பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி,
இருங் கதிர் நெல்லின் யாணரஃதே:
வறப்பின், மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து,
இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்,
அழியா மரபின் நம் மூதூர் நன்றே 5
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி,
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;
ஒன்றே தோழி! நம் கானலது பழியே:
கருங் கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி,
இருங் களிப் பிரசம் ஊத, அவர் 10
நெடுந் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே.

“அக்கா”

“நம்ம ஊரு பழங்காலத்து ஊருக்கா..”

“நம்ம ஊர்ல கம்மா இருக்கு… ஆறு இருக்கு… அழகான ஒரு சோலை இருக்கு… வற்றாத ஒரு பெரிய கடலும் இருக்கிறது.”

“நம்ம ஊர் ஞாழல் மரங்களில் பூத்திருக்கிற சின்னச்சின்னப் பூக்களின் நறுமணம் நம் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்கிறது…”

“நம்ம புன்னை மரங்களில் பூத்திருக்கிற பூக்களில் தேனீக்கள் தேன் குடித்துவிட்டு அவைகள் மகிழ்ச்சியாக விசிலடித்துக்கொண்டு பறந்து திரிகின்றன…”

“நம்ம தெருக்களில் மீன்களைச் சுடுகிற புகை நம்ம ஊருக்கு மேலே வானத்தில் உயர உயர எழும்பி அழகாக மிதந்து கொண்டிருக்கிறது…”

“அக்கா…”

“நம்ம ஊரில் மழை பெய்தால் நமக்கு நெல் விளைகிறது…”

“நம்ம ஊரில் மழை பெய்யாமல் வெயில் காய்ந்தால் நமக்கு உப்பு விளைகிறது.”

“நம்ம ஊர்ல எல்லா வளங்களும் இருக்குக்கா…”

“நம்ம ஊருக்கு எல்லாப் பெருமைகளும் இருக்குக்கா…”

“நம்ம தலைவன் வருகிற அழகான பெரிய தேரின் இனிமையான ஓசையைக் கேக்குறதுக்குத்தான் நம்ம காதுகளுக்குக் கொடுத்து வைக்கவில்லை..”

“அக்கா.”

“நம்ம தலைவன் தேர்வந்தால் நம்ம ஊர் இன்னும் இனிமையாக இருக்கும்… என்னக்கா…”

உலோச்சனார்
நற்றிணை 311