தினமும் நள்ளிரவு மூன்று மணிக்கு சற்று முன்னே பின்னே எனக்குச் சில அமனுஷ்ய அனுபவங்கள் ஏற்பட்டன. பல சமயங்களில் நாயின் ஊளையாகவும், இனங்காண முடியாத வேறு சத்தங்களாகவும் அவை இருக்கும். சில சமயங்களில் அமானுஷ்யக் காட்சிகளும் என் அனுபவங்களில் உண்டு. ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இது தொடங்கியது என்று நம்புகிறேன்.

நாள் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு அயர்ச்சியுடன் வீட்டிற்குத் திரும்பினாலும், மீதமிருக்கும் மணித்துளிகளில் கசிந்த தனிமையின் நீளம் தாங்காமல் வீட்டிலிருந்தபடி வேறு வேலைகள் செய்யத் தொடங்கியிருந்தேன். வருமானத்திற்கு வருமானம். இணையதளங்களுக்கு வடிவமைப்பது, இணையப் பத்திரிகைகளின் மசாலா செய்திகளுக்குக் குறிப்பிலா ஓவியங்களை அனுப்புவது என்று அவ்வப்போது சில சில்லறை வேலைகள். சில மாதங்களில் இவ்வேலைகள் அலுக்கவே என் படைப்பாக்கத்தை நானே சோதித்துக்கொள்ள முடிவு செய்து புத்தக அட்டை வடிவமைக்கும் ஆர்வத்திற்கு செவி சாய்த்தேன். சோதனை முயற்சியாக மலிவான பதிப்பகங்களுக்குச் செய்யத் தொடங்கி ஒரு சில புத்தக அட்டை வடிவமைத்து முடிப்பதற்குள்ளாகவே பெரிய ஆங்கிலப் பதிப்பகம் ஒன்றில் நல்லதொரு வாய்ப்பு அமைந்தது.

அதற்குப் பிறகுதான் விடிய விடிய வேலை செய்ய ஆரம்பித்திருந்தேன். உடல் அயர்ச்சியால் என் உள்ளத்தின் ஆர்வத்தை வெல்ல முடியவில்லை. தனிமையும் நெருங்கவில்லை. என் வேலை மீதான தீவிரமும் ஈர்ப்பும் அதிகரித்தன. ஒருநாள் நள்ளிரவு இரண்டரை மணியளவில் அட்டைப்படம் ஒன்றை வடிவமைக்கத் தொடங்கினேன். ஏனோ நான் நினைத்த வடிவம் வரவில்லை. மீண்டும் மீண்டும் வரைந்ததை அழித்துக்கொண்டிருந்தேன். சற்று எரிச்சலாக இருந்தது. ஒரு கோப்பை காபி அருந்தினால் புத்துணர்ச்சியாக இருக்கும் என்று தோன்ற கடுங்காபி ஒன்றைப் போட்டுக்கொண்டு மீண்டும் மடிக்கணினி முன்பு அமர்ந்தேன். அப்பொழுதுதான் கணினியின் திரை இருளில் இருப்பதைக் கவனித்தேன். என்னவாயிற்று? தெரியவில்லை. மீண்டும் மீண்டும் ஏதேதோ பொத்தானை அழுத்தினாலும் கணினி உயிர்ப்பெறவில்லை. காபி குடித்ததால் உறக்கமும் கலைந்தது. எதேச்சையாக கடிகாரத்தைப் பார்த்தால் மூன்று அடிக்க பத்து நிமிடங்கள் இருந்தன. போனில் ‘கேண்டி கிரஷ்’ இறக்கம் செய்து விளையாடலாமா என்று ஒரு சபலம். ஆனால் விடிய விடிய நம்மை விளையாட வைத்து அடிமையாக்கி மறுநாள் வேலைக்கு உலை வைத்துவிடும் என்ற முன்னனுபவம் எச்சரித்தது. சரி படுத்துத் தொலைந்தால் தன்னால் உறக்கம் வரும் என்று தோன்றியது. காலி காபி கோப்பையை மீண்டும்  கிச்சனுக்குள் வைக்கச் சென்றேன். அன்று என்ன நடந்தது என்று இன்று வரை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. கோப்பையை வைத்துவிட்டு படுக்கையறைக்குள் காலடி எடுத்து வைத்த நொடி காலிக்கோப்பை கிச்சனுக்குள் கீழே விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்டது. எனக்குப் புரியவில்லை. விளக்குப் போடாமல் இருளிலேயே சென்று வைத்ததால் ஒருவேளை சலவைக்கல்லில் சரியாக வைக்கவில்லையென்றாலும் உடனே அல்லவா விழுந்திருக்க வேண்டும்?  காபி கோப்பை உடனே விழவில்லையே, சில நொடிகளுக்கு பிறகல்லவா விழுந்து உடைந்தது? அதிர்ச்சியுடன் இணைந்துகொண்ட பயம் என் உடலை நிஜமாகவே நடுங்கச் செய்தது. மீண்டும் கிச்சனுக்குள் செல்ல தைரியம் வரவில்லை. உறங்க எத்தனித்த ஒவ்வொரு நொடியும் இதற்கான காரணத்தை என் பகுத்தறிவால் விளக்கிக்கொள்ள முனைந்தேன். மறுநாள் விடிந்ததுமே எழுந்து வேகமாகச் சென்று கிச்சனின் ஜன்னல் திறந்திருக்கிறதா என்று பார்த்தேன். அது இழுத்து மூடி, தாளிடப்பட்டிருந்தது. அன்றைக்கு முழுவதும் எனக்கு வேலையில் கவனம் ஓடவில்லை.

இது நடந்து ஒன்றிரண்டு தினங்களுக்கு பிறகு மீண்டும் அதே போல் நள்ளிரவு வேலை செய்து கொண்டிருந்தேன். காபி குடிக்க வேண்டும் என்ற சிந்தனை பின்னால் ஓடிக்கொண்டே இருந்தது. ஆனாலும் எழுந்து போக சோம்பல். சோம்பல் என்று கூறுவது பொய்யோ. ஆகட்டும், முந்தைய தினம் உடைந்த காபி கோப்பை என்னை உறுத்திக் கொண்டே இருந்ததுதான் காரணம் என்று ஒப்புக்கொள்கிறேன். உடைந்த காபி கோப்பை நினைவுக்கு வரவும் கணினி அன்று காரணமில்லாமல் அணைந்ததும் நினைவிற்கு வந்தது. லேசாக பதட்டம் அடைந்தேன் செய்த வேலைகளை உடனே சேமித்துவிட்டு சில நொடிகள் வெறுமையாகக் கணினித் திரையை வெறித்துப் பார்த்தேன். பார்வை கணினியின் கடிகாரத்திற்குச் செல்ல நேரம் நள்ளிரவு 3.03 என்று காட்டியது. பெரிதாக ஒரு கொட்டாவி விட்டு மிச்ச வேலையை நாளை தொடரலாம் என்று எண்ணியவாறே கணினியை மூடிவிட்டு நாற்காலியிலிருந்து எழுந்து கொண்டேன். அப்பொழுதுதான் அந்த விநோதச் சத்தம் காதில் விழுந்தது. அது நாயின் ஊளை என்று விளங்கவே சில கணங்கள் பிடித்தன. நீண்ட  ஊளை அடங்கிய பிறகு சற்று மயான அமைதி, அந்த அமைதியக் குலைப்பதாக மீண்டுமொரு  ஊளை. மனதின் பயவறைகள் மீண்டும் சற்று திறந்து கொண்டாலும் படுக்கையில் விழுந்து உறங்க முயற்சித்தேன். அலுப்பு. வெகு நேரத்திற்குக் கேட்டுக்கொண்டிருந்த ஊளை எப்பொழுது நின்றது என்று தெரிவதற்கு முன்பே உறங்கிவிட்டிருந்தேன்.

இது அன்றிரவிற்கான அனுபவமாக மட்டுமில்லை. மறுநாள் அதற்கும் மறுநாள் அடுத்த நாள் என்று தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் மூன்று மணிக்கு விழித்திருப்பது எனக்கு வாடிக்கையானது. விழித்திருக்கும் பொழுது நாயின் ஊளையையும் எதிர்பார்க்கத் தொடங்கினேன்.  அதுவும் என்னை ஏமாற்றவில்லை. சில சமயம் கூட்டமாக ஊளையிட்டும் என் எதிர்பார்ப்பை நிறைவேற்றும்.

ஒவ்வொரு முறையும் அவைகளின் ஊளைக் குரல் ஜன்னலுக்கு அருகேயே கேட்கும். மாடி வீடென்றாலுமே அக்குரல்கள் தெருவிலிருந்து வராமல் மிக அருகிலேயே கேட்டது. பக்கத்து வீட்டு படுக்கையறையின் ஜன்னலிலிருந்து கசிந்துவருவதுபோல். கட்டிடத்தின் வெளிபுறம் அமைந்திருக்கும் சன்ஷேடிலிருந்து வருவதுபோல். முதலில் வேலையழுத்தத்தால் தூக்கம் பிடிக்காமல் விடிகாலை வரை கண் விழிக்க வேண்டியிருந்தது. ஆனால் மூன்று மணி நாய்களின் ஊளையைக் கேட்கத் தொடங்கிப் பழகிய பிறகு, பத்து மணிக்கே உறங்கியிருந்தாலும் மூன்று மணியளவில் முழிப்புத் தட்டிவிடும். நாய் சத்தம் கேட்டு நான் அனிச்சையாகக் கண் விழித்தேனா அல்லது கண் விழித்தபிறகு நாய் சத்தம் கேட்கத் தொடங்கியதா என்று பல இரவுகளில் குழம்பியிருக்கிறேன்.

ஆரம்ப காலங்களில் இது என்னைத் தொந்தரவு செய்ததுதான். ஆனால் போகப் போக, இன்று எத்தனை நாய்கள், அவை குரைக்குமா அல்லது ஊளையிடுமா, இன்று எவ்வளவு நேரம் ஊளையிடும், ஊளையிடும்பொழுது யாராவது மனிதன் அவைகளைக் கடக்க நேர்ந்தால் உயிர் பிழைப்பானா, யார் அவைகளுக்கு மூன்று மணியாவதை நாள் தவறாமல் நினைவூட்டுவது, இத்தனைத் தொடர்ச்சியாக ஊளையிடுவதற்கான சக்தியை அவை எங்கிருந்து பெறுகின்றன, ஏன் பகலில் குரைக்கும் நாய்கள் இரவில் ஊளையிடுகின்றன, குரைக்கும் நாய்கள் கடிக்காது என்பது போன்ற முட்டாள்தனமான வழக்கு ஊளையிடும் நாய்களுக்கு என்னவாறு இருக்கிறது போன்ற அர்த்தபுஷ்டியான கேள்விகளில் சிந்தை மூழ்கி, நாய்களின் தொடர் ஊளை ஏற்படுத்திய பயமும் குழப்பமும் வடியத் தொடங்கின.

ஒருநாள் இரவு நாய்கள் ஊளையிடவில்லை. மூன்றரை மணி வரைக்கும் விழித்துப் பார்த்தேன். ஹூம்ஹூம். ஜன்னலைத் திறந்து சாலையில் நாய்கள் நடமாட்டம் தென்படுகிறதா என்று கவனித்தேன். தெருவில் ஒரு நாயும் இல்லை. திறந்த ஜன்னலின் வழி சுத்தமான குளிர் காற்று முகத்தில் அறையவே, முழு உடலும் அந்த இனிமையான காற்றைத் தழுவ ஏங்கியது. சிகிரெட் பாக்கெட்டையும் லைட்டரையும் எடுத்துக்கொண்டு வெராந்தாவிற்குச் சென்றேன். கைப்பிடிச் சுவரில் சாய்ந்துகொண்டு இரண்டு இழு இழுத்து வீசிய காற்றில் மாசைத் துப்பினேன். பின்பு திரும்பி நின்றுகொண்டு கண்ணுக்குத் தெரிந்தவரை சாலை விளக்கின் வெளிச்சத்தில் நாய்களைத் தேடினேன். அப்பொழுதுதான் அது கண்களில் விழுந்தது. எதிர் வீட்டின் மாடியருகே சாய்ந்திருந்த மரத்தின் கிளையில் கயிறு ஒன்று ஆடியபடியிருக்க அதற்குக் கீழே புடவைபோல் எதுவோ அசைந்தது. திடுக்கிட்டுப் போனேன். அது வெறும் துணியல்ல. பார்ப்பதற்கு மூன்றடி உயரமுள்ள யாரோ மரத்தில் தூக்கி மாட்டித் தொங்குவதுபோல் இருந்தது. கண்களை கசக்கி மீண்டும் மீண்டும் பார்த்தேன். காற்றில் லேசாக அசைந்தபடி இருந்த கயிறும், துணி போர்த்திய குள்ள உடலும் நடு முதுகில் சில்லிப்பை ஏற்படுத்தின. என்ன இழவு இது. நான் காண்பது கனவா அல்லது நிஜமா. நிஜம்தான். பேய் பிசாசுகள் குறித்த பயம், இளம் பிராயத்தில் நள்ளிரவில் தனியாகச் சுற்றித் திரிந்த காடுகளிலும், வாய்க்கால் வரப்புகளிலும், விளக்குகளற்ற தெருக்களிலும், வைக்கோல்கள் போர் போராக அடுக்கப்பட்டிருந்த கொல்லைப்புறத்திலும், ஆழ்கிணற்றிலும், நிலவின் அளவிற்கு ஏற்ப சுவர்களில் படிந்து அசையும் உருவங்களிலும், அப்பத்தாவின் கதைகளிலும்கூட உணர்ந்ததில்லை. இந்த கான்க்ரீட் காடுகளுக்குக் குடிபெயர்ந்த ஐந்தாண்டுகளில் இதற்கு முன்பு தங்கியிருந்த எந்த வீடுகளிலும் இதைப் போன்ற அனுபவமில்லை. ஒருவேளை இந்த வீடுதான் காரணமோ? எதிர்த் தெருவில் இருக்கும் வீடுவரைகூட அதன் தாக்கம் இருக்குமா என்ன? ஒருவேளை நான் வேறு வீட்டிற்கு மாற்றிச் சென்றால், இவை நிற்குமா தொடருமா? ச்சீ… பயம் ஏன் என் புத்தியை மழுங்கடிக்கிறது? நாய்கள் நள்ளிரவில் ஊளையிடுவதற்கு அறிவியல் விளக்கம் இருக்கிறது என்று தெரிந்தும் ஏன் தொந்தரவடைகிறேன்? இருளில் மரக்கிளையில் கயிற்றின்கீழ் தொங்குவதுபோன்று தெரியும் உருவம் என்னவென்பது சூரியன் உதித்தவுடன் விளங்கப்போகிறது. போயும் போயும் இதற்கே வீட்டை மாற்றுமளவிற்கு ஏன் பலவீனமாகிப்போனேன்? ஒருவேளை தனிமை ஏற்படுத்தும் அலைக்கழிப்புகளா இச்சிந்தனைகள்? இதுபோல்தான் தனியாக வாழும் மற்றவர்களுக்கும் இருக்குமா? அல்லது நான் தான் ஹாலுசினேட் செய்கிறேனா? ஏன் ஹாலூசினேட் செய்கிறேன், அல்லது செய்வதாக பயப்படுகிறேன்? அலுவலகத்தில் என்னைப் பிடிக்காத யாரோ என்னையறியாமல் நான் குடிக்கும் டீயில் ஏதாவது மருந்து கலக்கிறார்களா? அன்று டீ தரும் பையன் சிகிரெட் குடித்துவிட்டு அதே கையோடு டீ கிளாசை எடுத்து ஊற்றியபொழுது அவனை கடிந்துகொண்டேன். அவனாக இருக்குமா? ச்ச… நான் ஏன் இவ்வாறு நினைக்கிறேன். பத்தொன்பது வயது இளைஞனுக்கு எனக்கு டீயில் மருந்து கலப்பதுதான் வேலையா? மிஞ்சிமிஞ்சிப்போனால் என் மீதுள்ள கடுப்பில் சிகிரெட் சாம்பலைக் கலந்திருக்கலாம். ஒருவேளை அதனால்தான் இதெல்லாம் நான் கற்பனை செய்கிறேனா? கடவுளே! ஒரு நாளுக்கு பத்து சிகிரெட் பிடித்துத் தள்ளும் நான் ஒரு சிட்டிகை சாம்பலை நினைத்து பயப்படுகிறேன். என்னது! அவன் டீயில் சாம்பலைக் கலந்தேவிட்டான் என்று நம்புகிறேனா? அனர்த்த சிந்தனைகள் தலைவலியைத் தர, தூக்கில் ‘தொங்கும் உடலை’ மீண்டும் ஒரு கணம் பயம் இல்லாததுபோல் பார்த்துவிட்டு வீட்டிற்குள் சென்றேன்.

மறுநாள் காலை காபி கோப்பை மற்றும் சிகரெட்டுடன் வெராந்தாவிற்கு வந்தபொழுது முதல் நாள் இரவின் சம்பவங்கள் நினைவிற்குவர எதிர்வீட்டு மரத்தைப் பதட்டமாகப் பார்த்தேன். மரக்கிளையிலிருந்து கயிறும் தொங்கவில்லை, துணியும் இல்லை. என்ன இது அக்கிரமம்? நான் இதே இரண்டு கண்களால்தானே பார்த்தேன். அதற்குள் எப்படி மறையும்? சத்தியமாகக் கனவில்லை. ஒருவேளை கயிற்றுக்குக் கீழே இருந்தது வெறும் துணியாகக்கூட இருந்திருக்கலாம். அதை உலர்த்தியவர் நான் விழிப்பதற்கு முன் அகற்றியிருக்கலாம். சாத்தியம்தான். ஆனால் கயிறு? அதை மரத்தில் ஏறித்தான் அவிழ்த்திருக்க முடியும்? காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மரத்தில் ஏறி அதைக் கழட்டுமளவிற்கு என்ன அவசியம் இருக்கப்போகிறது? ஒருவேளை அவசியம் இருந்திருக்குமோ? இதே இடத்தில் நின்றுதானே நான் தினமும் காலை காபி அருந்துகிறேன். இதற்கு முன் அக்கயிற்றை நான் கவனித்திருக்கிறேனா? நினைவில்லை. ஒருவேளை இருந்திருக்கலாம். இல்லை. இருந்ததில்லை.

பல நாட்களுக்குப் பிறகுதான் முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனித்தேன். ஒருமுறை வரவேற்பரையில் இருந்த ஜன்னலில் யாரோ தட்டிக்கொண்டேயிருந்ததுபோல் படுக்கையறை வரை கேட்டது. மணி மூன்று பத்து. நான் முதலில் கனத்த பல்லி ஊர்ந்து சென்றிருக்கலாம் அல்லது பூனை பிராண்டியிருக்கலாம் என்று நினைத்தேன். உள்ளிருந்து டார்ச் அடித்துப் பார்த்தபொழுது கண்ணாடி சட்டங்களில் பல்லி ஊர்வது போன்று எதுவும் தெரியவில்லை. பின்பு வேகமாகச் சென்று சன்னலைத் திறந்தேன். அப்பொழுதுதான் ஜன்னலுக்கு வெளிப்பக்கம் பூனை நடந்துசெல்லும் அளவு சுவரின் அகலம் இல்லை என்பதைக் கவனித்தேன். நெஞ்சில் படபடப்பு அதிகரிக்க, மீண்டும் ஜன்னலை மூடிவிட்டு வெகு நேரம் எதிர்ப்பக்கச் சுவரில் சாய்ந்து அமர்ந்து, டார்சைக் கையில் பிடித்துக்கொண்டு மீண்டும் அந்த சத்தத்திற்காகக் காத்திருந்தேன். அரை மணிக்கும் மேல் ஆகியும் எதுவும் சத்தம் கேட்காததால் எழுந்து படுகையறைக்குச் சென்றேன். பத்து அடி நடந்திருக்க மாட்டேன் எங்கிருந்தோ ஒரு பல்லி தொண்டைக் கிழியும் அளவிற்குச் சத்தம் எழுப்பியது. அச்சத்தம் வினோதமாக இருந்தது. இதுவரை எந்தவொரு ராட்சஸ பல்லியும் அப்படியொரு சத்தத்தை எழுப்பி நான் கேட்டதில்லை. ஒருவேளை அது பல்லிதானா? இன்று ஏன் நாய் நாய் ஊளையிடவில்லை? அப்பொழுதுதான் உறைத்தது. நாய் ஊளையிடாத இரவுகள் வேறு குழப்பமான சத்தங்கள் கேட்டன. மரத்தில் தொங்கிய குள்ள சடலம், காபி கோப்பை உடைந்தது இதுபோன்று அசாதாரணமாக நடந்த இரவுகளிலும் நாயின் ஊளையும் இல்லை, வேறு சத்தங்களும் இல்லை.

இது மீண்டும் உறுதியாகியது. இதை உறுதியாக உணர்ந்த அன்றுதான் எனக்குள் தனிமை குறித்த பயம் ஆழமாக வேறூன்றத் தொடங்கியது.

எப்பொழுதும் விலக்கியே இருக்கும் திரைச்சீலைகளால் தெரு விளக்கிலிருந்து வரும் வெளிச்சம் அல்லது அருகலிருக்கும் வீடுகளிலிருந்து கசியும் வெளிச்சம், எப்பொழுதாவது சத்தம் எழுப்பாமல் செல்லும் வாகனங்களின் வெளிச்சம் தப்பித்து என் ஜன்னல் வழி புகுந்து சுவற்றில் நிழல் வடிவங்களாகப் படியும். நான் படுத்தபடி சிந்தனையிலிருந்தால்  ஜன்னலிலிருந்து வெளிப்படும் ஒளி சுவரில் பதிக்கும் உருவங்களையே பார்த்தபடி இருப்பேன். சில சமயம் அவைகளிலிருந்து எனது டிஜிடல் ஓவியங்களுக்குப் பலமுறை தூண்டுதல் பெற்றிருக்கிறேன். அன்று உறங்கிக்கொண்டிருந்த நான் ஏதோ உள்ளுணர்வில் கண் விழிக்க சுவற்றிலிருந்த நிழல் வேகமாக என்னை நோக்கி ஆக்கிரமிப்பதுபோல் வந்தது. வெடித்துவிடுவதுபோல் வேகமாகத் துடித்த இதயத்துடன் எழுந்து அமர்ந்தேன். சில நொடிகள் எச்சரிக்கையுடன் அசையாமல் கவனிக்க, அனைத்தும் சாதாரணமாகவே இருந்தன. சுவரின் எந்த நிழலும் பெரிதாகி தன் கைகளால் என்னை அபகரிக்க முனையவில்லை. அப்படியானால் நான் பார்த்தது? சிகிரெட் பிடிக்க நா பரபரத்தது. அறையை விட்டு வெளியேறப் பிடிக்கவில்லை. என்ன செய்வது? மெதுவாக, மிக மெதுவாக படுக்கையிலிருந்து எழுந்துகொண்டு ஜன்னலருகே சென்றேன். வழக்கத்திற்கு மீறி எதுவும் இல்லை. பார்வை மெதுவாகத் தாழ்ந்து சாலையில் விழ, மீண்டும் என் முதுகுத் தண்டு சில்லித்தது. இத்தனை நாள் ஊளையிட்டுகொண்டிருந்த அந்த நாய் என் ஜன்னலைப் பார்த்தபடி, நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு நின்றிருந்தது. அதன் நாவின் வடிந்த எச்சில் விளக்கு வெளிச்சத்தில் பளபளத்ததை நான் கவனித்தேன். ஆனால் அது ஊளையிடவில்லை. நான் பார்ப்பதைப் பார்த்தது. ஆடாமல் அசையாமல். பின்பு திரும்பி ஓடி இருளில் மறைந்தேவிட்டது. ஒரு மனநல மருத்துவரைப் பார்ப்பது என்று முடிவுசெய்தேன்..

கூகுளில் தேடி அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் அருகே இருந்த, நற்மதிப்பீடு பெற்றிருந்த ஒருவரைக் கண்டுபிடித்து வழங்கப்பட்டிருந்த நேரத்தில் சரியாகச் சென்று பார்த்தேன். சந்தித்த சில நிமிடங்களிலேயே நான் அதிகம் சிகிரெட் பிடிப்பவனா என்று வினவினார். நான் ஆமாம் என்று கூறிவிட்டு அந்த நொடி மீண்டும் ஒரு சிகிரெட் பிடித்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துகொண்டிருக்க, அவர் பேசியவை எதுவும் காதில் விழவில்லை. அறையைவிட்டு வெளியே வந்தவுடன் கேட்ட பணத்தைக் காரியதரிசியிடம் கொடுத்துவிட்டு அத்தோடு அவருக்கு ஒரு முழுக்கு போட்டேன்.

அதிர்ஷ்டவசமாக தொடர்ந்த சில வாரங்களுக்கு வெறும் நாய் ஊளையிடும் சம்பவம் மட்டுமே நிகழ்ந்தது. ஆமாம், நாயின் ஊளையைக் கேட்பது அதிர்ஷ்டமாகிப்போனது பார்த்தீர்களா? ஏனென்றால் ராட்சஸ பல்லியையும், குள்ள சடலத்தையும், சுவற்றிலிருந்து கிளம்பும் கருப்பு பூதத்தையும் பார்க்க வேண்டாமல்லவா?

பெரிதாக எதுவும் நிகழாமல் சென்றுகொண்டிருந்த வாழ்வில் அவள் நிகழ்ந்தாள். எப்படியோ ஏதோ ஒரு புள்ளியில் விதி ஒரு புதிய வேலை நிமித்தமாக எங்களை உரையாட வைத்தது. அதன் தொடர்ச்சியாக ஒருமுறை சந்தித்துக்கொண்டோம். சந்திப்பு என்னவோ தொழில் நிமித்தமாக கண்ணியமாகத்தான் சென்றது. ஆனால் அதற்குப் பிறகு நடந்த உரையாடல்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஈர்க்கப்பட்டிருப்பதை உணர்த்தின. அடுத்து சில சந்திப்புகள். பலமணி நேர அலைபேசி உரையாடல்கள். நான் பொதுவாகவே எதற்கும் பெரிதாக அலட்டிக்கொள்ளாதவன். வாழ்க்கை மீது பெரிய புகார்களற்றவன். ஒரு நாள் அனைத்தையும் புரட்டிப்போடுவதுபோல் முடிவெடுக்க எனக்குப் பிடிக்காது. படிப்படியாக ஒவ்வொன்றும் நடக்க வேண்டும்.

அவளும் படிப்படியாகத்தான் என் வாழ்வில் நுழைந்தாள். அவளது வருகை முழுமையடைந்ததுபோல் தோன்றிய ஒரு தினத்தில் அவள் என்னுடனேயே வந்து தங்கத் தொடங்கினாள். அது இருவரும் இணைந்திருக்கும் முதல் தனிமை என்பதால் முதல் நாள் இரவு அளவுக்கதிகமாகவே நெருக்கமாக இருந்தோம். அந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் ஐந்து முறை அவளுடன் உடலுறவுகொண்டேன். ஒவ்வொரு முறையும் புதிதாகப் பிறந்தேன். இரவு ஏதோ உணவை வெளியிலிருந்து வரவழைத்து உண்டோம். சேர்ந்து திரைப்படம் பார்க்க அழைத்தாள். என்னால் வாழ்வில் ஒருமுறைகூட சேர்ந்தாற்போல் இரண்டு மணி நேரங்கள் அமர்ந்து திரைப்படம் பார்க்க முடிந்ததில்லை. அதுவும் அவள் அன்று என்ன திரைப்படம் தேர்ந்தெடுத்தாளோ, மிக நீண்டதொரு பயணமாக அது சென்றுகொண்டேயிருந்தது. எப்பொழுது உறங்கினேன் என்று தெரியவில்லை. திடீரென்று விழித்துப்பார்த்தால் அவளும் உறங்கிவிட்டிருக்க, திரைப்படம் அதுவாகவே மீண்டும் ஓடிக்கொண்டிருந்தது. கடிகாரத்தில் மணியைப் பார்த்தேன். இரண்டு முப்பது. நாய் இன்னும் சிறிது நேரத்தில் ஊளையிடத் தொடங்கும். எனக்குப் படுகையறைக்குச் சென்று ஏசி போட்டு ஐந்து மணி நேரமாவது தூங்க வேண்டும் போல் இருந்தது. திரைப்படங்கள் அதிகம் பார்த்துப் பழக்கமில்லாத கண்கள் களைப்படையத் தொடங்கின. ஆனால், அவளை எப்படி எழுப்புவது. அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள். முதல் நாளே அவளை ஹாலில் விட்டுவிட்டு, நான் படுக்கியயறைக்குச் சென்று படுத்தால் அவள் அதைத் தவறாகப் புரிந்துகொள்ளலாம். சரி அவளாக சிறிது நேரத்தில் விழிக்கிறாளா என்று பார்க்கலாம் என்று நினைத்து பால்கனிக்குச் சென்று சிகிரெட்டுடன் நின்றுகொண்டேன். சமீப காலங்களாக வெறு நாயின் ஊளைதான் என்பதால் பயம் விலகியிருந்தது. இரண்டு சிகிரெட் பிடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்தால் அவள் அதே நிலையில் சற்றுக்கூட அசங்காமல் உறங்கிக்கொண்டிருந்தாள். என்ன செய்யலாம்? மணி இரண்டு ஐம்பது. கட்டிலில் சென்று படுத்துவிட்டு அவளை ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் வந்து அழைத்துச் செல்லலாமா? இல்லை, உறங்கத் தொடங்கினால் மீண்டும் விழிப்பது கடினம். காலையில் அவள் எனக்கு முன்பு கண் விழித்தால் நன்றாக இருக்காது.

அவளிடம் குனிந்து அவளது உடலுக்குக் கீழே இரு கைகளையும் மென்மையாக நுழைத்து அவளைத் தூக்க முயன்றேன். சற்று பூசினாற்போல் தேகம். அவளது எடை மிகவும் கனத்தது. ஆனாலும் எப்படியோ தூக்கிவிட்டேன். அவள் இன்னும் உறக்கத்திலிருந்தாள். மூன்று கிளாஸ் வைனாக இருக்கலாம். அவளை மெத்தையில் கிடத்தி நன்றாகப் போர்த்திவிட்டு அருகில் படுத்துக்கொண்டேன். அவளது அருகாமையும் ஸ்பரிசமும் இதுவரை நான் அனுபவித்திராத ஆழ்ந்த கிறக்கத்தை எனக்கு அளித்தன.

அது அப்பொழுதுதான் நிகழ்ந்தது. அவள் என் வீட்டிற்கு வந்த முதல் தினம். தாங்க முடியாத துர் நாற்றம் வீசியது. நள்ளிரவு சரியாக மூன்று மணி. உறக்கம் பிடிக்கவில்லை. கிச்சனில் சிங்க் கீழே எதுவும் கசிகிறதா என்று சோதித்தேன். பாத்ரூம் கதவைத் திறந்து பார்த்தேண். நிச்சயம் அங்கிருந்து நாற்றம் வரவில்லை. படுக்கையில் மீண்டும் வந்து விழுந்தால் துர்நாற்றம். ஏன்? ஜன்னலுக்கு அருகே சென்று வெளியே பார்த்தேன். தெரு வெறிச்சோடி இருந்தது. அது சற்று உயர்தர வர்க்கம் வாழும் குடியிருப்பு. தெருவில் சாக்கடை நீர் தேங்கவோ, மற்ற வீடுகளிலிருந்து துர் நாற்றம் கசிந்து வருமளவிற்கோ என்றும் இருந்ததில்லை. பின்பு எங்கிருந்து வருகிறது. படுக்கைக்குச் சென்றால் அங்கிருந்துதான் தாங்க முடியாத அளவிற்கு வந்துகொண்டிருந்தது. ஜன்னலுக்கு அருகே நின்றபொழுதுகூட இவ்வளவு வீச்சம் இல்லை. தயக்கத்துடனும், குற்றவுணர்வுடனும் அவளை நெருங்கி மோர்ந்து பார்த்தேன். அவளிடமிருந்துதான் வந்தது. பிட்ஸா, கார்லிக் ப்ரெட் மற்றும் வைனின் கலவை ஏற்படுத்திய நாற்றமா? இப்பொழுது நான் ஹாலுக்குச் சென்று உறங்கவும் முடியாது. என்ன செய்யலாம்? கண்ணாடிக்கு முன்பிருந்த என்னுடைய செண்ட் பாட்டிலிலிருந்து சில துளிகளை தலையணை மீதும் அவளின் முதுகு பக்கமும் அடித்துவிட்டேன். சிறிது நேரத்தில் மீண்டும் நாற்றம். அயோ! ஆனாலும் பொறுத்துக்கொண்டு கண்களை மூடி உறங்க முயற்சித்தேன். அன்று நாய் ஊளையிடவில்லை.

காலை விடிந்ததும் பரஸ்பரம் அன்பை சின்னச் சின்ன செய்கைகளில் பகிர்ந்துகொண்டு இருவரும் அலுவலகத்திற்குத் தயாரானோம். குளித்துவிட்டு வெளியே வந்தவள் ஆடையணிந்துகொண்டே என்னிடம் தன் மீது வீசிய வாசனைக் குறித்து வினவினாள். நான் நள்ளிரவில் ஜன்னலிலிருந்து துர் நாற்றம் வீசியதால் படுக்கை மீதும், ஏசியிலும் கொலன் எடுத்து அடித்ததாகக் கூறினேன். எதுவும் தெரியாமல் அடித்துப் போட்டதுபோல் உறங்கியதற்காக செல்லமாக மன்னிப்புக் கேட்டாள். முத்தங்கள் பரிமாறிக்கொண்டோம்.

அன்றிரவு அவள் மீண்டும் டிவியில் படம்போட எனக்கு திக்கென்று இருந்தது. மீண்டும் மூண்று மணி நேரங்களா? டிசைனிங் வேலை வேறு புதுக் காதலால பல தினங்களுக்குத் தடைப்பட்டிருந்தது. என் மனக்கண்ணில் சில ஓவியங்கள் நிழலாட அவை மறைவதற்குமுன் எப்படியாவது அன்றிரவு கணினிக்குள் ஏற்றிவிட வேண்டும். நான் அவளிடம் அன்று படம் வேண்டாம் என்றும் அதற்கு பதில் ஏதாவது உரையாடலாமென்றும் அழைத்தேன். அவளும் மகிழ்ச்சியாக சம்மதித்தாள். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எங்கள் கடந்தகாலங்களில் நிகழ்ந்த உப்பு சப்பில்லாத விஷயங்களை அளவளாவிக்கொண்டிருந்தோம். திடீரென்று அவளிடம் அமானுஷ்ய விஷயங்களில் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டேன். என் பால்ய காலத்து கிராம வாழ்வின் பக்கங்களிலிருந்து நான் சுவாரசியமாக எதையாவது கூறலாம் என்று எதிர்பார்ப்பதுபோல் என்னைப் பார்த்தாள். ஆனால் நான் அந்த ஃபிளாட்டில் எனக்கு நேர்ந்த வினோதமான அனுபவங்களைக் கூறினேன். அவள் புன்னகைத்துவிட்டு தான் எதுவும் நாயின் ஊளையைக் கேட்கவில்லையே என்றாள். அவளே மீண்டும் மதுவின் பிடியில் உறங்கியதால் தெரிந்திருக வாய்ப்பில்லை என்றும் கூறினாள். ஆனாலும் நான் சொன்னதை எதுவும் நம்பாமல் அவளைக் கேளிக்கைப்படுத்தக் கூறுவதாக எண்ணி புன்னகைத்துக்கொண்டே கேட்டாள். அவளுக்கு உரையாடல் அலுத்திருக்க வேண்டும். மீண்டும் திரைப்படம் பார்க்க அழைத்தாள். நான் வேலையிருக்கிறது என்று கூறவும், அவளது பையிலிருந்த மடிக்கணினியை எடுத்தும்கொண்டு என்னிடம் தான் படுத்துக்கொண்டே படம் பார்க்கப்போவதாகக் கூறி விடைபெற்றாள். ஒருவேளை கணினியை அணைக்காமல் உறங்கிவிட்டால் நான் அணைக்குமாறு வேண்டினாள். அதைச் செய்வதற்கு ஈடாக முன்கூட்டியே ஒரு முத்தம் வேண்டுமென்றேன். தாராளமாக இரண்டு தந்துவிட்டு புன்னகைத்துச் சென்றாள். அன்றும் படுக்கையில் மோசமான துர் நாற்றம் வீசியது. மீண்டும் என் கொலனை எடுத்து அடித்தேன். ஆனால் மறுநாளும் என்னிடம் தன் உடைமீது வாசனை வருவதைக் குறித்துக் கேட்டவள், நான் சொன்ன பதிலில் திருப்தியடையவில்லை.

அடுத்த சில இரவுகளும் இதே போல் தொடர்ந்தன. உடலுறவுகொண்டு அவள் களைப்படைந்து கட்டிலிலேயே படுத்தவாறு கணினியில் எதையாவது பார்த்தவாறு உறங்கிப்போவாள். நான் என் பணிகளை முடித்துவிட்டு அவளுடன் இணைந்துகொள்வேன். அவள் என்னிடம் திரைப்படங்கள் சேர்ந்து பார்ப்பது குறித்து கேட்கவில்லை. படங்கள் மீதான என்னுடைய விருப்பமின்மையைப் புரிந்துகொண்டதாகத் தோன்றியது. ஆனால் தன் உடலின் மீது அடிக்கும் என் கொலொனின் வாசனையை மட்டும் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. விரைவில் நான் எதையோ மறைக்கிறேன் என்றே நினைத்தாள்.

ஒரு நாள் இரவு வழக்கம்போல் அவள் உறங்கிக்கொண்டிருக்க, நான் கணினியில் வேலையிலிருந்தேன். மூன்று மணியாக ஐந்து நிமிடங்கள் இருந்தன. கிச்சனில் சென்று காபி போட்டுத் திரும்பும்பொழுது பாத்ரூமிலிருந்து சிலீரென்ற சத்தம் எழுந்தது. நான் காபியை மேடையில் வைத்துவிட்டு வேகமாக ஓடிச்சென்று விளக்கைப் போட்டுவிட்டு பாத்ரூம் கதவைத் திறந்தேன். அவளும் உறக்கம் கலைந்து எழுந்துவிட்டுருந்தாள். ஒரு நொடி அந்த அசாதாரண சூழலிலும் அவளை அந்த நொடியே புணர ஆசைகொண்டேன். இருவரும் குளியலறைக்குள் எட்டிப்பார்க்க, வாஷ் பேசின் மீது வைக்கப்பட்டிருந்த கண்ணாடி விழுந்து உடைந்திருந்தது. ஒரு சிறு கண்ணாடித் துண்டும் சட்டத்தை  விட்டு வெளியே சிதறியிருகவில்லை. இருவரும் என்ன நடந்தது என்று விளங்காமல் சில நொடிகள் பார்த்துக்கொண்டோம். அந்த பாத்ரூமில் இருந்த ஜன்னல் கண்ணாடி இருந்த இடத்திற்கு நேர் மேலே இருந்தது. எத்தனை பலமாக காற்று வீசியிருந்தாலும் கண்ணாடி விழும் சாத்தியங்கள் குறைவு. அப்படியே விழுந்திருந்தாலும் அது ஒன்று செங்குத்தாக, அல்லது குப்புறத்தான் விழுந்திருக்க வேண்டும். யாரோ கையில் எடுத்து, முகம் பார்த்துக்கொண்டே அப்படியே தரையில் நழுவவிட்டதுபோல் விழுந்திருந்தது. இதையெல்லாம் நான் தான் கவனித்தேன். அவள் கண்ணாடி விழுந்து உடைந்திருப்பதை மட்டுமே கவனித்தாள். அவள் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்த அதிர்ச்சியிலிருந்ததால் நான் அவளை நகரச் சொல்லிவிட்டு, உடைந்த கண்ணாடியை அலுங்காமல் எடுத்து கிச்ஸ்ன் சிங்கிற்குக் கீழே பத்திரமாக வைத்தேன். அவள் அதற்குள் அந்த இடத்தில் தண்ணீர் விட்டுக் கழுவிக்கொண்டிருந்தாள். இருவருக்கும் உறங்கச் செல்லப் பிடிக்கவில்லை. சோபாவில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கைகளைக் கோர்த்தபடி நெடு நேரம் அமர்ந்திருந்தோம். நான் அன்று மேற்கொண்டு எதுவும் பேசவில்லி.

மறு நாள் இரவு அவளிடம் நான் உண்மையைக் கூறினேன். எப்படி அவள் அங்கு வந்த அன்றிலிருந்து நாய் ஊளையிடவில்லை என்பதையும், தாங்க முடியாத துர்நாற்றம் வீசியதையும், அவள் மீதும் படுகை மீதும் வாசனை திரவியம் அடிக்க வேண்டியிருந்ததையும் ஒருவித குற்றவுணர்ச்சியுடன் கூறினேன். அவள் அதனாலென்ன பரவாயில்லை என்று பதிலுரைப்பாள் என்று நம்பினேன். ஆனால் அவளோ என்னை நம்ப முடியாமல் பார்த்தாள். தான் இதுவரைக் கேட்கவேயில்லாத நாயின் ஊளை எனக்கும் கேட்கவில்லை என்பதை ஏன் நான் ஏதோ அமானுஷ்யமாகக் கருத வேண்டும் என்று கேட்டாள். அவள் வருவதற்கு முந்தைய தினம்வரை எத்தனையோ நாட்களாகத் தொடர்ந்து ஊளையிட்டதைக் கூறினேன். அக்கம் பக்கத்தில் யாராவது இதுபோல் கேட்டிருந்தால் கார்ப்ரேஷனுக்கு அழைத்து நாயை எப்பொழுதோ கூட்டிச் சென்றிருப்பார்களே என்று கேட்டாள். எனக்குத் தெரியவில்லை என்று பதில் அளித்தேன். அவள் அதை நம்பவில்லை என்பது அவளிடமிருந்து வெளிப்பட்ட சிறு அமைதியில் தெரிந்தது. பின்பு நினைவுகூர்ந்தவளாக முந்தைய தினம் நான் அந்த அகாலத்தில் ஏன் பாத்ரூமிற்கு அருகே நின்றுகொண்டிருந்தேன் என்று வினவினாள். நான் அவள் கேள்வியில் குழம்பி, காபி போட வந்ததையும், கண்ணாடி விழுந்த சத்தம் கேட்டே அங்கு விரைந்ததையும் கூறினேன். ஏனோ அவளுக்கு கண்ணாடி உடைந்த நேரம் நான் அங்கு இருந்ததாகத் தோன்றியது. இரண்டு மூன்று முறைகள் வெவ்வேறு விதங்களில் இக்கேள்வியைக் கேட்டாள். எனக்குக் கடுப்பாக இருந்தது. வெளிக்காட்டவில்லை. பின்பு என்னிடம் படுக்கையில் நான் கொலன் அடிப்பதற்கான காரணத்தை வினவினாள். மூன்று மணிக்கு வீசிய துர்நாற்றக் கதையை அவள் நம்பவிலை. அவள் நன்றாகச் சாப்பிடுவதால் ஒருவேளை தூக்கத்தில் பிரியும் வாயு நாற்றத்தை நேரிடையாகக் குறிப்பிட நான் தயங்கி இவ்வாறு கதை கட்டுகிறேனா என்று கேட்டாள். இப்படி அவள் நினைக்கக்கூடும் என்று நான் எதிர்பாராததால் பதில் கூற சற்றுத் தடுமாறினேன். அவள் அதை மழுப்பலாக புரிந்துகொண்டாள். அவள் முகத்திற்கு நேரே நான் கூறாமல் அமானுஷ்யம் அது இதுவென்று கண்ணாடியை நானே உடைக்கும் அளவிற்கு நேர்மையற்று நடந்துகொண்டதாக குற்றம் சாட்டினாள். அவமானத்தில் லேசாக அழுதாள். என்னிடம் சொலிக்கொள்ளாமல் அலுவலகம் கிளம்பிச் சென்றாள். அன்று மாலை அவளிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி. இனி தான் அங்கு வரப்போவதில்லை என்று. அன்று இரவே நாயின் ஊளை மீண்டும் தொடங்கியது.