ஹயர் செகண்டரி தேர்வில் நானும் எனது நண்பன் சக்தியும் நிச்சயமாக கோட்டை விட்டுவிட்டு ஏதாவது டுட்டோரியல் கல்லூரியில் இணைந்துதான் மீண்டும் கூத்தடிப்பார்கள் என்று கணக்கு, பிசிக்ஸ், வேதியியல் துறை ஆசிரியர்கள் நினைத்தார்கள். ஆனால் அவர்களுக்கே ஆச்சரியம் தரும் வகையில் ஊத்துக்குளி பள்ளிக்கு ஒரு சலாம் போட்டுவிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் ஆடுகளைப் பட்டியில் அடைப்பது போன்றே ஒவ்வொருவரின் தந்தையார்களும் அவர்களாக முடிவெடுத்து பிஎஸ்சி கெமிஸ்ட்ரியில் கொண்டு செலுத்தினார்கள். கடைசிவரை வாசித்து பட்டம் வாங்கிய சுப்பிரமணி இன்றில்லை. ஆறுமாத முதல் பருவத்திலேயே என் தந்தையாருக்கு ஒரு சலாம் போட்டுவிட்டு நான் கோவை சென்றுவிட்டேன்.

கோவையிலும் என் தந்தையார் தன் மூக்கை என்னிடம் நீட்டினார். இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், கம்ப்யூட்டர் கோர்ஸ் என்று தனித்தனியாக வாசிக்க இருக்க என் ஜாதகத்தை உள்ளூரில் கணித்து முடித்துவிட்டு கோவை வந்தவர் என்னை நான்கு சக்கர வாகனம் பற்றிக் கற்றுக்கொள்ள பணத்தைக் கட்டி சேர்த்துவிட்டு வந்துவிட்டார். அது ஆறு மாத கோர்ஸ். மாலையில் இரண்டு மணி நேரம்தான் வகுப்பு. ஆனாலும் அவர்கள் கோவையைச் சுற்றிலுமிருக்கும் வொர்க்ஸாப்களில் எடு மணி நேர பணிக்கு அனுப்பினார்கள். ஆறு மாதம் அவர்களுக்கு ஓசியில் பணி செய்து நன்னடத்தை சான்றிதழ் பெற்று வர வேண்டும். பொறுப்புணர்வு மிக்க என் வாழ்க்கை அங்கே தான் துவங்கிற்று. டிசிஎம் டயோட்டா வகை கூடுந்துகள் அப்போது 88களில் பிரபலம். இதன் தோல்விகளைச் சரிப்படுத்திய வாகனமாக மிட்சிபுசி வந்தது. மேற்கொண்டு சிவராஜ் மஸ்தா. இன்று சாலைகளில் அந்த வாகனங்கள் தட்டுப்படுவதேயில்லை.

டிசிஎம் டயோட்டா வேனில் இஞ்சின் பகுதி வேலைகள் மட்டும் எனக்குத் தெரியாது. நான் சென்ற நான்கு மாதங்களில் ஒரு வண்டிதான் இஞ்ஜின் வேலைக்கு வந்தது. மற்றபடி அது மிகப்பெரிய நிறுவனம்தான். வொர்க்ஸ் மேலாளர்கள் என்று இரண்டு பேர் இருக்க அவருக்கும் மேலாக ஒரு மேலாளர் இருந்தார். உடன் பயிலும் மாணவர்களில் ஒருவன் அதே பணிமனையில் என்னுடன் இருந்தான். ஆயில் மாற்றுவது, கிரீஸ் போடுவது, உருளிப்பட்டையைக் கழற்றுவது, மாட்டுவது என்று கைகால்களில் சிராய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டே பணிமனையில் தொளபுலா கால்சட்டை சரட்டுடன் திரிந்தேன். வொர்க்ஸாப்பில் வேலை செய்பவன் சீமெண்ணெய், கிரிஷ் வாசமடிப்பான் எந்த நேரத்திலும். விதி அங்குச் சீக்கிரமே விளையாடியது.

எட்டு மணி என்றானதும் சங்கு ஊதும். பணியாளர்கள் பணிமனையினுள் இருக்க வேண்டும். கேட்டிலிருந்து உள்ளே சென்றிருக்க வேண்டும். நான் சாலையில் தினமும் செல்லும் யுவதி ஒருவள் மீது தீராக்காதல் கொண்டிருந்தேன். அவளது புன்னகையையும், சிரிப்பையும் பெற்றுக்கொள்ளாமல் ஒரு நாள் துவங்கியதில்லை. சாலையில் எத்தனையோ பெண்கள் ஆண்கள் என பணிக்காக விரைந்து சென்று கொண்டிருக்க அந்த ஒருத்தி மட்டும் என்னைக் கவர்ந்தது ஏன் என்றெல்லாம் தெரியாது. ஏற்கனவே சிந்தாமணி என்கிற பெண்ணால் அதிபயங்கர காதல் இடியை வாங்கியிருந்தேன். போகச் சாலையில் புன்னகைத்துச் செல்லும் அந்தப் பெண்ணின் பெயர்கூட எனக்குத் தெரியாது.

சாய்பாபா காலணியிலிருந்துகூட ஒரு தோழியுடன் நடந்து வேலைக்குச் செல்லும் பெண் அவள். அன்று ஏனோ சங்கு ஊதியும் கண்மணியைச் சாலையில் காணவில்லை. கேட் வாட்ச்மேன் என்னை உள்ளே வரும்படி ஒருவிதமான தொனியில் கூறினார்.

‘கொஞ்சம் பொறுங்கள் பெரிசு! நம்மாள் வந்திடும். பாக்காம உள்ளார வந்துட்டா வேலையே ஓடாது!’ என்றேன். கூடவே சக நான்கு சக்கர வாகனப் படிப்பாளியும் என்னுடன் நின்றிருந்தான். ‘உள்ளார வர முடியுமா முடியாதா இரண்டு பேரும்?’ கேட்வாட்ச் மேன் குரலின் தொனி நிசமாலுமே எனக்குப் பிடிக்கவில்லை. உள்ளே வந்ததும் அவன் கன்னத்தில் ஒரு அப்பட்டம் போட்டுவிட்டு, ‘தொலச்சிப்புடுவேன் படுவா!’ என்று சொல்லிவிட்டு பணிமனைக்குள் நுழைந்தேன்.

பின்பாக வொர்க்ஸ் மேலாளர் எங்கள் இருவரையும் டீ நேரத்தில் அழைத்தார் என்று சூப்பர்வைசர் அறிவித்தார். இருவரும் அவரது கண்ணாடி அறைக்குள் நுழைந்து முன்புறமாக கைகட்டி நின்றோம். விசயத்தை அவர் சொல்லிக்கொண்டே எங்கள் இருவரையும் உடனடியாக பணிமனையிலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்து ஆளுக்கு ஒரு துண்டு சீட்டைக் கொடுத்தார். அந்தச் சீட்டில் நான்கு மாத காலம் பணிமனையில் வேலை செய்ததாக குறிப்பிட்டிருந்தது.

கூட இருந்த சக நண்பன் வொர்க்ஸ் மேலாளர் காலில் நெடுக விழுந்து அழுதான். அவர் அதற்கு எந்த ரியாக்சனும் காட்டாமல் கைகளை வெளியே போகுமாறு அசைத்தார். நெடுக விழுந்தவன் எழுந்ததும் அறைக்குள்ளேயே  ஒரு அப்பு அவன் கன்னத்தில் போட்டேன். ‘அவரென்ன கடவுளாடா? கால்ல வுழுந்து அழுறே?’ சொல்லிவிட்டு வெளிவந்தவன் தொளபுலா பேண்ட் சர்ட்டையை கழற்றிப் போட்டு விட்டு என் சோத்துப்பையை தூக்கிக் கொண்டு நடையைக் கட்டினேன்.
சூப்பர்வைசர் ‘இனி என்ன பண்ணுறதா உத்தேசமுங்க?’ என்றார். “போயி அஞ்சாறு பண்டோனும்!’ என்று கேட்டுக்கு வந்தேன். உடலைத் தடவிப்பார்த்துத்தான் வெளியே அவர் அனுப்ப வேண்டும் தினமும். எந்தப் பொருளையும் நான் களவாண்டு செல்கிறேனா? என்கிற சோதனை அது. கேட் வாட்ச்மேன் அன்று உர்ரென்ற முகத்துடன் என்னைத் தடவிப் பார்க்காமலேயே வெளியில் அனுப்பினார். தடவ வந்தால் இன்னொரு அப்பு நான் போடலாம் என்றிருந்தேன். வயதானவர்களுக்கு முக பாவனைகளைக் கொண்டு ஏதோ கண்டறிய முடிகிறதென நினைத்தேன்.

அடுத்து நான் பயின்று கொண்டிருந்த நிறுவனமும் என் தந்தையாரை அழைத்துக்கொண்டு வந்தால் ஒரிஜனல் சர்டிபிகேட்களை தருவதாக அறிவித்தது. அந்த நிறுவனத்தைக் கவனித்துக் கொண்டிருந்தவருக்கு வயது முப்பத்தைந்து இருக்கலாம். நான் என் மாமன் என்று தாடி வைத்த மலையாள நண்பனை அழைத்துக்கொண்டு மறு நாள் சென்றேன். அவனுக்கு ஆங்கிலம் சிறப்பாக வரும். என்னைவிட இரண்டு வயது பெரியவன் என்றாலும் தாடி அவனை கொஞ்சமாய் வயது முதிர்ந்தவனைப் போல காட்டியது. ‘வர்றேன் இரு’ என்று சென்ற நிறுவனத்தை கவனிகும் மனிதர் கொஞ்சம் நேரமாக காணவில்லை ஆபீஸ் அறைக்குள். நானும் என் பொய் மாமனும் தேமே என்று அமர்ந்திருந்தோம்.

பொறுமையிழந்து நான் க்ளாஸ் நடக்கும் ஒவ்வொரு அறையாக பார்வையிட்டுக்கொண்டே சென்றேன். அந்த மனிதன் கம்ப்யூட்டர் கோர்ஸ் நடந்துகொண்டிருக்கும் அறையில் மாணவர்களோடு அமர்ந்து கொண்டிருந்தார். நான் வாயிலில் நின்று ‘கொஞ்சம் எந்திரிச்சு வாங்க நீங்க!’ என்றேன். ஒன்றும் பேசாமல் ஆபீஸ் அறைக்கு வந்தவர் என் ஒரிஜனல் சர்டிபிகேட்களை எடுத்து கையில் கொடுத்தார். அன்றே முடிவெடுத்தேன். இந்தமாதிரி எந்த இடத்திலும் ஒரிஜனல் சர்டிபிகேட்களை கொடுக்கவே போவதில்லை என.

இதில் விசயம் என்னவென்றால் நான்கு சக்கர வாகனப் பணிமனையை நான் ஒருபோதும் சாலையோரத்திலோ, நகரத்திலோ போட முடியாது. அதற்கான தொகையும் என் தந்தையாரிடம் இல்லை. தொழிலை முழுதாக கற்றுக்கொண்டிருந்தால் என்னை ஒரு நிறுவனத்தில் மாதச் சம்பளகாரனாக பார்த்திருப்பார். அதற்கு இரு சக்கர வாகனம் பற்றி நான் கற்றிருந்தால் சாலையோரத்தில் நான்கு ஸ்பேனர், தேய்ப்புக்கட்டை என்று மரத்தடியில்கூட அமர்ந்திருக்கலாம். எல்லாம் போச்சடா நொள்ளக்கண்ணா கதைதான்.

ஊன்றுகோல் என்கிற கையெழுத்துப் பிரதியை 88-ல் கோவையில் நான் ஆரம்பிக்க ஜே.பி.ராஜேந்திரன் என்ற துணையாளர் கிட்டினார். அவரது மரணம் சமீபத்தில் ஆறு மாதம் முன்பாக நடந்துவிட்டது. இரண்டு பெண்களையும் கட்டிக்கொடுத்து ரிட்டயர் ஆகி சொந்த வீடு கட்டி வாழ்ந்தவர். அவரது மரணத்திற்கு நான் செல்கையில் அவரது துணைவியார் ‘வாய்ப்பாடி போகோணும், கோமுவப் பார்த்துட்டு ரெண்டு நாளு இருந்துட்டு வரோணும்னு சொல்லிட்டே இருந்தாருப்பா உங்கொண்ணன்!’ என்றே அழுதார்.

உள்ளூருக்குள்ளும் பக்கத்து ஊர்களுக்குள்ளும் அறிமுகமில்லாதவனான என்னைக் கையெழுத்துப் பிரதி அறிமுகப்படுத்தியது. அதைச் செய்து கொடுத்தவர் ஜே.பி.ராஜேந்திரன். ஆறு மாத காலம் கையெழுத்துப் பிரதியாக இருந்த அந்தப் பத்திரிக்கை சைக்ளோஸ்டைல் என்கிற சுழற்றும் முறையில் நான்கு மாத காலம் வந்து பின்பாக அச்சிலும் வந்தது. ராசமைந்தன் என்கிற புனைப்பெயரை எனக்கு சூட்டி மகிழ்ந்தவர் ஜே பி ஆர். வடமதுரையில் மாலைமுரசு நிருபரை அறிமுகப்படுத்தி வைக்க மாலைமுரசில் 89-களில் பரிசுக்கதை என்று எழுத ஆரம்பித்தேன். மணியார்டரில் பதினைந்து ரூபாய் வந்து சேரும். ஒரு கதையில் காதலனை மலையுச்சியிலிருந்து குதிக்க வைத்து சாகடித்தால் மறு கதையில் காதலியை ஏக்சிடெண்டில் கொன்று கொன்று கதைகளை மாலை முரசில் எழுதி பதினைந்து ரூபாய் சன்மானம் பெற்றுக் கொண்டிருந்தேன். இந்த இடத்திலும் என் தந்தையார் மூக்கை நுழைத்து இலக்கிய வாசிப்பை உருவாக்கி விட்டார். அசோகமித்ரன் அஸ்வகோஸ் என்று படித்து மூளைக்குள் ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்துவிட வந்து கொண்டிருந்த பதினைந்து ரூபாய் சன்மானத்திற்கும் கேடு விளைவித்தார்.

ஊன்றுகோல் பிரதிக்காக சைக்கிளில் றெக்கை கட்டிக்கொண்டு விளம்பரங்கள் வாங்கும் பணியிலிருந்தேன். கால் பக்க அளவுக்கு 25 ரூபாய். அரைப்பக்க அளவுக்கு 50 ரூபாய். பின் அட்டை முன்னூறு ரூபாய். வருமானத்தை வசூலித்து அச்சகத்திற்கு பாக்கித் தொகையை செலுத்திக் கொண்டிருந்தேன். கம்பெனிகளுக்கு சென்று கொண்டிருந்த பெண்கள் பிரதிகளை விற்றுக்கொண்டு வந்து பணம் கொடுப்பார்கள். எல்லா வீடுகளுக்கும் பிரதிகள் கொண்டு செல்கையில் ஜே.பி.ஆர் கூடவே வருவார். இன்னார் பேரன் என்பதை அவர் சொன்னால் அவர்கள் கண்டு கொள்வார்கள்.

இந்த சமயம் அறிமுகமானவள்தான் சுகந்தி. சுகந்தியிடம் எனக்கு காதல் என்று எதுவுமில்லை. ஆனாலும் சுகந்தியிடம் என்மீதான காதல் இருந்திருக்கிறது! அவளது காதலை என்னுள் திணிக்க பல முயற்சிகளை எடுத்துக்கொண்டாள். பின்பாக அந்த வேர் என்னுள்ளும் ஈரம் பிடித்துக்கொண்டது. அவளது பிறந்த நாளுக்கு முன் தினம் பரிசுப் பொருளுடன் மல்லிகைப் பூவையும் வாங்கி வைத்திருந்தேன். என் சூட்கேசை எப்போ நீக்கியது அம்மாயி என்றே தெரியவில்லை. ‘ஏண்டா உன் தங்கச்சிக்கி பூ வாங்கிக் கொடுத்திருப்பியா ஒரு நாளாச்சிம்?’ என்று கேட்டது. நான் பதிலேதும் சொல்லவில்லை.

அடுத்த நாள் புதிய தாவணியில் வேலைக்கு கிளம்பிச் சென்று கொண்டிருந்த சுகந்தியிடம் பரிசுகளைக் கொடுத்தேன். வாங்கியவள் தலையில் உடனே பூவைச் சூடிக் கொண்டாள். “நீங்க வாங்கீட்டு வருவீங்கன்னு தெரியும்!” என்றாள். பின்பாக கால ஓட்டத்தில் ‘வீட்டார் சொல்வதைப் பார்த்தால் எல்லாம் பயமாக இருக்கிறது!’ என்றொரு வார்த்தையைப் போட்டு காதலை முடித்துக்கொண்டாள்.

சென்ற வருடம் என் தம்பி சோட்டாளுகளுடன் சரக்கு வீசிக் கொண்டிருக்கையில் திடீரென அவள் ஞாபகம் வந்துவிட, என் தம்பியிடம் விசாரித்தேன். “இன்னிக்கி அந்தக்கா ரேஞ்சே வேறண்ணா!” என்ற ஒரு நண்பர் அலைபேசி எண்ணைக் கொடுக்க என் அலைபேசியிலிருந்து பேசினேன். சுமாரான போதையில் பார்த்தவுடன் முத்தமிடப் போவதாய் சொன்னேன். நாளை பார்க்க வருவதாய் சொல்லி வைத்தேன். பின்பாக நண்பர் ‘அங்க போக வேண்டாம்ணா! அந்தக்காவை பார்த்துட்டா மறுக்கா பேசவே மாட்டீங்க!’ என்றார். என்ன? என்று கேட்டாலும் அவர்கள் சொல்லவில்லை.

அடுத்த நாள் தம்பியுடன் சுகந்தி வீடு சென்றேன். சுகந்தி நிச்சயமாய் சுகந்தியாக இல்லை. “செவச் செவன்னு இருப்பியே… இதென்ன இப்படி முகம் கறுப்பாகி? ஏன்?’ என்றேன். ப்ரசர்தான் காரணம் என்றாள். ‘முன்னெல்லாம் இப்படி ரொம்ப பேச மாட்டே! இப்போ என்ன சின்னப்பையன் கணக்கா சல சலன்னு பேசுறியே?’ என்றவளுக்கு புன்னகையை பதிலாகத் தந்தேன். அவளது கணவருக்கு ஒரு வணக்கம் வைத்தேன். அவள் என்னை இன்னார் பேரன் என்று அறிமுகம் செய்தாள். பச்சை மிளகாய் காரத்துடன் மோர் குடித்துவிட்டு தம்பியுடன் கிளம்பினேன். மறுமுறை இரண்டு நாட்கள் கழித்து அலைபேசியில் பேசினேன். பின்பாக அந்த அலைபேசி எண்ணை அழித்துவிட்டேன்.

மறுநாள் குடி சந்தோசத்தில் நண்பர்கள் கேட்டார்கள். “அந்தக்கா எப்படி இருந்தாங்கண்ணா?’ என்று. அழகாகத்தான்! என்றேன். “இனிமேல் ஊருக்குப் போனாலும் தொடர்ந்து அந்தக்காட்ட பேசுவீங்களாண்ணா?’ என்றார்கள். “இனிப் பேசி நான் என்ன பண்ணப் போறேன்?’ என்றேன்.

தாடிக்கார கேரள மாமன் சாலையோரத்திலிருந்த முள்ளை வெட்டிக் கொண்டிருக்கையில் என் நண்பரின் தங்கை “பொதுச்சேவையெல்லாம் பலமா செய்யுறீங்க போல!’ என்று பணி முடித்துக்கொண்டு வருகையில் பேசியிருக்கிறது. தாடிக்கார மாமன் குட்டி என்ற பெயருடையவன். அவனுக்குக் காதல் அரும்பிவிட மலையாளத்தில் கவிதை வடித்துக்கொண்டிருந்தான். அந்த லூசுப் பெண்ணும் இவனைத் தேடி அறைவரை வர ஆரம்பித்துவிட்டது. ‘இன்னிக்கி ரூமுக்குள்ளார வச்சு உம்மா குடுத்துட்டே இருந்தேன் கோமு! அப்புடியே பாயில சாய்ச்சுட்டேன். செவப்பு கலர்ல ஜட்டி போட்டிருந்தா கோமு!’ அவன் சொல்லச் சொல்ல அவன் வாயை அடைத்தேன். அந்தக் காதலும் காணாமல் போனது எல்லாக் காதலையும்போல.

ஊன்றுகோல் பத்திரிக்கையை நடத்தத் துவங்குகையில் பேட்டி என்று பஞ்சாயத்து தலைவரிடம் செல்வதும், விளம்பரங்களுக்காக வியாபார நிறுவனங்களிடம் சென்று நிற்பதும், ஐடிஐ மாணவர்களிடம் சென்று பிரச்சனைகள் பற்றிக் கேட்டதுமான நிகழ்வுகள் எல்லாம் மனிதர்களைப் படிப்பதற்கான வாய்ப்புகளாக அமைந்தன என்றேதான் சொல்ல வேண்டும்.

போக பெரியநாயக்கன் பாளையத்தில் திரையரங்கொன்றில் பிட்டுப்படங்கள் காட்டி மனிதர்களை மகிழ்விக்கிறார்கள்! என்கிற செய்தியை அச்சிட்டு வெளியிட்ட சமயம் ‘ரோட்டுல பார்த்துப் போ கோமு! எங்க தியேட்டரைப் பத்தி எழுத உனக்கு எம்புட்டு தைரியம்?னு ஏத்திக் கொன்னுடுவாங்க!’ என்றெல்லாம் உள்ளூர் சனம் சொன்னது. பீளமேடு பஞ்சாலைத் தொழிலாளர்களின் நெஞ்சக் குமுறல்கள் என்றெழுதியதால் அதற்கும் சனம் அப்படியே சொல்லிற்று. இதையெல்லாம் என்ன தைரியத்தில் நான் அப்போது செய்தேன் என்பதுதான் தெரியவில்லை.

வாழ்க்கை உங்களை வாழவே அழைக்கிறது!