சுந்தர ராமசாமி மறைந்தபோது சுஜாதா எழுதிய அஞ்சலிக் குறிப்பு இவ்வாறு முடிந்ததாக நினைவு. ‘ ஒரு உண்மையான கலைஞனுக்கு ஒரு ரசிகனின் அஞ்சலி.’ இந்த வாக்கியம் சுந்தர ராமசாமியைப் பற்றி சொல்வதைக் காட்டிலும் அதிகமாக சுஜாதாவைப் பற்றி சொல்கிறது. ரசிகன் என்ற பதத்திற்கு ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கும் என்றால் அது சுஜாதா. ஒரு மாபெரும் ரசிகனே மாபெரும் கலைஞனாக இருக்க முடியும் என்றால் அதற்கு உதாரணமும் சுஜாதாதான். தனது கண்ணாடியின் முன் நின்று தனது பிம்பங்களைத் தரிசித்துக்கொண்டே இருப்பவர்கள் நடுவே கலையின், இலக்கியத்தின் பிரகாசிக்கும் சுடர்களை, ஒளி பொருந்திய தருணங்களை வாழ் நாளெல்லாம் இடைவிடாமல் அவர் தேடி நடந்தார். அந்தப் பிரகாசம் அவரது எழுத்துக்களில் கடைசிப் புள்ளிவரை படர்ந்திருந்தது. மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இறுதி நாட்களில் அவர் ‘குங்கும’த்தில் எழுதி வந்த கேள்வி–பதில் பகுதிக்கு அதே துள்ளலுடன் பதில்களை டிக்டேட் செய்தார். ‘கல்கி’யில் எழுதி வந்த ஆழ்வார் பாடல்களுக்கான உரையை அதே ஆழத்துடனும் ஓர்மையுடனும் மரணத்தின் வாசலிலும் எழுதிக் கொண்டிருந்தார்.
ஒரு எழுத்தாளன் எழுத்துமுறைமையை எவ்வாறு பயில வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கு நான் வாழ்நாளில் பார்த்த மிகச் சிறந்த உதாரணம் சுஜாதாதான். அவர் வாழ்நாளில் எழுதிய மொத்தப் பக்கங்களைப் பார்த்தால் ஒருவர் தினமும் சில பக்கங்களை எழுதினால் ஒழிய அது சாத்தியமே இல்லை. தன் அறிவையும் புலன்களையும் அவர் கடைசிவரை திறந்து வைத்திருந்தார். ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் ஒரு வாசகர் சுஜாதாவைக் கேட்டார். ‘நீங்கள் ஏன் எழுத வந்தீர்கள்?’ அதற்கு சுஜாதா சொன்ன பதில்: ‘boredom… வேறு ஒன்றுமில்லை’. தன்னை எந்நேரமும் புதுப்பித்துக்கொண்டிருப்பவனேதான் செயல்படும் மொழியை, கலையைப் புதுப்பிக்க முடியும். சுஜாதா உண்மையில் ஒட்டுமொத்த தமிழ் எழுத்தின் அலுப்பைக் கடந்து சென்றார். யாருக்காவது நினைத்தையெல்லாம் சொல்லக்கூடிய ஒரு கொடுப்பினை இருக்கும் என்றால் அதுதான் வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த மகத்தான பரிசாக இருக்க முடியும். சுஜாதாவுக்கு அந்தப் பரிசும் ஆசிர்வாதமும் கடைசிவரை இருந்தது. எண்ணற்ற எழுத்தாளர்களைப் பார்த்துப் பார்த்து ஏங்கவைத்த, எண்ணற்ற வாசகர்களைப் படித்துப் படித்துக் கரைய வைத்த பரிசு அது.
பல எழுத்தாளர்கள் இன்றும் சுஜாதாவின் பிம்பத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சுஜாதா தன் எழுத்துக்களின் வழியே அடைந்த மகத்தான இடத்தை அவரது பிரபலமாக மட்டுமே புரிந்துகொள்ள விரும்பினார்கள். அந்தப் புகழை வெல்வது அல்லது புறக்கணிப்பதுதான் சுஜாதாவைப் பற்றிய தங்கள் மதிப்பீடாகக் கொண்டு இன்றும் பலர் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சுஜாதாவுடன் புகழின் வெளிச்சத்தில் அவரைக் கடந்து செல்ல விரும்புகிறவர்கள் ஒருபோதும் அவரது நிழலைக்கூட தொட முடியாது. தமிழில் ஒரு நூற்றாண்டின் மொழி அமைப்பினை இரண்டு பேர் தீர்மானித்தார்கள். ஒருவர் பாரதி, இன்னொருவர் சுஜாதா. பாரதியையும் சுஜாதாவையும் ஒப்பிடுகிறாயா என்று ஒருவர் வெறுமனே ஆவேசப்பட்டுப் பயனில்லை. பெரும்பாலான எழுத்தாளர்கள் மொழியைப் பயன்படுத்து கிறார்கள். அபூர்வமாக சிலரே மொழியின் பயன்பாட்டையே மாற்றியமைக்கிறார்கள். சுஜாதா தமிழின் பயன்பாட்டையே வேறுவிதமாக மாற்றினார். நவீனத்துவத்தின் பேரலையாக அவர் உள்ளே வந்தார். எண்ணற்ற மடைகளை உடைத்துத் திறந்துவிட்டார். அது மொழியின் அமைப்பை மட்டுமல்ல, வாசகனின் மன இயல்பையும் மாற்றியது. விஸ்தாரமான எதார்த்தவாத சித்தரிப்பு ஒருபுறம், கவித்துவம் சார்ந்த இறுக்கமான மொழி நடை இன்னொரு புறம் என இருந்த தமிழ் புனைகதை பரப்பிற்குள் ஒரு நூதனமான எழுத்து முறையை, வாசிப்பு முறையைக் கொண்டுவந்தார். அது வாசகனின் உணர்ச்சிகளுக்குப் பதில் அவர்களது அறிவைக் கோரியது.
சரித்திரத்தின் கனவுகளிலும் குடும்பக் கதைகளின் கண்ணீரிலும் மூழ்கியிருந்த தமிழ் வாசகனுக்கு சுஜாதாவின் கதைகள் முதல் வாசிப்பில் புரியாமல் இருந்தது. புரிந்துகொள்ளத் தொடங்கிய கணத்தில் அவன் தன்னை சுஜாதாவையும்விட பெரிய புத்திசாலியாகக் கருதி புன்னகையுடன் தலையசைத்துக்கொண்டான்.
90களின் ஆரம்பத்தில் சுஜாதாவை மதுரை ‘சுபமங்களா’ நாடக விழாவில் முதன்முதலாக சந்தித்தேன். அப்போது அவர் எனது ‘கால்களின் ஆல்பம்’ கவிதை எங்கெங்கும் பேசிக்கொண்டிருந்த தருணம். அரங்கத்திற்கு வெளியே தன்னைச் சூழ்ந்து நின்ற 20-30 பேருக்கு நடுவே தமிழ்க் கவிதையைப் பற்றி அவர் பேசிக் கொண்டிருந்த தோற்றம் இப்போதும் அப்படியே மனதில் படிந்திருக்கிறது. அவர் வாழ்நாளெல்லாம் தமிழ்க் கவிதையின்பால் தீராத விருப்பம் கொண்டிருந்தார். பழந்தமிழ் கவிதைகளுக்கு ஆசையுடன் உரைகள் எழுதினார். நவீன கவிஞர்களைத் தேடித் தேடி அறிமுகப்படுத்தினார்.
சுஜாதாவை எத்தனையோமுறை சந்தித்திருக்கிறேன். எனக்குத் தெரியாமல் அவர் எனது பாதைகளை சுலபமாக்கினார். நான் கேட்காமலேயே அனாவசியமான போராட்டங்களிலிந்து அவர் என்னை விடுவித்திருக்கிறார். எழுத்தாளனாக நான் அடைந்த கவனமும் சரி, ஒரு பதிப்பாளனாக எனக்குக் கிடைத்த சாதகமான அம்சங்களும் சரி அது சுஜாதாவின் வழியாக உருவானதே. அவர் ஏன் என்னை அவரது விசேஷ கவனத்தில் எடுத்துக்கொண்டார் என்று எனக்கு கடைசிவரை தெரிந்ததே இல்லை. அவர் வெளிப்படை யாக உணர்ச்சிகரமான மனிதர் அல்ல. ஆனால் அவர்பால் ஆழமான உணர்ச்சிகளையும் மன நெகிழ்ச்சியையும் நிரந்தரமாக உருவாக்கி விட்டுச் சென்றிருக்கிறார்.
புதிய தலைமுறை
ஜூலை 2011