இரும் புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவி
பைந் தாது எருவின் வைகு துயில் மடியும்
செழுந் தண் மனையோடு எம் இவண் ஒழிய,
செல் பெருங் காளை பொய்ம் மருண்டு, சேய் நாட்டுச்
சுவைக் காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கர் 5
வீழ் கடைத் திரள் காய் ஒருங்குடன் தின்று,
வீ சுனைச் சிறு நீர் குடியினள், கழிந்த
குவளை உண்கண் என் மகள் ஓரன்ன,
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம்,
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு, 10
மா இருந் தாழி கவிப்ப,
தா இன்று கழிக, எற் கொள்ளாக் கூற்றே.

அந்த அக்கா அவிய மாட்டுத் தொழுவில் உக்காந்துக்கிட்டு அழுதுக்கிட்டுருக்காவ.

அவிய சொல்லுதாவ…

”ஒரு காளாங்கண்ணு மாதிரிக் கொழுத்த ஒரு எள்வட்டங்கூட எம்மவா ஓடிப் போய்ட்டாள்…”

“எம்மவா, அந்த எளவட்டம் சொன்ன பொய் வார்த்தைகளில் மயங்கி, அவன நம்பி, அவன் கூப்ட்டான்னுட்டு அவன் பெரத்தால போய்ட்டாள்.”

“நீ ஒத்தீல அழுதுக்கிட்டுக்கெடன்னு எம்மவா என்னை அழவச்சிட்டுப் போய்ட்டாள்.”

“எம்மவா நடவடிக்கைகள் எதையுமே தெரிஞ்சிக்கிடாத பாதவத்தியா இருந்திட்டேன் நான்…”

“என் சொந்தக்காரவுக என் மவளத் தேடிப் போய்ருக்காவ…”

“எம்மவா என் சொந்தக்காரர்களிடம் அகப்பட்டு, எம்மவள என் சொந்தக்காரர்கள் பிடிச்சி இழுத்துக்கிட்டு வந்தாகள்ன்னா..”

“நான் பெத்து வளர்த்த என் செல்ல மகளின் வாடிய முகத்தையும், நான் பெத்த எம்மவா அழுகிற கண்களையும் பார்க்கிறதுக்கு நான் என் உசுர வச்சிக்கிட்டு இருக்கணுமா?”

“என்னை ஒரு பெரிய கறுப்புத் தாழிக்குள் வைத்துப் புதைக்கும்படி, என் உயிரைக் கொண்டு போகாத கூற்று, அதன் வலிமையை இழந்து, அது செத்துத் தொலையணும்…”

“எம்மவா இல்லாத வீட்டில் எப்படி நான் உயிரோடு இருப்பேன்?”

கயமனார்
நற்றிணை 271