1.இறைச்சி இதழ்கள்
************************
அம்மையின் முலை தேடும்
ஆத்திரம் புரிகிறது
அதை
அம்மையின் முலையெனவே சுவை
காயத்திற்கு மருந்திடையில்
விலைமகள் பெற்ற மகனென
விடம் கக்குவாள்
பெண்

தாயோலி என்பதொன்றும் வசவில்லை.
வாதம் ஒன்று
தாயிலிருந்து வந்தவனுக்கே
தாய் முதற் சொந்தம்.
வாதம் இரண்டு
தாயிடமிருந்து வந்த தடத்தை
எரிதழல் ஜோதியாய்
நெஞ்சில் எரிப்பவன்
கும்பிட்டுத் தொழுவானன்றி
குதறுவதில்லை.

இதழ்கள்
இறைச்சி அல்ல.
இசைக்கருவி.
நாய் உரு எரித்து
இசைஞனாகு.

கொழுந்து வெற்றிலை
பூப்போலெடுத்து
நுனிவிரலால்
காம்பு கவ்வி
இருபுறமும்
தொடையில் நீவி
பின்னும் நீவி
மறுதரம் நீவி
மெல்லியதாய் சுண்ணமிட்டு
பக்குவமாய் பாக்கிணைத்துச்
சுவை.
ஆன்மா இனிக்கும்.

2. அமரகாதல்
****************
ஒரு சதவீதம் காதல்
தொண்ணூற்றியொன்பது கற்பனை
காதலைவிட காதற்சிந்தனை
அமரத்துவம்.

கற்பனை முத்தங்கள்
கற்பனைக் கூடல்கள்
உன்னதங்கள்.
நிஜமான ஒரு கூடல்
காதலைச் சிறுமைப் படுத்திவிடுகிறது
அதன்பின்
காதல் குள்ளமாகிவிடுகிறது

முத்தத்தைவிட
முத்தம் நிகழுமுன்னான முகபாவம்
எழுச்சி
காமத்தைவிட
காமத்துக்கான சமிக்ஞை
போதை.

தோற்றுப் போன காதல்
சாகும்வரை நெஞ்சிலெரிவது
அது
கூடலில் முடியாததுதானா?

காமம் இன்னும் இன்னும் என்னும்
காயசண்டிகை.
காதல் கட்டிக்கொண்ட
முலைப்பால் வலி.

காதல் தரும்
உளநிறைவு
காமத்தில் கிடைப்பதேயில்லை.