(முள்தலை) : தயவு செய்து கண்ணீர் வேண்டாம். அது நல்லதோர் துன்பத்தை வீணாக்கிவிடும் Hellraiser (1987))

சின்னச்சின்ன நிகழ்வுகள் அதுவும் எப்படி என்றால் யாருக்கும் பெரிய தீமையோ அல்லது வலியோ நிகழ்ந்துவிடாத கவன ஈர்த்தல்களாகவே புதிரான நிகழ்வுகள் ஒன்றொன்றாய்த் தொடர்கின்றன. பூஜை ரூமில் சாமி படங்கள் மாட்டுவதற்கு ஆணி அடிக்க முடியாமல் போகிறது. பால் தொடர்ந்து திரிந்து போகிறது. குறிப்பிட்ட தளத்தில் தானியங்கி லிஃப்ட் நிற்பதே இல்லை. இப்படித் தொடரும் புதிர்களை அவிழ்த்துப் பார்க்க விழைகிறான் மனோகர். அவனும் அவன் அண்ணனும் ஆசையாசையாய் வாங்கி குடியேறிய 13B அபார்ட்மெண்ட் ப்ளாட்டில்தான் அத்தனை நிகழ்வுகளும் நடக்கின்றன.

புதிய வீட்டில் டி.வி. கனெக்சன் கொடுத்த தினம் சரியாக ஒரு சேனலில் ‘யாவரும் நலம்’ என்றொரு நாடகம் தொடங்குகிறது. அது ஒரு மெகா சீரியல். அதன் கதை மாந்தர்கள் மனோகர் குடும்பத்தைக் கதையாக்கினாற் போலவே இருப்பதைத் தற்செயலாக கவனிக்கிறான் மனோகர். தொடரும் புதிர்த்தனங்களில் மாபெரும் ஒன்றாக ஒரு கட்டத்தில் நாடகத்தில் நிகழ்வது எல்லாம் அச்சு பிசகாமல் அவர்கள் வாழ்க்கையில் அடுத்த தினங்களில் நடப்பதைக் கண்ணுற்று அதிர்கிறான். மெல்ல மெல்ல நாடகத்தில் யாரெல்லாம் நிசத்தில் யார் அவர்களுக்கு என்ன நடக்கிறது அல்லது நிசத்தில் என்ன நடக்கப் போகிறது என்ற உச்சபட்ச கவனித்தலினூடே தன் நண்பன் இன்ஸ்பெக்டர் சிவா இருவரும் நாட்டின் புகழ்பெற்ற மருத்துவ மேதையும் அவர்களது குடும்ப நண்பருமான டாக்டர் பாலு ப்ரியாவை தக்க சமயத்தில் காப்பாற்றுகிறார்.

நாடகத்துக்கும் அவர்கள் நிச வாழ்க்கைக்குமான தொடர்பு அதிகரித்து நெருக்கமாகிக் கொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் அத்தனை புதிர்களும் திறந்து கொள்ளத் தொடங்குகிறது அப்படி ஒரு நாடகமே உலகத்தில் ஒளிபரப்பாகவில்லை என்பதும் யாவரும் நலம் என்ற தலைப்பில் ஒரு கேம் ஷோ மட்டுமே ஒளிபரப்பாவதையும் அறியும் மனோகர் பயத்தில் உறைகிறான். தொடர்ந்து அகழும் போது நிஜம் வெளிவரத் தொடங்குகிறது. அந்த அபார்ட்மெண்ட் அமைந்திருக்கும் நிலமனையில் 1977 ஆமாண்டு தனி வீடு ஒன்று இருந்திருக்கிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் மனோகர் குடும்பத்துக்கு மட்டும் நாடக ரூபத்தில் வந்து தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நியாயம் கேட்க விழைகிறார்கள் என்பது புரியவருகிறது. டி.வி. செய்தி வாசிப்பாளினி ஒருத்தி மீது தீராக் காதல் கொண்ட செந்தில் என்னும் மனம் பிறழ்ந்தவன் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் கொன்று தீர்க்கிறான். அவனுக்கு மன நோய் என்பது நிரூபணமாகி மனநோயர் காப்பகத்தில் சிறையிடப்பட்டிருக்கிறான் என்பது தெரிகிறது.

நடந்த விபரங்களை அந்தக் கால செய்தித் தாட்களின் மூலம் அறியும் மனோகருக்கு நிஜமாகவே கொன்றவன் செந்தில் அல்ல என்பது தெரியவருகிறது. தன் காதல் நிறைவேறாமற்போனதால் செந்தில் தற்கொலை செய்து கொள்ள அதன் அதிர்ச்சியில் அவனது அண்ணனான டாக்டர் பாலுதான் அத்தனை பேரையும் கொன்றவர் என்பது தெரிகிறது. மனோகர் டாக்டர் பாலுவைக் கொல்கிறான். அத்தனை ஆன்மாக்களும் நிம்மதி அடைகின்றன. மனோகர் ஒரு சாதாரணமான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறான். படத்தின் இறுதியில் மனோகருக்கு லிஃப்டில் பயணிக்கும்போது ஒரு ஃபோன் அழைப்பு வருகிறது. அதில் மறுமுனையில் டாக்டர் பாலு பேசுகிறார். 13பி குடும்பம் டீவீயைக் கைப்பற்றினாற்போல் பாலு செல்ஃபோனைக் கைப்பற்றிவிட்டதாகத் தெரிவிக்கிறார். லிஃப்ட் மிக வேகமாகப் பயணிக்கிறதோடு படம் இருண்டு நிறைகிறது.

பாஸ்கர்ராவ் கதாபாத்திரத்தில் என்.டி.ஆரின் சரிதசினிமாக்களான கதாநாயகடு மற்றும் மகாநாயகடு இரண்டிலும் தோன்றிய மராத்தி நடிகரான சச்சின் கெடேகர் தமிழில் டாக்டர் பாலுவாகத் தன் கணக்கைத் தொடங்கினார். யூகிக்க முடியாத சாந்தமும் க்ரூரமும் கலந்து நடிப்பது மிகப்பெரிய சவால். அதில் நன்கு வென்றார் சச்சின்.

டெக்னிகல் குழுதான் இப்படத்தின் பெரிய பலம். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, ஷங்கர்-எஸான்-லாய் மூவரின் குளிரச்செய்யும் இசை, ஸ்ரீகர்ப்ரசாத்தின் தொகுப்பு என எல்லாமும் நன்றாகப் பலிதமானது. விக்ரம்.கே.குமாரின் இயக்கமும் தெளிந்த நீர் போன்ற திரைக்கதை ஓட்டமும் முன்னர் அறியாத கதை சொல்லல் முறையும் நறுக்குத் தெறித்தார் போன்ற வசனங்களும் மக்களில் அனேகர் நம்ப விரும்புகிற பேய் மறுஜென்மம் கொன்றவனைப் பழிவாங்குவது ஆவியாக அலைவது நியாயம் கேட்பது போன்ற பழைய வஸ்துக்களை எல்லாம் எடுத்து அறிவியலின் சமீப நீர்மம் கொண்டு அலசி அவற்றைப் புதிதாக்கி வழங்கியதன் மூலமாக மட்டுமே மாபெரும் வெற்றிப் படமாக மாற்றினார்.

இந்தி உள்பட அனேக இந்திய மொழிகளிலும் பின்னர் ஆங்கிலத்திலும் படமாக்கப்பட்ட பெருமைக்கு உரியதானது யாவரும் நலம். மாபெரும் ஆரவாரங்கள் பெருங்கூச்சல் திகில் வழியும் ரத்தம் இவை ஏதுமின்றி அறிவுக்கு அருகே நின்றவாறே அழகான ஒரு திகில் படத்தைத் தர முடியும் என்று முதன்முதலில் நிரூபித்துக் காட்டினார். அந்தவகையில் தமிழின் சிறந்த படங்களின் வரிசையில் யாவரும் நலம் எனும் படம் நல்கும் அனுபவத்தைச் சேர்க்கலாம்.

யாவரும் நலம் திகிலாட்டம்.

முந்தைய தொடர்: https://bit.ly/2Y3VjXR