என்னர்ஆயினும் இனி நினைவு ஒழிக!
அன்னவாக இனையல்- தோழி!- யாம்
இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்?
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம் 5
வறனுற்று ஆர முருக்கி, பையென
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு, என்
அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென,
வறிதால், இகுளை! என் யாக்கை; இனி அவர்
வரினும், நோய் மருந்து அல்லர்; வாராது 10
அவணர் ஆகுக, காதலர்! இவண் நம்
காமம் படர் அட வருந்திய
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே!
ஒரு சிறிய கிராமம்.
குறவர்கள் வாழ்கிற கிராமம் அது.
அந்தச் சிறிய கிராமத்தில் ஒரு சிறிய வீடு.
அந்தச் சிறிய வீட்டுக்குப் பின்னால் ஒரு சிறிய வளவு இருக்கிறது. அந்த வளவில் ஏகப்பட்ட மரங்கள் இருக்கு.
அந்தச் சிறிய வளவில் ஒரு பெரிய சந்தன மரமும் இருக்கிறது.
அந்தப் பெரிய சந்தன மரத்தைக் குறவர்கள் பெரிய வாளால் அந்தச் சந்தன மரத்தின் அடிமரத்தை அறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நார் வேட்டி உடுத்திய அந்தக் குறவர்கள் அந்தப் பெரிய சந்தன மரத்தின் அடிமரத்தை அறுக்க அறுக்க சந்தன மரத்தின் சின்னச்சின்ன இலைகள் வாடுகின்றன.
நார் வேட்டி உடுத்திய அந்தக் குறவர்கள் அந்தப் பெரிய சந்தன மரத்தை அறுத்து அறுத்துத் தரையில் சாய்த்து விட்டார்கள்.
அந்தப்பெரிய சந்தன மரம் நீளவசத்தில் தரையில் கீழே விழுந்து கிடக்கிறது. கீழே விழுந்து கிடக்கிற அந்தப்பெரிய சந்தன மரத்தின் சின்னச் சின்னக் குச்சிகளும் கம்புகளும் அதன் கிளைகளும் கூட வாடி விட்டன.
அந்தச் சிறிய வளவில் இருந்து அந்தப் பெரிய சந்தன மரத்தை நார் வேட்டி உடுத்திய அந்தக் குறவர்கள் வெளியே கொண்டு போய் விட்டார்கள்.
அந்தப் பெரிய சந்தன மரம் இல்லாத அந்தச் சிறிய வளவு அதன் உண்மையான அழகை இழந்துவிட்டது.
உரோடகத்தனார்
நற்றிணை 64