எண்பதுகளின் ஆரம்பத்தில் ஊருக்குள் கிரிக்கெட் என்ற மட்டையாட்டம் நுழைந்தது. உள்ளூர் கிட்டனாசாரி கட்டையை பிடிமானத்தோடு செதுக்கி வடிவ நேர்த்தியோடு கொடுத்தார். அதற்காக அவர் ஐந்து ரூபாய் பெற்றுக்கொண்டார். கிட்டனாசாரி பற்றியான சுவாரஸ்யமான தகவல் உண்டென்றால் அது இதுதான். ஊருக்குள் பிணம் விழுந்துவிட்டால் ரயில்வே லைனை ஒட்டியிருக்கும் சுடுகாட்டில் பிணத்திற்கான குழி வெட்டும் படலம் துவங்கிவிடும். கடப்பாரையால் நாலு குத்து குத்தியவர் கூட ஒரு டம்ளர் சாராயம் அருந்திக்கொள்ளலாம். இறப்புகள் என்றுமே கொண்டாட்ட மனநிலையுடன்தான் இருக்கும்.

கிட்டனாசாரி ஆஜானுபகவான் தோற்றமுடையவர். நல்ல உயரம். அப்போதெல்லாம் அவர் அருகில் நான் நின்றால் கால் முட்டி அளவுக்குத்தான் நிற்பேன். குழி வெட்டியான பின் குழிக்குள் அவர் எப்போதும் இறங்கிப் படுத்துக்கொள்வார். பிணம் சுடுகாடு நோக்கிப் பயணப்பட்டு வந்துகொண்டிருக்கையில் குழிக்குள் ஏற்கனவே இடம்பிடித்துக்கொண்ட பிணம் போன்றே கிடப்பார். அனைவரும் சப்தம் போட்டு எழுப்ப வேண்டும் அவரை. நிதானமாக எழுபவர் கையை ஊன்றி ஒரு உந்தலில் மேலேறி வருவார். ‘குழியோட அளவு சரியா இருக்குதான்னு படுத்துப் பார்த்தன்டா பசகளா!’ என்பார்.

கிரிக்கெட் ஆட்டம் ஊருக்குள் நுழைந்த சமயம் நான் கொமரப்பா துவக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வாசித்துக் கொண்டிருந்தேன். கோபியிலிருந்து சென்னிமலை, ஈரோடு என்று ஒரு நாளைக்கு இரண்டுமுறை சென்று வந்த பேருந்து ஒன்றுதானிருந்தது. மாலையில் வீடு திரும்புகையில் மாலை ஐந்தரை ஆகிவிடும். அதன்பிறகாக அவசரமாய் காபி குடித்துவிட்டு ஆட்டம் நடக்கும் ரயில்வே ஸ்டேஷன் அருகில் ஓட்டமாய் ஓடி வருகையில் மணி ஆறு ஆகியிருக்கும். உள்ளூர் அண்ணன்கள் டீம் பிரித்து ஆடிக்கொண்டிருப்பார்கள்.

உள்ளூரில் ஆரம்பத்தில் ரப்பர் பந்துகளே பயன்படுத்தப்பட்டன. மாட்டுவண்டி செல்லும் பாதையின் குறுக்கே நடுவாந்திரமாக மூன்று வேலிக் குச்சிகள் நட்டி சாலையின் நடுவில் ஆடிக் கொண்டிருப்பார்கள். உள்ளூர் மனோகரன் அண்ணன்தான் மட்டைப் பிடித்தாடுவதில் ஆரம்பத்திலேயே கலக்கியவர். பந்தை ஒரு சாத்து சாத்தினால் நேராக ரயில்வே லைனுக்குள் சென்று விழுமளவு அடிப்பார். அவரால் ரப்பர் பந்துகள் அடிக்கடி கிழிந்தன. செலவீனங்கள் அதிகமாயிற்று என்றார்கள். இருள் சூழும் நேரத்தில் சிறார்களுக்கென கொஞ்சம் நேரம் ஒதுக்கி பேட்டையும் பந்தையும் அண்ணன்கள் தருவார்கள். பழனிச்சாமி அண்ணன் பவுலிங் போடும் முறையை சொல்லிக்கொடுப்பார். இதில் என் தந்தையாரும் கலந்திருப்பார். ஒரு ஓவர் வீச வருகையில் முன்பாக மூக்குப்பொடி டப்பியைத் திறந்து ஒரு உறிஞ்சு உறிஞ்சிவிட்டுதான் பந்தைக் கையில் எடுப்பார். அவர் பிற்காலங்களில் பவுலிங் துறையில் லெக் ஸ்பின்னராக இருந்தார்.

அண்ணன்கள் ஓரளவு கிரிக்கெட் ஆட்டத்தில் தேர்ச்சி பெற்ற பிறகு அந்த இடம் போதாமையாகிவிட்டது. எப்போதும் லெக் சைடில் மட்டுமே பந்தை அடித்தாட வேண்டிய நிலை இருந்தது. ஃஆப் சைடில் கள்ளியும், காடும் காட்டினுள் சோளத்தட்டுகளும் நின்றிருந்தமையால் ஆடிப்பழகிய அனைவருமே லெக் சைடில் மட்டுமே பந்தை அடித்துப் பழகியிருந்தார்கள்.

கிராமத்தில் அப்போது எல்லோர் வீட்டிலும் ரேடியோதான். சென்னையில் டெஸ்ட் ஆட்டம் என்றால் தமிழில் கமெண்டரி கேட்பது நடக்கும். அண்ணன்கள் கமெண்ட்ரி கேட்பதற்காகவே தொழிலை விட்டுவிட்டு கிழக்கே புளியாமரத்தினடியில் குட்டானாய் ரேடியோவைச் சுற்றிலும் அமர்ந்து கேட்பார்கள். அப்போது வடைச்சட்டி வைத்து கோழி சமைக்கும் வேலையும் நடக்கும். வடைச்சட்டி, முளகாய், உப்பு, எல்லாம் என் வீட்டிலிருந்து என் தந்தையார் தூக்கிச் செல்வார். இருக்கும் ஒரு ரேடியோவையும் அவர் தூக்கிப்போய் விடுவதால் கவாஸ்கர் ஓப்பனிங் வந்து சென்சுரி போட்டாரா? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. இருந்தும் கிரிக்கெட்டை தமிழ்வர்ணனையில் கேட்பது அப்போது அழகாய் இருந்தது. ‘வீசும் கை விக்கெட்டின் மேலிருக்க கபில்தேவ் ஓடி வருகிறார். ஹா! அந்தப்பந்தை ஜாகீர் அப்பாஸ் மிடான் திசையில் தட்டிவிட்டு ஒரு ஓட்டம் பெறுகிறார். இத்துடன் அணியின் மொத்த எண்ணிக்கை விக்கெட் இழப்பின்றி முப்பத்தியேழாகவும் ஜாகீர் அப்பாஸின் சொந்த எண்ணிக்கை பதினேழாகவும் உயருகிறது!’

பிற்பாடு ரப்பர் பந்திலிருந்து கார்க் பந்திற்கு ஆட்டம் மாறியது. இடமும் என் வீட்டின் தெற்கே பனைகள் சூழ்ந்த அமைவினுள் கிரிக்கெட் ஆட்டம் ஊரில் துவங்கிவிட்டது. இங்கே ஆப் சைடில் நெடுக பனைமரங்கள் இல்லை. ஆனால் லெக் சைடில் ஏழு பனைமரங்கள். போக விக்கெட் கீப்பருக்கும் பின்னால் வரிசைக்கிரமமாக பனைகள். அதுவும் ஒருவகையில் வசதியாகத்தான் போயிற்று. கீப்பர் பந்தைப் பிடிக்க இயலாமல் போனால் பனைகள் தடுத்துவிடும். அண்ணன்கள் பிட்சை அமைக்க தட்டுப்பலகை கொண்டு தண்ணீர் ஊற்றி தட்டி சிமெண்ட் போட்டது போன்று பிட்ச்சை தயார் செய்தார்கள்.

கார்க் பால் விழுந்து, பிட்ச் ஆனால் பேட்டுக்கு எழுந்தது. போக விரைவாக வீசுகையில் நெஞ்சு அளவுக்கு பந்து எகிறியது. இதில் இரண்டு அண்ணன்கள் கார்க் பால் அடிவாங்கி விளையாட்டைவிட்டு பொழப்பைப் பார்க்க ஓடிப் போனார்கள். விளையாட்டின் மீது ஆர்வம் மிக்க சிலர் பக்கத்து ஊர்களிலிருந்தும் ஆட்டம் பழக வந்து சேர்ந்துவிட ஞாயிறு அன்று கிரவுண்டு நிரம்பிவழிந்தது. என் போன்ற சிறார்களுக்கு வழக்கம்போல இருட்டுக்கட்டும் நேரத்தில்தான் பேட்டும் பந்தும் கிடைக்கும்.
நான்கைந்து பேர்களுக்கான பங்குகள் உள்ள காடு அது. பிரிக்கப்படாமல் இருந்ததால் பல காலம் விளையாட்டு மைதானமாகவே விளங்கிற்று. அந்த சமயத்தில் கார்க் பால் ஐந்து ரூபாயிற்கும், லெதர் பால் பத்து ரூபாயிற்கும் கிடைத்துக் கொண்டிருந்தன. கிட்டாசாரி தயாரித்துக் கொடுத்த கட்டையால் கார்க் பந்தை அடிக்கையில் விர்ரென கையில் மின்சாரம் பாய்ந்தது போன்றே இருக்கவே அது என் போன்ற சிறார்களுக்கு கிடைத்து விட்டது. அண்ணன்கள் இரநூறு ரூபாய் பேட்டை வாங்கிக் கொண்டார்கள். அதை வாங்கி நக்கிப் பார்த்துக் கொள்ளத்தான் என் போன்ற சிறார்களுக்கு அனுமதி அளித்தார்கள். போக பக்கத்து ஊர்களிலிருந்து போட்டிக்கு என்று வந்துபோனார்கள். தோல்வி, வெற்றி என்று மாறி மாறிக் கிடைத்துக் கொண்டிருந்தது. “சூட் பண்றா! சூட் பண்ணு!” பந்து போடுபவரை உற்சாகப்படுத்தும் விதமாக அப்படிச் சொல்லிக் கத்துவது மட்டையாளனை மிரட்டும் யுக்தியாக விளங்கிற்று!

சுமார் பதினைந்து வருடகாலம் விளையாட்டு மைதானமாக இருந்த காடு பின்பாக பங்கு பிரிக்கப்பட்டு பனைகள் அடியோடு சாய்க்கப்பட்டு இப்போது பிட்ச் இருந்த இடத்தில் ஓங்கி புளியமரம் வளர்ந்து நின்றிருக்கிறது. நானும் ஒரு புளியமரத்தையும் இரண்டு தென்னம்பிள்ளைகளையும் மூன்று வருட காலமாக தண்ணீர் ஊற்றி மேலே கிளப்பிக் கொண்டிருக்கிறேன்.

முதலாக ஊத்துக்குளி பள்ளியில் உயர்நிலைப்பள்ளி வாசிக்கச் செல்கையில் வருட ஆட்டத்தில் வகுப்பறைகள் கலந்து பரிசுகள் பெறுவதில் ஆர்வமாகின. முதல் குரூப் எடுத்து வாசித்துக் கொண்டிருந்த நான் இருக்கும் அரை குறைகளை வைத்து இரண்டு வருடங்கள் கிரிக்கெட் ஆட்டத்தில் பரிசு பெற காரணமானேன். அதனால் பேட்மிட்டன் ஆட்டத்தில் பேட்டைக்கூட தொட்டுப் பார்க்காத எனக்கு என் வகுப்பறைத் தோழர்கள் இரண்டு சர்டிபிகேட் பெற்றுத் தந்தார்கள் சும்மாவுக்கேனும் என்னை விளையாட்டில் சேர்த்தி.

பின்பாக தூர்தர்ஷன் கிரிக்கெட் ஆட்டத்தை ஒளிபரப்பு செய்யத் துவங்கிய நேரம் அது. பரிச்சை எழுதியும் எழுதாமலும் ஓடிப்போய் ஊத்துக்குளியில் ஒரு வீட்டில் அமர்ந்து ஆட்டம் பார்ப்பது தொடர்ந்தது. மதிய நேரம் என்பதால் போர்வை கட்டி திண்ணையில் முப்பது பேருக்கும்மேல் அமர்ந்து ஆட்டம் பார்ப்பதில் ஆர்வமாய்த் திரிந்தோம். ஆஸ்த்திரிலேய பேட்ஸ்மேன் டேவிட் பூனை அங்கு அமர்ந்து பார்த்த அனைவருக்குமே பிடிக்கவில்லை. ஜக்குச் சக்கென சுவிங்கம் மென்றபடி இந்திய பவுலர்கள் வீசும் பந்துகளை அனாயசமாக தடுத்தாடிக் கொண்டிருப்பவர் அவர். அதே போல் கிருஷ்னமாச்சாரி ஸ்ரீகாந்தை பார்க்க ஓடினால் அவர் அவுட்டாகிச் சென்றிருப்பார்.

முட்டாள்தனமான கிரிக்கெட் ஆடியவர்களில் முதலிடம் ஸ்ரீகாந்துக்குத்தான். எந்தவித பொறுப்புணர்ச்சியுமில்லாத ஓப்பனிங் பேட்ஸ்மேன். மூக்கை அடிக்கடி உறிஞ்சிக்கொள்வதை தன் ஹாபியாக வைத்திருந்தவரின் மேனரிசத்தை சில நண்பர்கள் பேட்டிங் செல்கையில் அவரைப் போன்றே மூக்கை உறிஞ்சி வேடிக்கை செய்வார்கள். உலகக்கோப்பை போட்டி ஒன்றில் ஓப்பனிங் வந்த ஸ்ரீகாந்த் வெஸ்ட் இண்டீஸ் பவுலரின் முதல் பந்தை சிக்சருக்கும், அடுத்த பந்தை நான்கிற்கும் அனுப்பி மூக்கை உறிஞ்சிவிட்டு அடுத்த பந்தில் போல்டு ஆகி பெவிலியன் திரும்புகையில் ‘உதைத்தால்தான் என்ன இவரை!’ என்றெல்லாம் கொந்தளித்திருக்கிறேன்.

இன்று தமிழ் கமெண்டரி என்று அமர்ந்துகொண்டு, மூக்குமேல ராஜா! டிப்பு டப்பு!, டில்லுக்கு டப்பு என்றெல்லாம் உளறிக்கொட்டிக் கொண்டிருக்கிறார்.
தொண்ணூறுகளில் உள்ளூரில் ஒரு அணி உருவாகியது. அதற்கு ‘கேப்டன் பிரகாரன் கிரிக்கெட் கிளப்’ என்று ஒருமனதாக பெயரானது தேர்ந்தெடுக்கப்பட்டது. இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களையும், நான்கு பேட்ஸ்மென்களையும் நம்பி ஊர் ஊராக பணம் கட்டி ஞாயிறுகளில் சென்று கொண்டிருந்தோம். அணியில் இடம்பெற்ற அனைவரின் இல்லங்களிலும் ஒவ்வொரு கோப்பை இன்றும் இருக்கிறது. ஒவ்வொருமுறையும் வெல்கையில் ‘இந்தவாட்டி நான் கொண்டுட்டு போறேன்! இந்த விசுக்கா எனக்குத்தான்!’ என்று தூக்கிப் போவார்கள். கடைசியாக சென்ற வாரத்தில் வீடு பூச்சு நடக்கையில் என்னிடமிருந்த கோப்பை தனியே கழண்டுவிட்டது. கீழிருந்த கட்டையை தண்ணீர் அடுப்புக்கு போட்டுவிட்டேன்.

முதல் பேட்ஸ்மென்னாகவும், அணியின் தலைவனாகவும் இருந்த நான் ஒரு மொக்கை கேப்டன்தான். ஓப்பனிங் இறங்குகையிலேயே ரன் ஓடுவதற்கென தனி ஆளுடன்தான் இறங்குவேன். காச நோயின் பிடியிலிருந்த நான் நான்கைந்து ரன்கள் ஓடினாலேயே மூச்சு வாங்கிக்கொண்டு தடுமாறுவேன். அதற்காகவே ஒரு ஓவர் வரை தனி ஆளாகச் சென்றாலும் ஓட்டத்திற்காக இரண்டாவது ஓவரில் ஆளை வரவழைத்துக் கொள்வேன். வருபவனும் எப்படியேனும் ரன் அவுட் ஆகிவிடுவான். ஒவ்வொரு முறையும் என் ஓட்டகாரன் ரன் அவுட் ஆவது வேடிக்கையாகத்தான் இருக்கும். போக வேகப்பந்து, ஃஆப் ஸ்பின் என்று இரண்டு வகைகளை கைவசம் வைத்திருந்தேன். எங்கேயும் பதினைந்து ஓவர் மேட்சுகள்தான் நடைபெற்று வந்தன. ஆக ஐந்து பவுலர்கள் மூன்று மூன்று ஓவர்கள்தான் வீச வேண்டும்.

அப்படியொருமுறை ஊத்துக்குளியில் திருப்பூர் அணியுடன் மேட் விரித்த பிட்ச்சில் லெதர்பாலில் ஆட வேண்டியிருந்தது. ஆட்கள் அனைவருக்கும் லெதர்பாலில் ஆடுவதில் எந்த அனுபவமும் இல்லை. அது விலை அதிகமும்கூட. போக வாங்கி மண் தரையில் வீசினால் ஓரளவிற்குத்தான் தாக்குப் பிடிக்கும். நார் நாராக பிந்து வரும். குருட்டுத் தைரியத்தில் பணம் கட்டி ஆடச் சென்றாகிவிட்டது. ஓப்பனிங் சென்ற நான் பனிரெண்டு ரன் இருக்கையில் வெளியேற வேண்டியதாகிவிட்டது.
இடது கையில் பேட்டிங் க்ளவுஸ் மாட்டியிருந்த நான் கிரிப்பிற்காக வலது கையில் க்ளவுஸ் அணியாமல் ஆடச் சென்றிருந்தேன். லெதர்பால் நச்சென வலது கை பெருவிரலில் விழுந்துவிட கையை உதறிக்கொண்டே வெளியேறிவிட்டேன். அண்ணன் ஒருவர் அதன்பிறகு முப்பத்தியிரண்டு ரன்கள்வரை பிரித்து மேய்ந்தார். திருப்பூர் அணிக்காரர்களுக்கு பயம் அரும்பிவிட்டது. மேலும் முப்பது ரன்களில் எங்கள் அணி வெற்றி வாய்ப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அண்ணன் திடீரென அவுட்டாகிவிட, அணியின் சரிவு துவங்கிற்று. இருந்தும் போராட்டம் தொடர்ந்தது. இங்கே வெளியில் முட்டிங்குளங்கரை எண்ணெய் போட்டு என் பெருவிரலை நீவவும் தவக்காய் அளவு வீங்கிவிட்டது. வெற்றிக்கு ஆறு ரன்கள் இருக்கையில் ஒன்பதாவது விக்கெட்டும் சரிய நான் ஒரு கையால் பேட்டை தூக்கிக் கொண்டு உள்ளே செல்ல வேண்டியநிலை வந்துவிட்டது. ஒப்புக்கு வலது கையை வைத்து தடுப்பாட்டம்தான் போட முடிந்தது. இருந்தும்கூட நின்றிருந்தவன் அன்று அதிசயமாய் லெக்சைடில் இரண்டு ஃபோர்களை அடித்து வெற்றி பெறச் செய்தான் அணியை. “எப்படிடா?” என்றேன் அவனிடம். ‘இல்லீங்கொ! என்னிக்கி நான் மேட் விரிச்சு அதுல நின்னு ஆடியிருக்கேன்? ஒரு குஷியாயிடுச்சு பாத்துக்கங்களேன்! சளீர்னு பந்து பேட்டுக்கே வருதுங்க!” என்றான்.

பின்பாக அன்றைய இரவில் வலி அதிகமெடுக்க டம்ளரில் தண்ணீர் ஊற்றி அதனுள் பெருவிரலை விட்டுக்கொண்டே அமர்ந்திருந்தேன். அடுத்த நாள் கோழி மொட்டோடு பழனிச்சாமி ஆசிரியரிடம் சென்று நின்றேன். அவர் அவ்வப்போது மொட்டுப்பத்து போடுவார். என் பெருவிரலுக்கு சுண்ணாம்பிலும், முட்டையிலும் நனைத்தெடுத்த வெள்ளைத் துணியைச் சுற்றிக் கட்டுப்போட்டார். விண் விண் என்று வலி உயிர் போயிற்று. ஒரு வாரம் கழித்து மொட்டுப்பத்தை பிரித்தெடுக்கையில் தவளை இளைத்துப் போய் சப்பப்பட்டிருந்த்து. இன்னமும் பெருவிரலை வளைத்துப் பார்த்தால் பரக்பரக்கென சபதம் வருகிறது. பழனிச்சாமி ஆசிரியர் பத்துப் போட்டது சரியில்ல பாஸ்!

எங்கள் அணியிலிருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணி பேட்ஸ்மேன் அடிக்கத் துவங்கிவிட்டால் கோபம் கொண்டுவிடுவார்கள். நான் மெதுவாக பவுலரிடம் சென்று காதில் குசு குசுத்துவிட்டு வந்துவிடுவேன். அடுத்த இரண்டு பந்துகளில் எதிரணி பேட்ஸ்மேன் முகத்திலோ, நெஞ்சிலோ அடிபட்டு ஆட்டத்திலிருந்து விலகியிருப்பார். அப்போது நாங்கள் அனைவருமே சிறப்பாக நடிப்போம்! “அடடா! பார்த்து ஆடியிருக்கலாம் நீங்க!” இப்போது நினைக்கையில் இதுவெல்லாம் ஒரு கால கட்டத்தின் நிகழ்வுகளாகவும், இழுக்குகளாகவும் நிற்கின்றன.

என் திருமண சமயத்தில் திருமணத்தை நிறுத்துவதற்கான சில முயற்சிகளில் சிலர் இருந்தார்கள். அது எங்குமே அப்படித்தானே நடந்தேறும். என்னைப்பற்றியான புகாரை மனையாளின் தாய்மாமனிடம் ஒருவர் சொல்லியிருக்கிறார். “மாப்ள பந்தாட்டத்துக்கு போயிடுவாப்லைங்களே!” என்று. அப்போது பதிலாக மனையாளின் தாய்மாமன் அவருக்குச் சொன்னது இதுதான். “யோவ்! இந்த வயசுல பந்தாடாம பின்ன கெழவனாயா பந்தாடப் போவாங்க?”

எங்களுக்கும் பின்னால் உள்ளூரில் அணி ஒன்று உருவாகவே இல்லை. ஆடும் ஆட்களும் ரப்பர் பந்திலிருந்து கார்க் பந்திற்கு நகரவேயில்லை. சில இடங்களில் இரவு நேர் ஆட்டம் நடக்கிறது விளக்கொளியில் வலைகட்டி அதனுள். அதுவும் ரப்பர் பந்து என்கிறபோது நின்றுகூடப் பார்ப்பதில்லை நான். எந்த ஊருக்கும் போட்டிக்கு என்று உள்ளூரிலிருந்து புதியவர்கள் செல்வதுமில்லை. நல்லதுதான்.