்தங்களால் அந்த ‘யா’ மரத்தின் பட்டைகளைக் குத்திக் கிழிக்கிறது. அந்த ஆண்யானை அந்தப் பட்டைகளை வாயில் வைத்துச் சவைக்கிறது.
அந்த ஆண் யானையால் அந்தப் பட்டைகளைத் திங்க முடியவில்லை.அந்தப்பட்டையில் ஈரம் இல்லை. ருசி இல்லை. அந்தப் பட்டைகள் காய்ந்து, இற்று சக்கையாக இருக்கிறது.
அந்த ஆண்யானை தன் கையில் இருந்த அந்த மரப்பட்டையை கோலத்தில் வீசி எறிகிறது.
அந்தப் பெரிய ஆண் யானை தன் மனைவியின் பசிக்கு நல்ல இரை கொடுத்து மனைவியைப் பசியாற்ற முடியாத துயரத்தில் அது வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு தன் இயலாமையை நினைத்து ‘ஓ’ என்று அழுகிறது.
–கடம்பனூர்ச் சாண்டிலியானார்
குறுந்தொகை 307