அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத்
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்,
சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில்
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்,
‘அகன்றோர்மன்ற நம் மறந்திசினோர்’ என, 5
இணர் உறுபு, உடைவதன்தலையும் புணர்வினை
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய
துகிலிகை அன்ன, துய்த் தலைப் பாதிரி
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி,
புது மலர் தெருவுதொறு நுவலும் 10
நொதுமலாட்டிக்கு நோம், என் நெஞ்சே!

எங்கள் கிராமத்தில் ஒரு ஆறு இருக்கு. அது நல்ல தண்ணி ஆறு.

ஒரு மாமரம் அந்த ஆற்றாங்கரையின் ஒரு ஓரத்தில் இருக்கு. அந்த மாமரத்தில் கிளைகள் நெருக்கமாருக்கு. இலைகள் எல்லாம் கொழுந்து இலைகளாருக்கு. அந்த மரம் குளிர்ச்சியாருக்கு. அழகாருக்கு அந்தப் பெரிய மாமரம்.

அழகான இந்தப் பெரிய மாமரத்தில் இரண்டு குயில்கள் உக்காந்துக்கிட்டுருக்கு . அவுக இரண்டு பேரும் கணவனும் மனைவியும், அவுக இரண்டு பேரும் கன்னங்கரேர்னு கறுப்பா அழகா இருக்காக. அவுக இரண்டு பேரின் கண்களும் செக்கச் செவேர்ன்னு செகப்பா அழகாருக்கு.

அவுக இரண்டு பேரும் கிட்டக்கிட்ட உக்காந்துக்கிட்டுருக்காக.

அவுக இரண்டு பேரும் எதிரே எதிரே நெருங்கி உக்காந்துக்கிட்டுருக்காக.

அவுக இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த இரண்டு குயில்களும் கிட்டக்கிட்ட, எதிரே எதிரே, நெருங்கி உட்கார்ந்துகொண்டு, அவர்கள் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் காதலோடு பார்த்துக்கொண்டும், விசிலடித்துக்கொண்டும், பாட்டுப் பாடிக் கொண்டும் மகிழ்ச்சியை அவர்கள் ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் பெரிய மாமரத்துக்கு நேர் எதிரில் ஒரு பெரிய வீடு இருக்கு.

அந்தப் பெரிய வீட்டின் ஜன்னல் கதவு திறந்திருக்கிறது. அந்த ஜன்னல் கதவு வழியாக ஒரு இளம் பெண் அந்த இரண்டு குயில்களையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

அந்த இளம் பெண் அந்த இரண்டு காதல் குயில்களையும் பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறாள்.

அவள் கணவன் வெளிநாட்டில் இருக்கிறான்.

பாலைபாடிய பெருங்கடுங்கோ
நற்றிணை 118