1.அப்பத்தைக் கையளித்தல்
*********************************
மூன்றாம் நாள்
உயிர்த்தெழுந்த தேவகுமாரன்
சிக்னலில் அன்பை யாசகம் கேட்டு
கடக்கும் மகிழுந்துகளின்
ஜன்னல் கதவுகளை விடாது
தட்டிக் கொண்டிருக்கிறார்.

தன் பசி தீர்க்க பலூன்களை
விற்பனை செய்பவரின்
புறங்கைகளில் ஆணியறைந்த
தழும்பு துருத்தி நிற்கிறது.

தன் வெளுத்த மேலங்கி
நைந்து கிழிந்த பின்
இந்த ஜீன்ஸூக்கு மாறியதாய்
சொன்ன தேவகுமாரனின்
மார்பு மறைத்த டீசர்ட்டில்
சிரிக்காத சேகுவராவின்
முகம் மேல்நோக்கி
ஏங்கிய வண்ணமிருந்தது.

சிலுவையில் மரிப்பதற்கு முன்
தான் போதித்த அன்பை
திரும்பத் தரும் ஒருவரையாவது
கண்டு கொண்டாரெனில்
மீண்டும் மரித்துப் போக
சித்தமாயிருப்பதாய் கூறுபவரிடம்
ஆனந்தபவன் அப்பத்தை மட்டுமே
கையளிக்க முடிந்ததென்னால்.

அதையும் அவர் அங்கேயே
தன்னுடன் கையேந்தும்
பாலகர்களுக்கு பங்கிட்டு
தந்தவிட்டு அடுத்த மகழுந்தின்
கண்ணாடி நோக்கி நடக்கலானார்.

2.ஆயிரம் புரவியேறி
************************
இதோ மீண்டுமொருமுறை
நான் நாண
நந்நயம் செய்து
பின் மெல்லச் சிரிக்கிறாய்..

குற்றங்கடிதல்
உன் புன்னகைக்கு
கைவந்த கலை.

உன் புன்னகையின் வெளிச்சத்தில்
இனியொரு குற்றம் புரிதல்
அத்தனை எளிதானதாய்
இருக்க முடியாது.

ஆயிரம் புரவியேறி உதிக்கும்
அதிகாலை பகலவனை ஒத்தவை
உன் புன்னகைக் கதிர்கள்.

மனங்கொண்ட இருளெங்கும்
மங்கச் செய்யும் சிறு அகல் சுடரை
இதழ்களில் மலரச் செய்கிறாய்.
அக் கோள்கொள் பிரகாசத்தில்
பிரபஞ்சமெங்கும் மினுக்கிடுகின்றன
ஒளிதுளிர்க்கும் நட்சத்திரங்கள்.

3.அதிகாலைத் தேநீர்
************************
நான் நட்சத்திரங்களுடன்
இந்த அதி காலையில்
தேநீர் அருந்துகிறேன்.

ஐந்தாம் முனை சற்றே
உடைந்த அந்த நட்சத்திரம்
பல பால்வீதிகள் கடந்து
வந்திருக்கிறது.

இரவில் பல வண்ணங்களில்
மினுங்கும் நட்சத்திரங்களுக்கு
பகலில் ஒரே நிறம் தான்.

நீலம்.

உங்களோடு உறவாடும்
நடச்த்திரங்களின்
வண்ணம்தான் என்ன.

வானோடு சிநேகித்தவனுடன்
ஒரு அதிகாலையைச் செலவிடுவதில்
மகிழ்வுற்ற நட்சத்திரங்கள்
நாளை தேநீர் விருந்திற்கு
வேற்று கிரகத்து நிலவுகளை
அழைத்து வருவதாய்
வாக்களித்திருக்கின்றன.

பதிலுக்கு நானும்
என் சிநேகிதிகளை அவற்றிற்கு
அறிமுகப்படுத்த வேண்டும்.

நட்சத்திரங்களை
தலையில் சூடிக் கொள்ள
விருப்பமுள்ளவர்கள்
அவர்கள் தானே.

4.பழைய கதையின் நாயகி
*******************************
ம்..
எனக்கும் ஒரு பழைய கதை
இருக்கவே செய்கிறது
உனக்கிருக்கும் ஒன்றைப் போல.

அதில் எனக்கான நாயகியாய்
நீதான் இருந்தாய் அப்போது.

உன்னுடைய பழயை கதையில்
உனக்கான நாயகனாய்
நானில்லை என்பது
நமது திருமண இரவில் தெரியவந்தது.

இப்போதும் எனக்கான
நாயகியாய் நீதான் இருக்கிறாய்.

உனக்கான நாயகனாய் நான்
இன்றும் இல்லை என்பதை
அவ்வப்போது நாம்
விளையாடும் சீட்டு விளையாட்டுகள்
காட்டிக் கொடுத்து விடுகிறன.

இதோ இப்பொழுதும்
நாம் சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

எப்பொழுதும் போல நான்
எனக்கான ராணி இருக்கிறதா உன்னிடம்
என்கிறேன்..

நீயும் எப்பொழுதும் போலவே
கோ ஃபிஷ்ஷிங்
என்கிறாய்.