கண்டிசிற் பாண பண்புடைத் தம்ம
மாலை விரிந்த பசுவெண் ணிலவிற்
குறுங்கால் கட்டில் நறும்பூஞ் சேக்கைப்
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசையிற்
புதல்வற் றழீஇயினன் விறலவன் 5
புதல்வன் தாயவன் புறங்கவைஇ யினளே.
ஒரு இரவு நேரம்.

நிலவு அழகாக ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

அது ஒரு பெரிய நகரம்.

அந்தப் பெரிய நகரத்தில் ஒரு பெரிய அரண்மனை.

அரண்மனையில் ஒரு பெரிய உள்முற்றம்.

அங்கே ஒரு கட்டில் இருக்கிறது. அந்தக் கட்டிலுக்குக் குட்டக்குட்டக் கால்கள். அந்தக் கட்டில் கொள்ளாமல் பூக்கள் ஏராளமான விரித்து வைக்கப் பட்டிருக்கிறது. அழகான அந்தப் பூக்கள் மணம் வீசிக்கொண்டிருக்கிறது.

அந்தக் கட்டிலில் ஒரு குழந்தை படுத்திருக்கிறது.

குழந்தையின் அப்பா வெளியே இருந்து அப்பொழுதுதான் வீட்டுக்கு வருகிறான். அவன் வீட்டுக்கு வந்ததும் அந்தக் கட்டிலில் போய் படுத்துக் கொள்கிறான். அவன் பெருமூச்சு விடுகிறான். அவன் தன் குழந்தையைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு படுத்திருக்கிறான்.

அவன் மனைவியும் அந்தக் கட்டிலில் போய்ப்படுக்கிறாள். அவள் தன் கணவனின் முதுகில் தன் நெஞ்சைச் சேர்த்துக்கொண்டு படுத்திருக்கிறாள்.

என்ன ஒரு பண்பு.

என்ன ஒரு அழகு.

பேயனார்
குறுந்தொகை 359